யாழில் சதுரங்க சுற்றுப்போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக யாழ் முதல்வர் அறிவிப்பு


யாழ். மாநகர சபையால் முதல்வர் கிண்ண சதுரங்க சுற்றுப்போட்டி நடத்தப்படவுள்ளதாக மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

எதிர்வரும் 12,13 ஆம் திகதிகளில் காலை 09.00 மணி முதல் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் சதுரங்க சுற்றுப்போட்டிகள் இடம்பெறவுள்ளன. இப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் வீர வீராங்கனைகளிடமிருந்து விண்ணப்படிவங்கள் யாழ். மாநகர சபையால் கோரப்பட்டுள்ளது.

போட்டிகள் அனைத்தும் 5 முதல் 6 வயதிற்குட்பட்டவர்கள், 7 முதல் 8 வயதிற்குட்பட்டவர்கள், 9 முதல் 10 வயதிற்குட்பட்டவர்கள், 11 முதல் 12 வயதிற்குட்பட்டவர்கள், 13 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள், 15 முதல் 16 வயதிற்குட்பட்டவர்கள், 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் என ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி பிரிவுகளாக நடைபெறும்.

எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் மாலை 3.00 மணியளவில் நடைபெறும் பரிசில் வழங்கும் நிகழ்வில் ஒவ்வொரு பிரிவிலும் ஆண், பெண் பிரிவில் முதல் இடத்தினை பெறும் வீர வீராங்கனைகளுக்கு அப் பிரிவிற்கான முதல்வர் கிண்ணம் வழங்கப்படும்.

இரண்டாம், மூன்றாம் இடங்களினைப் பெறும் வீரர்களுக்கு வெற்றிக்கேடயம் வழங்கப்படுவதோடு சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

யாழ். மாவட்ட ரீதியில் நடைபெறும் இப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் வீரர்கள் பாடசாலை ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ விண்ணப்பிக்க முடியும்.

யாழ். மாநகரசபையின் செயலாளர் பகுதி மற்றும் யாழ். மாநகர சபை பொது நூலகம், மற்றும் நல்லூர், வண்ணார்பண்ணை, குருநகர் ஆகிய இடங்களில் உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான நூலகங்களில் விண்ணப்பத்தினை பெற்று பூரணப்படுத்தி நுழைவுக் கட்டணமாக 500 ரூபாவை செலுத்தி எதிரவரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் தமது பதிவினை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

மேலதிக தகவல்களை 021-222 1186, 077-0635012 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தி: பு.கஜிந்தன்

No comments