டென்மார்கில் நினைவேந்தப்பட்ட தமிழ்த் தேசிய மாவீரர் நாள்

டென்மார்க்கில் Sjælland , Jylland   பிராந்தியங்களில்  நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளில் பெருந்திரளான தமிழீழ மக்கள்

உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர். மண்டபம் நிறைந்த மக்களின் நடுவே பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வு  தொடங்கியது.

தொடர்ந்து “ஏறுது பார் கொடி ஏறுது பார் “ என்ற தமிழீழத்தின் கொடிவணக்கப் பாடலுடன் தேசிய கொடி ஏற்றப்பட, அதன் பின் முதல் மாவீரன் சங்கர் வீரச்சாவடைந்த நேரமான 13.35 மணிக்கு ( தாயக நேரம் 6.05) மணி எழுப்பப்பட்டு முதன்மைச் சுடர்“ ஏற்றப்பட்டுத் துயிலும் இல்ல பாடல் ஒலிக்க, மாவீரர்களின் உறவினர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் வணக்கமும் செலுத்தப்பட்டன.

தொடர்ந்து மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவராலும் சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செலுத்தப்பட்ட முதன்மை நிகழ்வுகள் ஒரே ஒழுங்குமுறைகளில்  இரு இடங்களிலும் நடைபெற்றன.

Jyllandஇல் Herning நகரில் தாயக இசையமைப்பாளர் இசைப்பிரியனின் இசையில் “தேசநிலா” இசைக்குழுவினரால் மக்களின் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றவேளையில் மாவீரர் கானங்கள் இசைக்கப்பட்டன.

வணக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து

டென்மார்க் பாராளுமன்ற உறுப்பினர்களான Anette Lind, Krish Jensen Skriver மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் Jakob Sølvhøj ஆகியோரின் உரைகள் இடம் பெற்றன.

தொடர்ந்து  நடன ஆசிரியர்களின்  நெறியாளுகையில் நடனங்கள் மற்றும் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களின் எழுச்சி நடனங்கள், கவிதைகள் மற்றும் தியாக தீபம் அவர்களின் நினைவு சுமந்து “திலீபனின் பன்னிரு நாட்கள்” நாடகமும் சிறப்பாக இடம்பெற்றன.

தாயக ஊடகவியாலர் திரு. கனகரவி அவர்களின்

சிறப்பு உரையைத் தொடர்ந்து செல்வன் அகரன் அவர்கள் வாழிடமொழியில் தனது உரையை  வழங்கியிருந்தார்.

அறிவாடல் ஒருங்கிணைப்புக் குழுவால் இணையவழியில் நடாத்தப்பட்ட அனைத்துலக மாணவர்களுக்கான அறிவாடல் போட்டி 2022ல், டென்மார்க்கிலிருந்து கலந்து கொண்டு, வெற்றியீட்டிய  மாலதி தமிழ்க் கலைக கூட மாணவர்களுக்கான பரிசளிப்பு  வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றன.

இறுதி மேடை நிகழ்வாகத் தற்காலத் தாயகச் சுழலை முன்னிலைப்படுத்தி “நம்பிக்கை “ என்னும் நாடகம் மிகவும் நேர்த்தியாத் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது.

Holbæk நகரில் டென்மார்க் பாராளுமன்ற உறுப்பினர் Søren Søndergård  அவர்களின்  சிறப்புரை இடம் பெற்றது. இவ்வுரையைத் தொடர்ந்து

மாவீரர் கானங்கள், மாவீரர் நடனங்கள், கவிதைகள், காட்சியும் கானமும் சிறப்புரைகள் என நிகழ்வுகள்  மக்களின்  உணர்வெழுச்சியுடன்  நடைபெற்றன. சிறுவர்களும் பெரியோர்களும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியது  தனித்துவமான சிறப்பு எனலாம்.

 இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடலுடன் தேசிய கொடி கையேற்றப்பட்டு “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன்  இரு இடங்களிலும் நிகழ்வுகள்  மக்களின் ஒருங்கிணைந்த எழுச்சியுடன் நிறைவு பெற்றன.

No comments