தெல்லிப்பளை பிள்ளையார் கோவில் குளத்தின் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு விற்பனை


தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் குளத்தின் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு விற்பனை செய்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் வலி.வடக்கு கிராம அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கூறியிருந்தனர் . இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் குளம் தவிசாளர் அனுமதி கொடுக்கப்பட்டு தோண்டி அள்ளப்பட்டு மண் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த நாட்களில் வெளிவந்த பத்திரிகை செய்திகளில் இதற்கான அனுமதி கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

250 லோட் டிப்பர்க்கு மேலாக மண்ணை ஏற்றிச்செல்வதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பாக செயலகத்தின் செயலாளரைத் தொடர்பு கொண்ட போது அது விவசாய திணைக்களத்திற்குரியது அவருடன் தான் கதைக்க வேண்டும் என்று சாட்டு சொல்லியிருந்தார். அத்துடன் தான் இதைப்பார்த்துக் கொள்வதாக அங்கு சென்று அந்த மண் ஏற்றிய வாகனத்தை பொலிஸில் ஒப்படைக்காமல் வெளியில் விடுவதற்கு அவசியம் என்ன? அதனால் இவருக்கும் இதில் பங்கு இருப்பது தான் உண்மை.

அழிக்கப்பட்ட இந்த குளத்தை வந்து பாருங்கள், இந்த மண்ணிற்காக எமது கல்வியை இழந்தோம், எங்கள் இளமையினை இழந்தோம். ஆனால் இந்த மண்ணை ஒரு வியாபாரமாக செய்த தவிசாளருடன் சேர்ந்த கூட்டத்தவர்களை உடனடியாக இதற்குரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது அரசியல் இல்லை. இது எங்களுடைய மண் இந்த செயற்பாடானது மிகவும் மன வேதனைக்குரியதாகும் . இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச அதிபர், ஆணையாளர்கள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக கமநல சேவை பிரதி ஆணையாளர் வலுவாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரச அதிபர் இந்த பிரதேச செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் , தவிசாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தி பார்ப்போம். இல்லையெனில் போராட்டம் ஒன்றினை முன்னெடுப்போம் - என்றனர்.

செய்தி:பு.கஜிந்தன்

No comments