காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது?இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக வழங்கிய சாட்சியம் அதிர்ச்சியை தந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலறியும் ஆணைக் குழுவிடம் முன்வைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரது மேன்முறையீடு ஒன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் சாட்சியம் வழங்கியுள்ளது.

‘யுத்த பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் புலிகளா? பொதுமக்களா? என்பது எமக்கு தெரியாது. நாம் பொறுப்பேற்று கொண்டபோது பதிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. எம்மிடம் வந்தவர்களை பஸ்களில் ஏற்றி புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் கட்டுப்பாடுகளில் இருந்த முகாம்களில் சேர்த்தோம். அதன் பின்னர் புனர்வாழ்வு பணியகமே அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர் எனவும் இராணுவம் சாட்சியம் வழங்கியுள்ளது. 

ஆனால், மேன்முறையீடு தொடர்பில் ஆணைக்குழுவில் முன்னிலையான சட்டத்தரணி இதனை மறுத்ததோடு இராணுவத்திடம் புலிகள் சரணடைந்தமைக்கான ஆதாரங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தார். மேலும், புனர்வாழ்வு பணியகத்திடம் இராணுவத்தினம் கூறும் தகவல்கள் இல்லை என, புனர்வாழ்வு பணியகம் வழங்கியுள்ள தகவல்களையும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். 

புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமைக்கான எழுத்துமூல சமர்ப்பணங்களை 10 நாட்களுக்கு இராணுவத்துக்கு விண்ணப்பதாரர் வழங்க வேண்டும். அதேபோல இராணுவமும் எழுத்துமூல சமர்ப்பணங்களை விண்ணப்பதாரருக்கு வழங்கவும் ஆணைக்குழு உத்தரவிட்டது. எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி மனு மீள ஆணைக்குழு முன்பாக விசாரிக்கப்பட உள்ளது.

இந்நிலையிலேயே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் இராணுவத்தினரின் கூற்றிற்கு அதிர்;ச்சி தெரிவித்துள்ளன.

வவுனியாவிலுள்ள இடைத்தங்கள் முகாம்களிற்கு முள்ளிவாய்க்காலில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பதிவுக்குள்ளாக்கப்பட்டனர்.

எனினும் இடைத்தங்கல் முகாம்களிலிருந்தும் ஆயிரக்கணக்கில் பின்னர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியாவதை தடுக்கவே பதிவுகள் முன்னெடுக்கப்படவில்லையென இராணுவம் மறுதலிப்பதாகவும் குடும்பங்கள் தெரிவித்துள்ளன.


No comments