யாழில் நடைபெற்ற வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்

இலங்கை அரசின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்த

ஆர்ப்பாட்டம் காலை தெல்லிப்பழை சந்தியில் ஆரம்பமானது.

மாணவர்களது கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து இணைந்தன.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை சந்தியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள  காணி சுவீகரிப்பிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கம், சிவகுருஆதினம், வலி வடக்கு மீள்குடியேற்ற குழு, யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம், வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம், தீவக விருட்சம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ,குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஆகிய சிவிலமைப்புக்கள் ஆதரவளித்து பங்கெடுத்திருந்தன.

போர்ட்டக்காரர்கள் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்னால் வீதியில் அமர்ந்திருந்து வீதிமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் பிரதேச செயலக வளாகத்தினுள் நுழைந்து முற்றுகை போராட்டம் செய்தனர்.

போராட்டக்காரர்கள் "இந்த மண் எங்களின் சொந்தமண், எமது நிலம் எமக்கு வேண்டும், எமது கடல் எமக்கு வேண்டும், இராணுவமே வெளியேறு, கடற்படையே வெளியேறு, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்" என கோசமிட்டவாறு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் முடிவில் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் , யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூகமட்ட அமைப்புக்கள் பொதுமக்கள் மற்றும் காணியின் உரிமையாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

யாழ் மாவட்டத்தில் 3427 ஏக்கர் நிலம் இராணுவம் மற்றும் ஏனைய படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக வலி வடக்கில் 2467 ஏக்கர் நிலம் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

அவை அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும். மேலும் காணி அமைச்சினுடைய மேலதிக செயலாளர் தெல்லிப்பளை பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலே 1674 ஏக்கர் நிலத்தை சுவீகரிப்பதற்கு உத்தரவு இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments