மீனவ பிரதிநிதிகளை மிரட்டினாரா டக்ளஸ்?
டக்ளஸ் அன் கோவின் கடலட்டை பண்ணைகளை தன்னிச்சையாக விற்றுத்தீர்த்தமையை கேள்விக்குள்ளாக்கிய மீனவ பிரதிநிதிகளை எச்சரித்துள்ளார் அமைச்சர் டக்ளஸ். 

அதேவேளை தன்னிச்சையாக அமைக்கப்பட்டுள்ள பட்டி வலை, கடலட்டைப் பண்ணைகள் போன்ற அனைத்தும் அகற்றப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத கடலட்டை பண்ணை தொடர்பில் மீனவ அமைப்புக்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு சிக்கலை உருவாக்கியதையடுத்தே டக்ளஸ் தொலைபேசி வழி மீனவ பிரதிநிதிகளை எச்சரித்துள்ளார்.

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகள் தொடர்பாக சிலரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விசாரணை சில விடயங்களை தனக்கு உணர்த்தியுள்ளதாகவும், 

உரிய அனுமதிகளை பெற்றுக் கொள்வதற்கு எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாது, இலங்கை கடல் பரப்பில் தன்னிச்சையாக அமைக்கப்பட்டுள்ள பட்டி வலைகள், கடலட்டைப் பண்ணைகள் போன்ற அனைத்தும் அகற்றப்பட்டு, அனைத்து தொழில் செயற்பாடுகளையும் உரிய நியமங்களுக்கு அமைய ஒழுங்குபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 400 கடலட்டைப் பண்ணைகள் இருக்கின்ற போதிலும், இரண்டு பண்ணைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக நக்டா அதிகாரி தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

குறித்த செய்தி தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரியுடன் கலந்துரையாடியதாகவும், முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட கிராஞ்சி பகுதியில் எத்தனை பண்ணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது? - என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாகவே இரண்டு பண்ணைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக பதில் அளித்ததாகவும்,

கிளிநொச்சி மாவட்டம் தொடர்பாக எந்தவிதமான கேள்விகளும் கேட்கப்படவில்லை என்பதை, குறித்த அதிகாரி தனக்கு தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர், விசாரணை செயற்பாட்டை சரியாக கிரகிக்காத சிலரினால் பொறுப்பற்ற முறையில் தவறான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாகவே தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். 


No comments