ஊழல் ஒழிப்பு சட்டமூலம் : சட்டமா அதிபருக்கு!




ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஊடாக, தேவையான சந்தர்ப்பங்களில் விசாரணைகளுக்காக கைது செய்ய சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே திலினி பிரியமாலிக்கு பணம் கொடுத்தவர்கள் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் போலி பெயர் பட்டியலை உருவாக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பியுமான உதய கம்மன்பில கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சீ.ஐ.டி)  முறைப்பாடு செய்தார்.

சமூக வலைத்தள்களில் பரப்பப்பட்டு வரும் குறித்த போலிப் பெயர் பட்டியலில் தனது பெயரும் உள்ளடங்குவதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

அந்தப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள எம்.பிக்களான தயாசிறி ஜயசேகர, சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே மற்றும் தான் ஆகிய நால்வருமே கடந்த காலங்களில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர்கள் என்றும்  சுட்டிக்காட்டினார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் ஒருவரும் பிரபல கலைஞரும் இணைந்து இந்த பட்டியலை தயாரித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தனக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நன்றாகத் தேர்ச்சி பெற்ற தேர்தல் காலத்தில் நன்றாகச் செலவு செய்யும் திருடர்களின் பெயர்கள் அதில் குறிப்பிடப்படவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான அனைத்து தகவல்களையும் தாம் எழுத்து மூலம் பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாகவும் கம்மன்பில தெரிவித்தார்.

உலக வர்த்தக மையத்தின் 34ஆவது மாடியில் அலுவலகம் நடத்தி, கோடிக்கணக்கான ரூபாயை முதலீடுகளாகப் பெற்ற மோசடி தொடர்பில், திலினி பிரியமாலி சீ.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments