ரணிலும் சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஆதரவு! ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் தீர்மானமெடுக்க முடியாவிட்டால். நான் எந்த முறை சிறந்தது என்று மக்களின் கருத்துகளைப் பெற சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவேன்.

தேர்தல் முறை தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை முன்மொழிவதாகவும், அந்த தெரிவுக்குழு, அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள் தீர்மானம் எடுக்காவிட்டால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தற்போதுள்ள அரசியல் முறைமையினை நிராகரிப்பதால், அவர்கள் விரும்பிய அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதன்படி, அடுத்த தேர்தலுக்கு முன், உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாக குறைக்கப்படும்.


அத்துடன், பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரம் தவிசாளர் என்ற ஒற்றைத் தலைவருக்குச் செல்வதற்குப் பதிலாக தவிசாளர் தலைமையிலான குழுவுக்கு வழங்கப்பட வேண்டும். அடுத்த பிரதேச சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு சட்ட வரைவு தயாரிக்கப்படும்


அரசியலில் ஊழல் தலைதூக்க முக்கிய காரணம் விருப்பு வாக்கு முறைமையாகும். உடனடியாக விருப்பு வாக்கு முறையற்ற பட்டியல் முறை அல்லது கலப்பு முறை ஒன்றை கொண்ட தேர்தல் முறைமைக்கு செல்ல வேண்டும். தேர்தலில் செலவிடப்படும் நிதிக்கும் தேர்தல் சட்டம் மூலம் வரையறைகள் இடப்பட வேண்டும்.


தற்போது நாட்டில் இரண்டு பிரதான பிரச்சினைகள் உள்ளன. ஒன்று பொருளாதாரத்தின் வீழ்ச்சி. இரண்டாவது, நாட்டின் பெரும்பான்மையான மக்களால் இந்த நாட்டின் அரசியல் முறைமை நிராகரிக்கப்பட்டுள்ளமை ஆகும். மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை சிந்தித்து அதன்படி செயல்பட வேண்டும். நாம் பாராளுமன்ற தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானிப்பதற்கு தெரிவுக்குழுவொன்றை முன்மொழிய இருக்கிறோம். ஏனெனில் ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் தீர்மானமெடுக்க முடியாவிட்டால். நான் எந்த முறை சிறந்தது என்று மக்களின் கருத்துகளைப் பெற சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவேன்.


இதுபற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும். கலந்துரையாடி பொருத்தமான ஒரு முறை தெரிவு செய்யப்படும். எனவே பாராளுமன்ற தெரிவுக் குழு அது தொடர்பான செயற்பாடுகளை நிறைவு செய்ய வேண்டும். இல்லையெனில் நான் இது தொடர்பான பொறுப்பை மக்களிடம் வழங்குவேன். எனவே நாம் இதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments