டக்ளஸ்டமிருந்து நீதி?



இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பங்காளிகளால் சுரண்டப்படுவதாக குற்றஞ்சுமத்தும் கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி இலவன்குடா மீனவர்கள் நீதி கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலக படியேறியுள்ளனர்.

தமது பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்படும், கடலட்டை பண்ணை விவகாரம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் அவர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கடலட்டை பண்ணைகளால், தமது தொழில் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்திற்கே பெரும் துன்பங்களை எதிர்நோக்கி வருவதாகவும், தமக்கான நீதியை வழங்க வேண்டும் எனவும் கோரி, மக்கள், தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 4 ஆம் திகதி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிரிந்திய அலுவலகத்தில், மக்கள், தமது முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.

அதற்கமைய, நீரியல் வள திணைக்கள அதிகாரியையும் முறைப்பாட்டாளர்களையும் அழைத்து, மனித உரிமைகள் ஆணைக்குழு, இன்று, விசாரணைகளை நடத்தியுள்ளது.

வாழ்வாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உள்ளுர் மீனவர்களாகிய தம்மை, எவரும் கண்டு கொள்வதில்லை என ஆதங்கம் வெளியிட்டுள்ள அவர்கள், தமக்கான நீதியை பெற்றுத்தர, அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டுமென யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.


No comments