டக்ளஸ் :வேட்டி பத்திரம்!கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களது வாழ்வாதார தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை.

இதுதொடர்பாக அமைச்சருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில்,

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இலவன்குடா கிராஞ்சி பிரதேசத்தை சேர்ந்த மீனவ சமூகங்கள், அப்பகுதியில் கடந்த பல நாட்களாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகளால் சிறு மீன்பிடிக் கரையோர தொழிலாளர்களாகிய தமது பாரம்பரிய மீன்பிடி தொழிலை முன்னெடுப்பதில் தடைகள் இருப்பதாக தெரிவித்து கடந்த 13 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலவன்குடா கிராஞ்சி கடற்கரையோரம் முழுவதும் சட்டவிரோதமாக கடல் அட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றினை பொறுப்பு வாய்ந்த அரசஅதிகாரிகள், திணைக்களங்கள் எவையும் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இலவன் குடா கடற்பரப்பில், 60 வரையான பெண் தலைமைத்துவ அங்கத்தவர் உட்பட 25க்கு மேற்பட்ட கடற்தொழிலாளர் குடும்பங்கள் சிறகு வலை தொழிலின் ஊடாக இறால், நண்டு,மீன்பிடித்தலை தமது அன்றாட வாழ்வாதார தொழிலாக கடந்த 45 வருடங்களுக்கு மேலாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தற்போது கடலட்டை பண்ணைகள் அமைக்கும் முயற்சிகள் அங்கு இடம்பெறுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அத்துடன் தற்போது கடல் அட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கடற்தாவரங்கள் அதிகம் காணப்படுகின்றமையால் அவ்விடங்களில் மீன் இனங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக காணப்படுகிறது. அவ்விடங்களில் பண்ணைகள் அமைக்கப்பட்டதால் மீன் இனங்களுக்கும் கரைக்குமான தொடர்பு தடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் வெளிச்சமுள்ள மின்விளக்குகள் காரணமாக மீன்கள் கரையை நோக்கி உணவு தேடி வரமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

பாரம்பரிய மீன்பிடித் தொழில் புரியும் இடங்களில் பண்ணைகள் சட்டவிரோதமாக அமைக்கப்படுவதுடன், படகுகள் சிறுவள்ளங்கள் சென்றுவரும் தரித்து நிற்கும் துறைமுகப்பகுதிக்குள்ளும் அட்டைப்பண்ணை அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது ஆதங்கங்களை பின்வருமாறு தெரிவிக்கின்றனர்.

• குறித்த பண்ணைகள் அமைக்கப்படுவதற்காக பாரம்பிய தொழில்கள் புரியாத இடங்கள் இருந்தும் நாம் தொழில் புரியும் பகுதிகளிலும் துறைமுகங்களிலும் பண்ணை அமைந்திருப்பது எந்த வகையில் நியாயமானது? 

• குறித்த பண்ணைகளானது ஆரம்பிக்கும்போது பாரம்பரிய தொழில்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படும் வகையில் அமையாது என கூறப்பட்டதற்கு மாறாக அமைக்கப்படுகின்றது. இரவோடு இரவாக அத்துமீறி பாரம்பரிய மீன்பிடி புரியும் இடங்களில் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருசில முதலாளிகளின் நலனுக்காக ஒட்டுமொத்த மீனவர் சமூகத்தையும் சுடுகாட்டிற்கு அனுப்புகின்ற செயலாகவே கருதுகின்றோம்.

• இவ் மனச்சாட்சியற்ற செயலுக்கு பாராமுகம் காட்டும் அமைப்புக்களிடமிருந்து எமக்கு நீதி கிடைக்காமைக்கான காரணம் என்ன? ஏழைகள் கடலுக்குள் இறங்கக்கூடாதா? நாம் எந்த வகையில் எமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வது? 

• இது தொடர்பாக நியாயம் கேட்ட மீனவர்கள் ஒருசிலர் மீது நீரியல் வளத்துறையினரால் பொய்யான முறைப்பாடுகளைக் கொண்டு சிறகுவலை முறைமையானது சட்டவிரோதமான தொழில் என அதிகாரியால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

• இவ்வாறு பொய்யான முறைப்பாடுகளை முன்வைத்து பாரம்பரிய தொழில் புரியும் இடங்களை விட்டு எம்மை அகற்ற நினைக்கின்றனர். எமது வாழ்வாதாரத்தை பறித்து இன்னொருவருக்கு வாழ்வளிப்பது நியாயமானதா?

என பாதிக்கப்பட்ட கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி பிரதேச மீனவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

மேலும் கடல் அட்டை பண்ணைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தமது எதிர்ப்பை இப்பகுதி மக்கள் வெளிப்படுத்தியபோது, அவர்களது வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பண்ணைகள் அமைக்கப்படும் என சமரச உத்தரவாதம் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகளால் தமக்கு வழங்கப்பட்டதாகவும், அந்த உத்தரவாதத்தை மீறும் வகையில் தமது வாழ்வாதார தொழில்செய்யும் பகுதிகளை ஆக்கிரமித்தும் தற்போது பண்ணைகள் அமைக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் தமது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 

இது தொடர்பாக கடற்றொழிலாளர் சங்கம், கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம், பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் காரியாலயம் ஆகிய தரப்புகளுக்கு பலமுறை கடிதம் மூலமாக மக்கள் அறிவித்திருந்த போதும் சரியான தீர்வு கிடைக்கப்பெறவில்லை என ஆதங்கப்பட்டுள்ளனர். இவ்விடயங்கள் அனைத்தும் கௌரவ கடற்றொழில் அமைச்சர் என்கிற அடிப்படையில் தங்களது கவனத்து கொண்டுவரப்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

வணிகசார் நிறுவனங்களை அமைக்கும்போது, அச்சூழலில் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்டுள்ள சிறு தொழிலாளர்கள் பாதிப்படையக்கூடாது என்பதே அபிவிருத்தியின் அடிப்படை தத்துவமாகும். அந்த தத்துவம் இவ்விடயத்தில் மீறப்படுமாயின் அது மிகவும் கவலைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமான விடயமாகும்.

நாட்டின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்காக கடல் அட்டைப் பண்ணைகள் போன்ற புதிய தொழிற்துறை முயற்சிகள் நடைபெறுவதும் அதனூடான அந்நிய செலவாணி வருகையும் அவசியமானதாக உணரப்பட்டாலும், அச்செயற்பாடுகள் சாதாரண மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல்களாக அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறித்த பிரதேச மக்கள் கேட்டுக் கொள்வதற்கமைய தமது மீன்பிடி செயற்பாட்டு பகுதிகளை விடுத்து ஏனைய இடங்களில் இத்தகைய பண்ணைகளை அமைப்பது பொருத்தமானதும் வரவேற்கத்தக்க விடயமாகவும் அமையும்.

மாறாக, இலவன்குடாகிராஞ்சி பிரதேசத்து மக்களுக்கு இயற்கை கொடுத்துள்ள கடல்வளத்தை குறிப்பிட்ட சிலர் மாத்திரம் சூறையாடி பயன்படுத்தி அதனூடான பலாபலன்களை பெற்றுச் செல்வதும் அதற்கு அரச அதிகாரிகள், திணைக்கள அதிகாரிகள் துணைநிற்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்துடன் நாட்டின் கடற்றொழில் அமைச்சராக விளங்கும் தாங்கள், இத்தகைய வாழ்வாதார மீனவர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதும் மக்களுடையதும் எனதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே தமது வாழ்வாதார கடல்வளத்தை மீட்பதற்காக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி பிரதேச மீனவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்து உடனடி நடவடிக்கை எடுத்து, அங்கு அமைக்கப்படும் சட்டவிரோத கடல் அட்டை பண்ணைகளை தடைசெய்து குறித்த மக்களுக்கு நீதி வழங்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

என குறிப்பிட்டுள்ளார்.


No comments