கல்லா கட்டும் அமைச்சர்கள்:திக்கத்தை தரமுடியாது!
டக்ளஸ் தலைமையில் தாரை வார்க்கப்படவுள்ள வடமராட்சி திக்கம் வடிசாலையை, ஒருபோதும் தனியார் மயப்படுத்த அனுமதிக்க முடியாது எனவும், பழுதடைந்த உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை புதிதாக கொள்வனவு செய்ய, முழுமையான நிதியை தாம் வழங்குவதாகவும், பனைசார் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று, திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்குவது தொடர்பில், பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், இவ்வாறு குறிப்பிட்டனர்.
திக்கம் வடிசாலையை, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக செயற்படுத்த, அரசியல் காரணங்கள் தடையாக இருந்தமையால், அங்கிருந்த பல கோடி ரூபா பெறுமதியான பனம் சாராயம் உற்பத்தி செய்யும் உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாகவும், அதனை மீள இயக்குவதற்கு, தனியார் ஒருவரிடம் வழங்குவது தொடர்பாகவும், பருத்தித்துறை பிரதேச செயலகத்தில், கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது, தனியாருக்கு, ஒருபோதும் வடமராட்சி திக்கம் வடிசாலையை வழங்க முடியாது என, வடக்கு மாகணம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு உட்பட்ட பனை தென்னை வள உற்பத்தியாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது, கொழும்பில், இது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு, இன்று தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, பனை அபிவிருத்தி சபை தலைவர் கிரிசாந்த பத்திராஜா, யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆ.சிறி, வடக்கு மாகணம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு உட்பட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், சம்மேளன பிரதிநிதிகள், அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment