கைது பயம், மன அழுத்தம்: மலேசியாவில் நிர்கதி நிலையில் அகதிகள்

 


உலக மனநல தினம் அக்டோபர் 10ம் திகதி கடைப்பிடிக்கப்பட இருக்கக்கூடிய நிலையில், மலேசியாவில் உள்ள அகதிகளிடையே மன நலச் சிக்கல்கள் மிகவும் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

மன அழுத்தம், பதட்டம், அதிர்ச்சிகரமான சம்பவத்துக்கு பிறகான மன சீர்குலைவு, மற்றும் சிக்கலான மனக்கவலை உள்ளிட்ட மனநலச் சிக்கல்களை 43 சதவீதத்துக்கும் அதிகமான அகதிகள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் பர்மிய புலம்பெயர் சமூகத்தினரிடையே மட்டும் 19 தற்கொலைகளை குறித்து தான் அறிந்துள்ளதாகக் கூறுகிறார் சின் அகதிகள் கூட்டணியின் தலைவரான சலாய் மெளங். 

“மலேசியாவில் உள்ள அனைவரும் போலவே, கொரோனா கால கட்டுப்பாடுகளால் அகதிகளாலும் வேலைக்கு செல்ல முடியவில்லை. சில உண்பதற்கு உணவு கூட இல்லை, அத்துடன் கொரோனா தொற்று அச்சத்தில் இருந்தனர். அகதிகளாக இருப்பதால் ஒவ்வொரு நாளும் அச்சத்துடனே இருக்கிறோம்,” என்கிறார் சலாய் மெளங். ஆவணங்களின்றி புலம்பெயர்ந்த பலர் ஐ.நா.அகதிகள் முகமையிடம் பதிய காத்திருப்பதால், தாங்கள் எந்நேரம் கைதுக்கு உள்ளாகி நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ளதாக அவர் கூறுகிறார்.  

Health Equity Initiatives (HEI) எனும் மன நல உதவி வழங்கும் தொண்டு நிறுவனத்தின் மருத்துவர் ஷருனாவின் கூற்றுப்படி, மலேசியாவுக்கு புலம்பெயர்வு மற்றும் நல்ல அமலாக்கம் குறித்த நல்ல கொள்கைகள் தேவைப்படுகிறது. இது மலேசியாவுக்குள் ஆவணங்களற்ற குடியேற்ற பிரச்சினையை தீர்க்க உதவும் என்கிறார்.  

கடந்த டிசம்பர் 2020 கணக்குப்படி, மலேசியாவில் உள்ள ஐ.நா.அகதிகள் முகமையிடம் பதிந்துள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை 178,140 ஆகும். 

No comments