கிளிநொச்சி மாவட்டத்தில் இரு அட்டைப் பண்ணைகளுக்கு மட்டுமே அனுமதி


கிளிநொச்சி  மாவட்டத்தில் இரு கடல் அட்டை பண்ணைகளுக்கு மட்டுமே  அனுமதி வழங்கியதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி நேற்றைய தினம் புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் வாக்குமூலம் வழங்கியதாக யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் சம்மேளனங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இலவங்குடா மீனவர்கள் சார்பில் தமது கடற் பகுதியைப் பாதிக்கும் அட்டைப் பண்ணைகளை தடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தி அலுவலகத்தில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் புதன் கிழமை முறைப்பட்டாளர்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் விசாரணைக்காக யாழில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் விசாரணை இடம்பெற்றது.

குறித்த விசாரணை முடிவுற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களில் சம்மேளனத்  தலைவர் அன்னராசா இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

கிளிநொச்சி  மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கடல் அட்ட பண்ணை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு கேள்வி எழுப்பிய நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரி தாம் இரண்டு பண்ணைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியதாக தெரிவித்தார்.

இவரின் கருத்தில் இருந்து இலவாங்குடா மீனவர்களின் போராட்டம்  நீதிக்கான ஜனநாயகப் போராட்டம் என்பதை நிரூபித்திருக்கிறது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற சட்ட விரோத கடல் அட்ட பண்ணை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்து வருகின்ற நடவடிக்கை எமக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது.

ஆகவே மக்களின் வாழ்வாதாரத்தை அளிக்கின்ற அனுமதியற்ற சட்டவிரோத கடல் அட்டை பண்ணைகளை அகற்றும் வரை எமது போராட்டம் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார். (க)

No comments