ஜெனிவா விவகாரம்: அலி சப்றியின் விசுவாச அரசியலும், ரணிலின் அசாதாரண மௌனமும்! பனங்காட்டான்


50:1 இலக்கத் தீர்மானம் ஜெனிவாவில் 17 மேலதிக வாக்குகளால் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாhல், போர்க்குற்றம் புரிந்த படைத்தரப்பினரை நாட்டுக்கு வெளியே சட்டத்துக்குட்படுத்த இத்தீர்மானம் வாய்ப்பளிப்பதால், தமது எஜமானரான ராஜபக்சக்களை காப்பாற்றுவதற்காக விசுவாச அரசியலை அமைச்சர் அலி சப்றி மேற்கொண்டு வருகிறார். ஆனால், நாட்டின் ஜனாதிபதி ரணில் ஜெனிவா பற்றி எதுவும் அறியாதவர் போன்று அசாதாரண மௌனம் சாதித்து வருகிறார்.

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 50வது அமர்வின் முதலாம் திருவிழா முடிவடைந்து விட்டது. எதிர்பார்க்கப்பட்ட இலங்கை மீதான தீர்மானம், எதிர்பார்த்ததிலும் பார்க்கக் குறைவான - 13 மேலதிக வாக்குகளால் மட்டும் நிறைவேறியுள்ளது. இந்தப் பதின்மூன்று என்ற இலக்கம் எல்லாவற்றிலும் ஏதோவொரு வகையில் தலையைக் காட்டிக் கொண்டே வருகிறது. 

இலங்கைக்கு எப்போதும் உதவிவரும் பிரித்தானியா தலைமையில் அமெரிக்கா உட்பட ஏழு நாடுகளின் அனுசரணையில் இத்தீர்மானம் வரையப்பட்டு, இரு தடவைகள் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் இறுதி வரைபு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மொத்தம் 193 நாடுகளில், ஐந்து பிராந்தியங்களின் வழியாக தெரிவு செய்யப்பட்ட 47 நாடுகளுக்கே இங்கு வாக்களிப்புத் தகுதியுண்டு. 

193 நாடுகளில் 37 நாடுகள் தீர்மானத்துக்கு இணைஅனுசரணை வழங்கியதை இங்கு குறிப்பிட வேண்டும். இந்த மாதம் 6ம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது 47 நாடுகளில் 20 தீர்மானத்தை ஆதரிக்க, ஏழு நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 20 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனை மத்தியஸ்தம், நடுநிலை என்று விருப்புக்கேற்றவாறு கூறிக்கொள்ளலாம். 

தீர்மானம் பேரவையில் முன்வைக்கப்படுவதற்கு முன்னரேயே, இதனைத் தங்களால் தோற்கடிக்க முடியாதென்பது இலங்கைக்குத் தெரியும். தீர்மானம் வென்றாலும் சரி, தோற்றாலும் சரி இதனைத் தாங்கள் ஏற்கப் போவதில்லையென்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி கடந்த மாத ஆரம்பத்தில் பிரகடனம் செய்ததினூடாக இதனை அறிய முடிந்தது. 

இருப்பினும், தோற்கடிக்கும் நப்பாசை காரணமாக இறுதிவரை தங்களின் நட்பு நாடுகளை நாடி இலங்கை ஆதரவு கேட்டது. ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ.சந்திரப்பெரும வாக்கெடுப்புக்கு முதல் நாளான ஐந்தாம் திகதி அங்கத்துவ நாடுகளின் உறுப்பினர்களைச் சந்தித்து ஆதரவு கேட்ட பின்னர் தெரிவித்த கருத்து இலங்கையின் இயலாமையை வெளிப்படுத்தியது. 

2012ம் ஆண்டில் முதன்முறையாக இலங்கை மீதான தீர்மானம் ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டபோது 47ல் 15 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக - அதாவது தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. 2013ல் இந்த எண்ணிக்கை 13 ஆகி, 2014ல் 12 ஆகி, 2021ல் 10 ஆகி, இம்முறை 7 ஆகியுள்ளது. 

அதேசமயம், தீர்மானத்துக்கு ஆதரவான வாக்குகளும் இறங்குமுகமாகிக் கொண்டே வந்தன. 2012ல் 24 நாடுகள் ஆதரித்தன. 2013ல் இது 25ஆக அதிகரித்ததாயினும், அதன் பின்னர் 2014ல் 23 ஆகவும், 2021ல் 22 ஆகவும் இறங்கி, இம்முறை 20 ஆகியுள்ளது. மறுபுறத்தில், வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நாடுகளின் எண்ணிக்கை மேலோங்கி வருகிறது. இம்முறை இந்தியா, ஜப்பான், நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, குவைத், கட்டார், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் உட்பட 20 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. 

ஐந்து பிராந்தியங்களிலிருந்தும் உறுப்புரிமை பெறும் நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை மாற்றம் பெறுவதால், அந்தந்த நாடுகளின்  ஆட்சியாளர்களது அரசியல் கொள்கைகளுக்கேற்ப வாக்களிப்பு எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்கள் இடம்பெறுவதை இந்த மாற்றத்தினூடாக காணமுடிகிறது. 

2014இலும் 2021இலும் தீர்மானத்தை ஆதரித்த நாடுகளின் எண்ணிக்கை முறையே 23ஆகவும் 22ஆகவும் இருந்ததை வைத்து, இலங்கை அரசு தப்புக்கணக்கொன்றை முன்வைத்தது. அதாவது இவ்விரு ஆண்டுகளிலும் எதிர்த்தும், வாக்களிப்பைத் தவிர்த்தும் அடையாளப்படுத்திய நாடுகளின் கூட்டு எண்ணிக்கை, ஆதரித்த எண்ணிக்கையைவிட கூடுதலாக இருந்ததை வைத்து, தீர்மானத்தை ஆதரிக்காத நாடுகளே அதிகமென்று அன்றைய அமைச்சர்கள் ஜி.எல்.பீரிசும், தினேஸ் குணவர்த்தனவும் அறிவித்து அப்பாவி சிங்கள மக்களின் தலையை சுற்றினார்கள். நல்லவேளை இம்முறை அவ்வாறான கணக்கை அலி சப்றி இதுவரை காட்டவில்லை. 

ஜெனிவாவின் நிரந்தரப் பிரதிநிதி சந்திரப்பெரும தனது பணிகளை நேர்த்தியாக மேற்கொள்ளவில்லை என்ற காரணத்தால் உடனடி மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், இவரது இடத்துக்கு நேபாளத்திலுள்ள இலங்கைத் தூதுவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள 50:1 தீர்மானம் எல்லாமாக 19 அம்சங்களை உள்ளடக்கியது. இவற்றுள் அநேகமானவை 30:1, 40:1 இலக்கத் தீர்மானங்களை வலியுறுத்துபவை. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், உண்மையைக் கண்டறிதல் என்று இதற்கு பொதுத் தலைப்பு இடப்பட்டுள்ளது. 

50:1 தீர்மானமானது மனித உரிமைப் பேரவை ஆணையாளராகவிருந்த பச்சிலற் அம்மையார் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுட்டிவந்த ஒரு விடயத்துக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளது. அது போர்க்குற்றத்துக்கான பொறுப்புக்கூறல் விசாரணை. அத்துடன், கோதபாய ராஜபக்ச ஆட்சிக்கால பொருளாதாரக் குற்றத்துக்கும் (ஊழல், மோசடி) விசாரணை கோருகின்றது. 

நிறைவேற்றப்பட்டுள்ள 19 தீர்மானங்களில் எட்டாம் இலக்கத் தீர்மானத்தை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாதென்று அமைச்சர் அலி சப்றி மீண்டும் மீண்டும் பல தடவை வலியுறுத்திக் கூறியுள்ளார். அந்தத் தீர்மான வாசகம் பின்வருமாறு அமைந்துள்ளது: 'பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் நோக்கத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள், துஸ்;பிரயோகங்கள் சம்பந்தமான குற்றங்களுக்குரிய ஆதாரங்களைச் சேகரித்தல், பாதுகாத்தல், பகுப்பாய்வு செய்தல் என்பவற்றோடு சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் கடுமையான மீறல்களுக்கு பேரவையின் உறுப்பு நாடுகளில், தகுதியான அதிகார பலமுடன் ஒருங்கிணைக்கும் திறனை விரிவுபடுத்துகிறது" என்பது இந்த வாசகம். 

இதனைச் செயற்படுத்துவதற்கான முன்னேற்பாடாக ஆயிரக்கணக்கான ஆதரவு ஆவணங்களை ஆணையாளர் அலுவலகம் ஏற்கனவே சேகரித்துள்ளது. இதற்கான தனியான செயலகம் உருவாக்கப்பட்டு அறிக்கையாளர்களும், அலுவலர்களும் நியமனமாகி இயங்கி வருகின்றனர். இதற்குத் தேவையான நிதியை வழங்குமாறு உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

போர்க்குற்றம் புரிந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ள நான்கு டசினுக்கும் அதிகமான படைத்துறையினர் மீது, ஒவ்வொருவர் மீதும் தனித்தனியான நடவடிக்கை எடுக்க இந்த எட்டாம் அம்சத் தீர்மானம் வழிவகுக்கிறது. பயணத்தடை, பணியிட மறுப்பு, நுழைவு விசா மறுப்பு போன்ற எந்த நடவடிக்கையையும் இவர்கள் மீது உறுப்பு நாடுகள் எடுக்க முடியும். 

இலங்கை அரசு பல தடவைகள் உறுதியளித்த உள்நாட்டு விசாரணை சுயாதீனமாக, பாரபட்சமற்ற முறையில், வெளிப்படைத் தன்மையுடன் இடம்பெறாததாலும், ஏற்கனவே இணைஅனுசரணை வழியாக ஏற்கப்பட்ட சர்வதேச நீதிப்பொறிமுறை மறுக்கப்பட்டதாலும் ஜெனிவா அடுத்தகட்ட நடவடிக்கையாக எட்டாவது அம்சத்தைக் காட்டுகின்றது. 

அதேவேளை முன்னைய தீர்மானங்களைப் போன்று இம்முறையும் இலங்கை தனது கடப்பாட்டினை நிறைவு செய்ய 2024 செப்டம்பர் வரை, அடுத்த இரண்டாண்டுகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுகணமே இதனை மீண்டும் நிராகரித்துள்ளார் அமைச்சர் அலி சப்றி. இதனை அவரது விசுவாச அரசியலாகவே நோக்க வேண்டியுள்ளது. 

ராஜபக்சக்களால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டவர் அலி சப்றி. ஜெனிவா தீர்மானத்துக்கு இணங்க போர்க்குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின் தமது எஜமானர்களே - முக்கியமாக கோதபாயவும் அவரது முன்னாள் படைத்துறை சகாக்களும் தண்டிக்கப்படுவர் என்கின்ற காரணத்தால் அதனை முழுமையாக எதிர்க்க வேண்டியவராகி - அந்த விசுவாசத்தில் இதனை முழுமையாக எதிர்த்து வருகிறார் அலி சப்றி. 

ஆனால், நாட்டின் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க, ஜெனிவா தீர்மானங்கள் தமக்குத் தெரியாதது போலவும், அவை தம்முடன் சம்பந்தப்படாதவை போலவும், அதனை அலி சப்றியே பார்த்துக் கொள்ளட்டும் என்பது போலவும் அசாதாரண மௌனம் சாதித்து வருவதன் காரணம் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியது. இந்தத் தீர்மானங்களை உலக நாடுகள் நடைமுறைப்படுத்துமாயின், பொதுஜன பெரமுன தலைவர்களின் எதிர்கால அரசியல் நிர்மூலமாகிவிடும் என்பது அவருக்குத் தெரியும். அதனால்தான் ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் பொழுது ரணில், நாடாளுமன்றில் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் சிறப்புரை ஆற்றிக் கொண்டிருந்தார். 

ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருந்த கொக்கு, இன்னமும் எதை நோக்கிக் காத்திருக்கிறதோ?

No comments