கொழும்பில் நந்திக்கொடி:மகிழ்ச்சியில் ஈழம்சிவசேனை!




கொழும்பில் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு முன்பு நந்திக் கொடிகளைப் பறக்க விட்டுச் சைவத்தமிழ்ச் சமூகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக மறவன்புலோ சச்சிதானந்தன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் கொழும்பில் சைவக் கோயில்களுக்கு வெளியே நந்திக் கொடிகள் பறப்பது அபூர்வம். சில விழாக்களில் பறந்து இருக்கின்றன.

தீபஒளித் திருநாளையொட்டி மேதகு குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு முன்பு நந்திக் கொடிகளைப் பறக்க விட்ட மேதகு குடியரசுத் தலைவர் இரணில் விக்கிரமசிங்கர் மற்றும் சைவத் தமிழரான மூத்த அமைச்சர் மாண்புமிகு தேவானந்தா இருவருக்கும் நன்றி.

1920களில் ஏஇ குணசிங்கா தொடக்கம் 2022இல் இன்றைய சரத் வீரசேகரா வரை சிங்கள புத்த இனவெறியை அரசியலுக்கு முன்னெடுத்தோர் நாணிக் குனியும் வகையதே அரசின் நடவடிக்கை.

செயவீர சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி 1358இலும் குணவீர சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி 1370இலும் 4ஆம் 5ஆம் புவனேகபாகர்களை விரட்டிக் கம்பளையில் நந்திக் கொடியை நாட்டினர். கல்வெட்டு எழுதினர்.

செண்பகப் பெருமாள்  சிங்கக் கொடியை நல்லூரில் ஏற்றினார். 22 ஆண்டுகள் 1461 வரை சிங்கக் கொடி பறந்தது.

1948 தொடக்கம் சிங்கக் கொடி நல்லூரில் பறக்கிறது. அப்பொழுதே நந்திக் கொடியும் இணைய வேண்டும் என்ற சைவத்தமிழர் குரலைச் சிங்கக் கொடியார் மதிக்கவில்லை. 

நல்லூரிலிருந்து சிங்கக் கொடியை அகற்ற வேண்டும் என்ற போராட்டம் இன்னும் ஓயவில்லை.

இதற்கிடையில் மாண்புமிகு அமைச்சர் தேவானந்தாவின் முயற்சியால் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் தீபஒளித் திருநாள் அன்று, கம்பளைக்கு அப்பால் கொழும்பில், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில், நந்திக் கொடிகள் பறந்துள்ளன.

சிங்கக் கொடியும் நந்திக்கொடியும் இந்த நாட்டின் இறைமைக் கொடிகள். இவை சரிசமமாகப் பறக்கும் நாள்கள், இலங்கை முழுவதும் பறக்கும் நாள்கள், வெகு தொலைவில் இல்லை.

தீபஒளித் திருநாள் அன்று இவ்வாறு கட்டியம் கூறிய மாண்புமிகு தேவானந்தரும் வாழ்க. மேதகு இரணில் விக்ரமசிங்கரும் வாழ்க

No comments