200கோடி தேவையாம்:டக்ளஸிற்கு காசு கஸ்டம்!



யாழ்ப்பாணத்தின் தீவக கடற்பகுதிகளை கடலட்டை பண்ணைகள் அமைப்பென்ற பேரில் இலங்கை அரசினால் சீன நாட்டிற்கு தாரை வார்ப்பதை அம்பலப்படுத்திய உள்ளுர் மீனவ தலைவர்கள் மிரட்டலுக்குள்ளாகியுள்ளனர்.

கடற்றொழில் அமைச்சின் கீழான நிறுவனமான நெக்டா பணிப்பாளர் என சொல்லப்படும் அதிகாரியொருவரே தலா நூறு கோடி மான நட்ட ஈடு கோரி மீனவ தலைவர்கள் இருவருக்கு சட்டத்தரணியொருவர் ஊடாக கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தூண்டுதலில் பேரிலேயே மான நட்ட ஈடு கோரும் கடிதம் அனுப்பப்பட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

தீவகத்தின் பருத்தித்தீவில் எந்தவொரு அரச கட்டமைப்பின் அனுமதியுமின்றி சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளமை அம்பலமாக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் பிரகாரம் பருத்தித்தீவு உள்ளடங்கிய ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் கடல் அட்டை பண்ணைகளை அமைப்பதற்கான அனுமதி எவருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லையென்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அங்கு ஈபிடிபி முக்கிய நபர்கள் சிலரது கடலட்டை பண்ணைகள் உள்ளதாக கூறப்படுகின்ற போதும் உண்மையில் அவர்களது முதலீடா அல்லது யாருடைய பினாமியாக அவர்கள் உள்ளனராவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குறிப்பாக கொலை குற்றச்சாட்டினில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் வடமாகாணசபையின் ஈபிடிபி சார்பு உறுப்பினரான கமலேந்திரனது பெயரே பேசுபொருளாகியுள்ளது.

பருத்தித்தீவில் மக்கள் எவருமே குடியிராத நிலையில் சீன நாட்டவர்கள் அதிகூடிய வலுமிக்க தொழில் நுட்ப கருவிகள் சகிதம் நிலை கொண்டுள்ளமையினை ஊடகவியலாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்திற்கு அருகில் உள்ள தீவகப்பகுதி வரை சீன நாட்டவர்கள் கால் பதித்துள்ள நிலையில் இந்திய புலனாய்வு அமைப்புக்களது கையறு நிலை அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் கடலட்டை பண்ணை பேரில் சீனாவில் கால்கள் தீவக கடற்கரைகளில் பதிக்கப்படுவதை அம்பலப்படுத்திய மீனவ தலைவர்களையே நூறு கோடி நட்ட ஈடு கேட்டு கடிதமெழுதி மிரட்ட அரச தரப்பு முற்பட்டுள்ளது. 

 


No comments