மருத்துவர் சிவரூபனிற்கு கொலை அச்சுறுத்தல்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நியூமகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை அரச வைத்தியசாலையின்

மருத்துவ அத்தியட்சகர் சிவரூபன் கொலை அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து முன்னாள் சட்டமருத்துவ அதிகாரியுமான சிவரூபனின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த கிளிநொச்சி நீதிமன்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளது.

சுமார் 300 வரையிலாக கொலை,கற்பழிப்பு,காணாமல் ஆக்குதல் உள்ளிட்ட வழக்குகளது முக்கிய சாட்சியமாக முன்னாள் யாழ்.போதனாவைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி சிவரூபன் உள்ளார்.

இந்நிலையில் நீதிமன்றங்களிற்கு வழக்கு விசாரணைகளிற்கான சாட்சியங்களாக தொடர்ச்சியாக மருத்துவர் சிவரூபன் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நியூமகசீன் சிறைச்சாiலையில் இருந்து அழைத்துவரப்படுகினறார்.

எனினும் அவர் அழைத்துவரப்படுகின்ற சிறைச்சாலை வாகனங்களிலேயே அவர் சாட்சியமளிக்கின்ற கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களும் அழைத்துவரப்படுகின்றனர்.

இந்நிலையிலேயே தனது உயிருக்கான பாதுகாப்பு தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு மருத்துவர் சிவரூபன் கொண்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து  முன்னாள் சட்டமருத்துவ அதிகாரியுமான சிவரூபனின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த கிளிநொச்சி நீதிமன்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளது.

புளை அரச வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகரான சின்னையா சிவரூபன் 2019ம் ஆண்டின் ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதாகியிருந்தார்.

விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கம் மற்றும் வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தமையென கைதான வைத்தியர் சின்னையா சிவரூபனுடன் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எழுவரும் கைதாகியிருந்தனர்.

எனினும் இரண்டுவருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் குற்றச்சாட்டு;க்கள் ஏதும் சுமத்தப்படாது அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மருத்துவர் சிவரூபனின் விடுதலை சட்டமா அதிபர் திணைக்களத்தினால் திட்டமிட்டு இழுத்தடிக்கப்படுவதாக குடும்பத்தவர்கள் தரப்பினில்  தெரிவிக்கப்படுகின்றது.

மறுபுறம் வைத்தியர் சிவரூபன் சாட்சியமாக உள்ள முன்னாள் துணை ஆயுதக்குழுக்களினை சார்ந்த  கொலை,கற்பழிப்பு,காணாமல் ஆக்குதல் உள்ளிட்ட வழக்குகளது சந்தேக நபர்களை காப்பாற்ற ஏதுவாக சிவரூபனை கொலை செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. 

 


No comments