இத்தாலி பொதுத் தேர்தல்: முதல் பெண் பிரதமராக வர வாய்ப்பு!!


இத்தாலியில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் அந்நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 11 மணிக்கு முடிவடையும். அதில் 50 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் இத்தாலியின் முதலாவது பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி தேர்வு செய்யப்படுவார் என பெரிதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021 ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டனர். இதன் காரணமாக, பெரும்பான்மை இல்லாததால் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம் தன் பதவி விலகினார்.

கருத்துக் கணிப்புகளின்படி, ஜேர்ர்ஜியா மெலோனி தலைமையிலான பாசிச சிந்தனை கொண்ட பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் கூட்டணி இந்தத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அவர்கள் கூட்டணி 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

45 வயதான ஜார்ஜியா மெலோனி 'கடவுள், தேசபக்திமிக்க நாடு மற்றும் குடும்பம்' என்ற பழமையான பாசிச முழக்கத்தை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தினார்.

ஜோர்ஜியா மெலோனி ஒரு தீவிர தேசியவாதியாகவும், ஐரோப்பிய எதிர்ப்பு ஒற்றுமை தலைவராகவும் கருதப்படுகிறார். அகதிகள் பிரச்சனைக்கு ஐரோப்பிய ஒன்றியமே காரணம் என மெலோனி கருதுகிறார். மெலோனி இத்தாலியின் பிரதமரானால், அவர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

மறுமுனையில், யேர்மனி வலதுசாரி ஆதரவாளர் ஜோர்ஜியா மெலோனியின் வெற்றி ஐரோப்பிய ஒத்துழைப்புக்கு மோசமானதாக இருக்கும் என்று கடந்த வாரம் எச்சரித்தது.

இதுவரை உக்ரைன் போரில் உக்ரைனுக்கு இத்தாலி வலுவாக ஆதரவளித்து வருகிறது. அடுத்த அரசாங்கத்தின் கீழ் அது அப்படியே இருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​மெலோனி உக்ரைனுக்கு தனது இராணுவ உதவி கொள்கையை தொடர உறுதியளித்துள்ளார். ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளையும் அவர் ஆதரித்தார்.

ஆனால் மெலோனியின் கூட்டணியின் இரு முக்கிய தலைவர்களும் ரஷ்யாவின் தீவிர ஆதரவாளர்கள். நான்கு முறை பிரதமராக இருந்த பெர்லுஸ்கோனி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நட்புறவு கொண்டுள்ளார்.

2008 இல், பெர்லுஸ்கோனி பிரதம மந்திரியாக இருந்த போது மந்திரிசபையில் ஜோர்ஜியா மெலோனியை விளையாட்டுத் துறை மந்திரியாக நியமித்தார். இந்நிலையில் தற்போது பெரும் செல்வாக்குடன் பிரதமர் வேட்பாளராக அவர் உயர்ந்துள்ளார்.

இத்தாலியில் அன்றாட வாழ்க்கைச் செலவு நெருக்கடி பெரும் பிரச்சினையாக தேர்தலில் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது.

உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளைப் பெற திங்கள் காலை அல்லது பிற்பகல் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

No comments