காயப்பட்ட தனியன் யானையிடம் தமிழர் தரப்பும் அகப்பட்டு விட்டதா? பனங்காட்டான்


யானைகள் பொதுவாக கூட்டமாகவே திரிபவை. நீண்டகால ஆயுளும் அதீத ஞாபகசக்தியும் இவைகளின் வரம். ஆனால், இவைகளுள் தனியன் யானை என்றும் ஒன்று உண்டு. தனக்கு காயத்தை உண்டு பண்ணியவர்களை ஞாபகத்தில் வைத்து சந்தர்ப்பம் வரும்போது அவர்களைப் பழிவாங்குவதே இதன் இலக்கு. ஒற்றை மனிதர் ஒருவர் காரணமாக தமிழர் தேசிய கூட்டமைப்பு தனியன் யானையின் வலைக்குள் அகப்பட்டு விட்டதுபோல் தெரிகிறது. 

இராமாயணத்தில் முதல்நாள் போரில் ராமனிடம் தோற்ற இராவணன் நாடு திரும்புவதை கம்ப சக்கரவர்த்தி 'யாவும் அக்களத்தே விட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்" என்று வர்ணித்ததுக்கு ஒப்பாக கோதபாய நாடு திரும்பியதை பார்க்க முடிகிறது.

ஜனாதிபதி பதவியைச் சுமந்தவாறு இலங்கையை விட்டுத் தப்பியோடிய கோதபாய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்புவாரா, இல்லையா என்றிருந்த கேள்விக்கு முடிவு காணப்பட்டுள்ளது. 

இலங்கையில் பிறந்து வாழ்ந்து, பிறப்புரிமைக்காகப் போராடிய மக்கள் குழுமத்தை கொடூர யுத்தத்தால் அழித்து, அதற்குப் பரிசாகக் கிடைத்த அரியாசனத்தில் அமர்ந்த கோதபாய, அந்நாட்டின் பிரஜை என்ற வகையில் இலங்கை திரும்பியது சட்டத்துக்குப் புறம்பான செயலன்று. அமெரிக்க இரட்டைப் பிரஜாவுரிமையை ரத்துச் செய்தவர் என்ற வகையில் அவர் எப்போதும் இலங்கை செல்லவும் வெளியேறவும் பூரண உரிமை உள்ளவர். அந்த வகையில் அவர் இலங்கை மீண்டிருப்பது முக்கியமான ஒன்றல்ல. 

ஆனால், அவரது பெயரைப் பயன்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்த பல தரப்பினர் முயற்சிப்பதுதான் இன்றைய பேசுபொருள். தேசியப் பட்டியலூடாக முதலில் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவது, பின்னர் பிரதமர் கதிரையில் அமர்த்துவது, அதன் பிறகு முடிந்தால் நாடாளுமன்ற பலத்தினூடாக ஜனாதிபதி ஆக்குவது என்று பலவகையான செய்திகள் அண்மையில் வெளிவந்தன. 

கோதபாய ஏன், எதற்காக நாட்டைவிட்டுச் சென்றார் என்று தமக்குத் தெரியாது என்று கூறிய மகிந்த, மீண்டும் அரசியலில் வருவது பற்றி கோதபாயதான் முடிவெடுக்க வேண்டுமென்றும் சொல்லி வந்தார். இதனையே மகிந்தவின் புதல்வரான நாமலும் கூறுகிறார். ஆனால், பசில் ராஜபக்ச மட்டும் கோதாவை மீண்டும் பதவி அரசியலுக்குள் இழுத்துவர துடிக்கிறார். 

பொதுஜன பெரமுனவை மீளெழுச்சி கொள்ளச் செய்ய கோதாவின் பெயர் இப்போது ராஜபக்சக்களுக்கு தேவைப்படுகிறது என்பதை இவர்களின் அறிவிப்புகளினூடாகப் பார்க்கலாம்.

கடந்த பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டு 150க்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றது. ராஜபக்சக்கள் அனைவரும் அமைச்சர்கள் ஆயினர். அறுபத்தொன்பது லட்சம் சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியாகி நாட்டையே குட்டிச் சுவராக்கிய கோதபாயவினால் அந்தக் குடும்பத்தில் எல்லோரும் பதவி இழந்தனர். இதனை மறந்துவிட்டே இப்போது கோதபாயவை வைத்து அரசியல் நடத்த இவர்கள் எத்தனிக்கிறார்கள்.  

தங்களின் எதிர்காலம் பற்றிய இவர்களின் அச்சம் காரணமாக எழும் அவலக் குரலாகவே இவைகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்த அச்சத்தின் மூலநாயகராக ரணில் விக்கிரமசிங்க அமைந்துள்ளார். 

பெரமுனவின் தலைமையிலான கூட்டிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான கட்சிக்காரர்கள் பிரிந்து சென்றதால் பெரமுனவின் எண்ணிக்கை 140க்கும் குறைந்தது. 

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரமுனவின் அக்கிராசனரான ஜி.எல்.பீரிஸ், மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து போட்ட திட்டத்தினால் டலஸ் அழகப்பெரும போட்டிக்கு இறக்கப்பட்டார். இவருக்குக் கிடைத்த தோல்வியை அடுத்து இவ்விருவர் உட்பட 13 பேர் (இங்கும் 13தான்) தனிக்குழுவாக சுயேட்சை அணி என்ற பெயரில் மாறியுள்ளனர். இதனால் பெரமுனவின் பலம் 120 வரைக்கு இறங்கியுள்ளதை ரணிலின் முதலாவது வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் உணர முடிந்தது.

ஜனாதிபதித் தெரிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தபோது 134ஐ பெற்ற ரணில், ஒரு மாதத்துக்குள் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட வாக்களிப்பில் 120 மட்டும் பெற முடிந்தது. ஒரு மாதத்தில் இடம்பெற்ற வாக்கு இழப்பிற்கு ஜி.எல்.பீரிஸ் - டலஸ் அணியினர் பிரிந்து சென்றதே காரணம் என்பதைக் கூறத்தேவையில்லை. 

இவ்வாறு வெளியேறிய 13 பேரையும் தங்களுடன் இணைப்பதற்கு விமல் வீரவன்ச தரப்பும், சஜித் பிரேமதாச தரப்பும் முயன்று வருகின்றது. இது தவிச்ச முயல் அடிக்கும் அரசியல் அணுகுமுறை.  

எப்போதும் தம்மை ஒரு கிங்மேக்கர் என்ற நிலைப்பில் அரசியல் செய்து பழகிய ஜி.எல்.பீரிஸ், எந்தத் தலைமையின் கீழும் செயற்பட விரும்பமாட்டார். முடிந்தால் மேலும் சில பெரமுனகாரர்களை வெளியே இழுத்து, தமது தலைமையில் புதிய பெரமுன ஒன்றை உருவாக்க எத்தனிப்பார். 

இந்தப் பின்னணியில் தங்களது பெரமுனவுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்த மகிந்த - பசில் சகோதரர்கள், கோதா பெயரை முன்னிறுத்தி அரசியல் எதிர்காலத்தை நோக்குகின்றனர்.

பசிலின் இலக்கு ரணிலை ஜனாதிபதி பதவியிலிருந்து கூடிய விரைவில் அகற்றுவது. மகிந்தவின் இலக்கு எவ்வகையிலாவது தமது புதல்வர் நாமலை என்றோ ஒருநாள் ஜனாதிபதி கதிரையில் அமர்த்துவது. எதிரும்புதிருமான இலக்குகளுடன் இவர்கள் காய்களை நகர்த்தினாலும், இப்போதைக்கு ஒன்றுபட்டே இயங்க வேண்டிய தலைவிதி.

இவைகளுக்கப்பால், ரணில் தமது தனித்துவத்தைப் பேணியவாறு அரசியல் செய்கிறார். அண்மையில் எதிரணி எம்.பி. ஒருவர் ரணிலை விமர்சனம் செய்கையில், ஷஇவர் ஒரு தனியன் யானை - இவரால் எதையுமே செய்ய முடியாது| என்று வரிணித்திருந்தார். யானையை சின்னமாகக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் மட்டுமே எம்.பி.யாக இருப்பதைக் குறித்து முன்வைக்கப்பட்ட கருத்து இது. 

யானைகளின் சாம்ராஜ்யம் பற்றி வனவிலங்குகள் திணைக்களத்தினர் நன்கு அறிந்து வைத்துள்ளனர். மிருகங்களில் பலமானவை யானைகள். இவை எப்போதும் கூட்டமாகவே செல்பவை. தங்கள் பாதுகாப்புக் கருதி இவ்வாறு செல்வது வழக்கம். ஆனால், இதற்கு மாறாக தனியன் யானை ஒன்று கூட்டத்துடன் சேராது தனித்தே திரியும். 

ஏற்கனவே ஏதாவது தாக்குதலுக்கு உள்ளாகி காயப்பட்டு அல்லது சூடுபட்டு சற்று ஊனமானதாக இந்த யானை இருக்கும். சிலவேளை ஒரு காலை இழுத்துச் செல்வதையும் காணமுடியும். தம்மைத் தாக்கிய எவரையோ அது தேடிக் கொண்டிருப்பதை அறியலாம். அந்த யானை எப்போதும் தனித்தே திரியும். அதனால் அதனை தனியன் யானை என்பர். அதனைக் காணும்போது பொதுவாக எல்லோரும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஒளித்துக் கொள்வர். 

இந்தப் பத்தியாளரின் பார்வையில், ரணில் அவ்வாறான ஒரு தனியன் யானை. 45 வருட அரசியல் பாதையில் பல தடவை காயப்பட்டவர். ஊனப்பட்டவரும்கூட. உயர்ந்த இடத்தில் இருக்கும்போது இழுத்து வீழ்த்தப்பட்டவர். சில சந்தர்ப்பங்களில் பின்கதவால் தள்ளப்பட்டவரும்கூட. 

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பெறாமகன் என்றவகையில் அவரது ஆட்சிக்காலத்தில் (1977-1989) அவரது சுவீகாரப் பிள்ளையாகவும், அரசியல் வாரிசாகவும் பல அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். 1989ல் பிரேமதாச ஜனாதிபதியாகியபோது பிரதமர் பதவி ரணிலுக்கென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரேமதாச அவரைப் புறக்கணித்துவிட்டு சப்பாணி அரசியல்வாதியான முன்னாள் தபால் அமைச்சர் டி.பி.விஜேதுங்கவை பிரதமராக நியமித்தார். 

பிரேமதாசவின் அகால மரணத்தின் பின்னர் ஜனாதிபதியான டி.பி.விஜேதுங்க பிரதமர் பதவியை ரணிலுக்கு வழங்கி, ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கான தமது நன்றிக்கடனை நிறைவு செய்தார். 

சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது பொதுத்தேர்தல் மூலம் பிரதமர் பதவிக்கு வந்த ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசை கலைத்து ரணிலின் பிரதமர் பதவியையும் பறித்தார்.

நல்லாட்சி அரசின் ஜனாதிபதியாக அமைந்த மைத்திரிபால சிறிசேன, தம்மை அந்தப் பதவிக்குக் கொண்டு வந்தவர் ரணில் என்பதையும் மறந்து அவரைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்தவுக்கு அப்பதவியை வழங்கினார். நீதிமன்றத் தீர்ப்பின்படி 52 நாட்களின் பின்னர் அப்பதவி மீளவும் ரணிலுக்குக் கிடைத்தது. 

இவை, ரணில் தமது அரசியல் வாழ்வில் பெற்ற சில அவமானங்களும் சவால்களும். இவ்வகையான காயங்களுக்குள்ளான தனியன் யானை இப்போது அந்தக் காயங்களுக்கு பரிகாரம் தேடும் பாதையில் பல பழிவாங்கல்களை ஆரம்பித்துள்ளது.

தேசிய நீரோட்டத்திலுள்ள சகல கட்சிகளையும் கூறுபோட்டு அவைகளை குழுக்களாக்கி வருகிறது. அக்கட்சிகளிலுள்ள சிலரை இழுத்தெடுத்து அமைச்சர் பதவிகளும் வழங்கப்படுகிறது. இந்த சூழ்ச்சி வலைப்பின்னலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சிக்குண்டு விட்டது. 

நல்லாட்சிக் காலத்தில் ரணிலின் உற்ற தோழராக இருந்தவர் எம்.ஏ.சுமந்திரன். ஆனால், இப்போது ஏதோ காரணத்தால் சுமந்திரன் ரணிலை பகிரங்கமாக எதிர்த்து வருகிறார். அறிக்கைகள் ஊடாக சாடி வருகிறார். ரணில் அவரது தாய்மொழியான சிங்களத்தில் கடிதங்களில் ஒப்பமிடுவதையும் சுமந்திரன் நையாண்டி பண்ணுகிறார். 

இதுதான் தருணமென்று பார்த்து சுமந்திரனை வெட்டி விளையாட, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவுடன் தமது தொடர்பாடலை ரணில் ஆரம்பித்துள்ளார். செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோவின் மூவர் குழுவினர் சில நாட்களுக்கு முன்னர் ரணிலை சந்தித்தது ஊடகங்களில் படமாகியுள்ளது. 

ரெலோவினர் ரணிலிடம் முன்வைத்துள்ள அத்தனை கோரிக்கைகளும் தமிழரின் சமகால சில முக்கிய பிரச்சனைகள். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோருக்கான தீர்வு, தமிழர் தரப்பிலிருந்து ராணுவத்தை குறைப்பது, காணி அபகரிப்பை நிறுத்துவது, ஜெனிவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது என்று பல இதில் அடங்கியுள்ளன. இவற்றுள் சிலவற்றை நடைமுறைப்படுத்த ரணில் இணங்கியிருப்பதாக ரெலோ அறிவித்துள்ளது. 

சுமந்திரனை பதப்படுத்த, கூட்டமைப்பை பிளவுபடுத்த, தமிழரைச் சாந்தப்படுத்த ரணில் மேற்கொண்டிருக்கும் அரசியல் சாமர்த்தியத்தின் ஆரம்பமாக இதனைப் பார்க்கலாம்.

சமகாலத்தில், எதிர்கால அரசியலுக்கு நாமலுக்குப் போட்டியாக யானைத் தரப்பிலிருந்து தமது வாரிசு ஒருவரை முன்னிலைப்படுத்தும் ரணிலின் சாணக்கியமும் ஆரம்பமாகியுள்ளது. அடுத்து வரும் பத்திகளில் இதனைப் பார்ப்போம். 

No comments