திலீபனின் நினைவேந்தல் நல்லூரில் ஆரம்பம்!

தியாகி திலீபனின் நினைவேந்தல் நல்லூரில் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளது.பெருமளவில் மக்கள் திரண்டு நினைவேந்தலில்

பங்கெடுத்துள்ளனர்.

இதனிடையே  நினைவேந்தல் நிகழ்வுகளில் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம் என அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் அறிவிலியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் அறிக்கை ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார். 

வழமை போன்று நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி குழப்பங்களை விளைவித்த நிலையில் காக்கா இத்தகைய அறிவிப்பை விடுத்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமான வேளை அங்கு வந்திருந்த அரசியல் கட்சி ஒன்றினை சார்ந்தவர்கள் பிற கட்சியினருடன் முரண்பாடுகளை ஏற்படுத்தும் முகமாக செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன் , அங்கிருத்தவர்களுடன் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டனர். 

அந்நிலையில் அது தொடர்பில்  அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் அறிவிலியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் ஊடக அறிக்கை ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் 

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

தியாக திலீபனின் நினைவேந்தல் மட்டுமல்ல எந்த நினைவேந்தல்களிலும் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம்.

இந்த ஆண்டின் திலீபன்  நினைவு ஆரம்ப நிகழ்வு தொடங்கும் முன்னர் பிறிதொரு அணியினரை சாடும் வகையில் சட்டத்தரணி சுகாஷ் உரையாற்றியமை எமக்கு வேதனையை உண்டாக்குகிறது. 

நேற்று இவர் சார்ந்த கட்சியின் ஏற்பாட்டாளரும் திலீபனை நேரில் கண்டவர்களில் ஒருவருமாகிய பொன் மாஸ்டரிடம் இந்நிகழ்வை பொதுநிகழ்வாக நடத்துவதில் உங்களுக்குள்ள சங்கடங்கள் என்னவென்று கேட்டேன். எதுவும் இல்லை என பதிலளித்தார். அது திருப்தி அளித்தது.

அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் விதத்தில் சட்டத்தரணி சுகாஷ் இன்றைய தினம்(15) நடந்து கொண்டார். 

ஏற்கனவே மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏனைய கட்சிகளை தாக்கும் களமாக பயன்படுத்த வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமாரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதனை கடைபிடிப்பதாக அவர் என்னிடம் உறுதியளித்தார்.

எனினும் கிளிநொச்சியில் நிகழ்ந்த மாவீரர்களின் பெற்றோருடைய கௌரவிப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சாடியமை பற்றி செய்தி பத்திரிகையில் வெளியான போது மிகவும் வேதனைப்பட்டேன்.

அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக பொன் மாஸ்டரை சந்தித்து உரையாடினேன். 

எனவே இவ்வாண்டு திலீபனின் நினைவு நிறைவடையும் வரைக்கும் அரசியலை கலக்காமல் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மன்றாட்டமாக அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன். எமது உணர்வுகளை எதிர்காலத்தில் மதிப்பார்கள் என நம்புகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments