தற்போதேனும் கவனத்தில் எடுங்கள்:கோமகன்!அவசரகாலசட்டம் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டம் போன்றவற்றின்கீழ் கைதுசெய்யப்பட்டு 10 முதல் 26 ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் 46 தமிழ் அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் தண்டனை கைதிகள் , மேல்முறையீட்டு கைதிகள்  ,விளக்க மறியல் சந்தேக நபர்கள் அடங்குகின்றனர் என விளக்கமளித்துள்ளார் குரலற்றவர்களின் குரல் அமைப்பின்  இணைப்பாளர் கோமகன்.

இன்று கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களிடையே கருத்து வெளியிட்ட அவர் நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனமுறுகலுக்கு அந்தந்த காலங்களில் தீர்வு காணப்படாததன் காரணமாகவே இன்று நாடு இந்த அளவிற்கு பொருளாதார சீரழிவை கொண்டிருக்கின்றது. ஆகவே அந்த தவறுகளை நாம் மீண்டும் மீண்டும் தொடர தலைப்படக்கூடாது.

ஒரு சமூகத்தின் சுதந்திர வாழ்வுக்கான பயணத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களை, போர் ஓய்ந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் சிறைப்படுத்தி வைத்திருப்பது என்பது எந்த வகையிலும் அறமாக இருக்க முடியாது. இது ஒரு வகையில் இனத்தின் மீதான தனிநபர் பழிவாங்கலாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.

நல்லிணக்கத்திற்கான முதற்புள்ளியாக அரசியல்கைதிகள் அல்லது போர் கைதிகளை அரசு விடுதலை செய்வதன் மூலம் சமூகங்களுடையே பரஸ்பர புரிந்துணர்வும் நம்பிக்கையும் ஏற்படும். அதனூடாக ஒன்றுபட்ட இலங்கையர்களாக  நாட்டை கட்டியெழுப்பமுடியும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆராய்வதாக ஜனாதிபதி தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.  இங்கு ஒரு முக்கியமான விடயத்தை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது பதவிக்கு வருகின்ற ஒவ்வொரு அரசாங்கங்களும் அரசியல் கைதிகள் தொடர்பாக ஆணைக்குழுக்கள் அமைப்பது, சிறப்பு நீதிமன்றம் நிறுவுவது, வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என உரைப்பது என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்ற மாயவித்தையை முதலில் கைவிடவேண்டும்.

இதுவரை எந்த ஒரு குழுக்களினதும் பரிந்துரைகளை எந்தவொரு அரசும் முழுமையாக நடைமுறைப்படுத்தியதாக சரித்திரங்கள் இல்லை.

ஆகவே கைதிகள் விடுதலையை  ஆராய்வதாககூறி, இதற்கு மேலும் காலம் கடத்துவதை தவிர்த்து உண்மையான நல்லஎண்ணத்துடன் சிந்தித்து அரசியல் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு, வகைபிரிக்காமல் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் அவர்கள் தம்குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ ஒரு சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும்.

இன்று நாட்டில் நியாயமாக சிந்திக்கக்கூடிய எந்ததரப்பினரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஆட்சேபனை தெரிவிப்பதாக தோன்றவில்லை.

கடந்த காலங்களை போலன்றி தற்போது சகோதர சிங்கள மக்களும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துகின்ற நிலைமையே மேலோங்கி காணப்படுகிறது. எனவே தசாப்தங்கள் கடந்தும் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்கின்ற பொறுப்பு அரசின் கைகளிலேயே தங்கியுள்ளது. 

இந்த சந்தர்ப்பத்திலே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தை மனிதநேய அடிப்படையில் கையாளுமாறு இலங்கை அரசாங்கத்தை சர்வதேச சமூகங்கள் வலியுறுத்தவேண்டும்.

அதேபோன்று புலம்பெயர்தமிழர்கள் அரசின் மீதான நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் பொருட்டு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தை இன்னும் அழுத்தமாக முன்னிறுத்த வேண்டும்.

மேலும் நாடாளுமன்றத்திலே அங்கம் வகிக்கின்ற அனைத்து தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சிபேதமற்று இந்த மனிதாபிமான செயற்கருமத்தை  நிறைவேற்றுவதற்கு அரசுடன் இணக்கமான பேச்சுக்களை தொடரவேண்டும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த சிவில்அமைப்புகளும் நிறுவனங்களும் அரசியல் கைதிகள் விடயத்தில் தங்களது நல்லெண்ண சமிஞ்சைகளை அரசை நோக்கி வெளிப்படுத்த வேண்டிய தருணம் என்று கருதுகின்றோம்.

புத்திஜீவிகளும் பல்கலைக்கழக சமூகங்களும் மதப்பெரியார்களும் தமது பொறுப்புணர்ந்து இன்றைய கால கடமையில் பங்கேற்கவேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

No comments