வவுனியாவில் அரச ஊழியர்களிற்கும், காவல்துறையினர் இடையில் முறுகல்!!


வவுனியா மன்னார் வீதி நெளுக்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்று கொள்வதற்காக கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக இரவு பகல் பாராது அரச உத்தியோகத்தர்கள் ஒரு வரிசையிலும், பொதுமக்கள் ஒரு வரிசையிலும் காத்திருந்தனர்.

இந்நிலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தமக்கான புதிய வரிசையினை உருவாக்கி எரிபொருளினை பெறும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

மேலும் காவல்துறையினர் தங்களிற்கான எரிபொருளினை பெற்ற பின்னரே அரச ஊழியர்கள் பெற முடியும் என தெரிவித்தமையால் அரச ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததுடன் இது தொடர்பாக காவல்துறையினரை வினவிய நகரசபை உறுப்பினர் பாரி மற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டதுடன் இரு காவல்துறையினருக்கும், இரு அரச ஊழியர்கள் என்ற ரீதியில் எரிபொருளினை வழங்க காவல்றையினர் உடன்பட்டதன் பின்னரே குறித்த குழப்ப நிலை முடிவுக்கு வந்திருந்தது என்று வவுனியா செய்திகள் மேலும் தெரிவித்தன.


No comments