ஓடுமீன் ஓடும்வரை காத்திருந்த ரணில்; நாடு நாடாக ஓடித்திரியும் கோதபாய்தள்ளாடும் ச(ர்)வகட்சிகளின் தலைகள்! பனங்காட்டான்


ராஜபக்சக்கள் ஒவ்வொருவராக அரசியல் ஆடுகளத்திலிருந்து அகற்றப்பட்டு வருகின்றனர். கோதபாய நாடு நாடாக நாடோடியாக ஓடிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் அவரே ஜனாதிபதி. தனக்கான காலம்வரை காத்திருந்த ரணில் அந்தக் கதிரையில் ஏறிவிட்டார். அந்தக் கதிரையை தட்டிப் பறிக்க அரசியல் கட்சிகள் தங்களுக்குள் போட்டி. கேடுகெட்ட சிங்களதேச அரசியலால்  அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.  

விதி சுழி மாறினால் பிரளயம் ஏற்படும் என்பர். இலங்கையில் இப்போது இடம்பெறுவது அதனிலும் மேலானது. 

இலங்கையின் அரசியல் வரலாற்றில் எத்தனையோ அதிகாரப் போட்டிகள், சதி முயற்சிகள், ஆட்சி கவிழ்ப்பு எத்தனங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இப்போது போன்ற அவலமான, கேவலமானவை இடம்பெறவில்லை. 

இலங்கையின் முதலாவது அரசியற் படுகொலை பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவில் ஆரம்பமானது. இக்கொலையைப் புரிந்து மரண தண்டனை பெற்றவர் ஒரு பௌத்த பிக்கு. தாங்கள் அரியாசனத்தில் ஏற்றிய தலைவரை அவர்களே சுட்டுக் கொன்றனர். 

சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக வந்தபோது படைத்துறையினர் சிலர் ஆட்சிக் கவிழ்ப்புக்குச் சதி செய்து அகப்பட்டுக் கொண்டது இன்னொரு வரலாறு. 

1971 ஏப்ரலில் சிறிமாவோ ஆட்சியைக் கவிழ்த்து புதுயுகம் படைக்கப் புறப்பட்ட ரோஹண விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி. அடி சறுக்கிய கதை மற்றொரு வரலாறு. இச்சம்பவத்தில் இருபதாயிரத்துக்கும் அதிகமான சிங்கள இளைஞர்களின் உயிர் பறிக்கப்பட்டதும், இந்தியா இதில் உடனிருந்து பங்காற்றியதும் மறக்க முடியாத வரலாறு. 

ஆனால், இப்போதைய அரசியல் நிகழ்வுகள் சிங்களதேச அரசுக்கு சிங்கள மக்கள் புகட்டிவரும் நவீன பாடவியலாக அமைந்துள்ளது.

ஜே.வி.பி.யின் சேகுவேரா புரட்சி இடம்பெற்ற 1971 ஏப்ரல் மாதத்தில் இலங்கை ராணுவத்தில் இணைந்த கோதபாய, படிப்படியாக உயர்வு பெற்று அதிலிருந்து ஓய்வு பெற்று, அமெரிக்கா சென்று அந்நாட்டு பிரஜாவுரிமை பெற்று குடும்பத்துடன் (மனைவி, மகன்) வாழ்ந்தவர்.

2000ம் ஆண்டில் தமையனார் மகிந்த ஜனாதிபதியானதும் நாடு திரும்பி பாதுகாப்புத்துறைச் செயலாளராக நியமனம் பெற்று, தமிழர் தாயகத்தில் மனித குலத்துக்கு எதிராக இனப்படுகொலைகளை மேற்கொண்டு நயவஞ்சக முறையில் வெற்றி வீரனாக அடையாளப்படுத்தப்பட்டவர். இதனால், சிங்கள மக்கள் இவரை யுத்த நாயகர் என போற்றித் துதித்தனர்.

இந்த அறிமுகம் 2019 நவம்பர் 16ல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இவருக்கு சிங்கள வாக்குகளை அள்ளிக் கொட்டியது. 69 லட்சம் சிங்கள மக்களின் வாக்குகளால் தெரிவானவர் எனும் மமதையுடன் எப்போதும் பவனி வந்த இவர், அந்த சிங்கள மக்களைக் காப்பாற்றுவதே தமது தலையாய கடமை எனவும் விளாசி வந்தவர். 

கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி இவரது மிரிகான வீட்டின் முன்னால் திரண்ட இவரது மக்கள் கோதா கோ ஹோம் (கோதா வீட்டுக்குப் போ) என முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அன்றுதான் இவரைத் தொட்டது கெடுகாலம். ஆனாலும் தமது இருப்பை மேலும் ஸ்திரப்படுத்த சில பல நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டார்.

தம்மைத் தவிர மற்றைய அனைத்து ராஜபக்சக்களையும் அமைச்சர் பதவியிலிருந்து நீங்குமாறு பணித்து (இது நீக்கப்படல்தான்) முதற்கட்டத்தை தாண்டினார். இது அவருடைய ராணுவ சிந்தனையின் வயப்பாடு. இவரின் அண்ணன்மார் சமல், மகிந்த, தம்பி பசில், பெறாமக்கள் நாமல், சசீந்திர ஆகியோர் விருப்பமின்றியே அமைச்சர் பதவிகளைத் துறந்தனர். இறுதியில் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை பசில் பறிகொடுத்தார். 

இது எதுவுமே கோதாவுக்கு எதிரான மக்கள் எழுச்சியை நிறுத்தவில்லை. மாறாக, மேலும் நீட்சி பெறவே செய்தது. இதிலிருந்து தப்புவதற்கு - ஏற்கனவே தோற்றுப்போய் தேசியப் பட்டியலூடாக எம்.பியாக வந்த ரணிலைப் பிரதமராக்கி, அவரின் நிழலுக்குள் தம்மை மறைக்க எடுத்த முயற்சியும் இவருக்குக் கைகொடுக்கவில்லை.

நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். எனவே இந்தப் பதவிக்காலம் முடியும்வரை என்னை இருக்க விடுங்கள் என்று அழாக்குறையாக போராட்டக்காரரிடம் கெஞ்சிப் பார்த்தார். அதற்கு எவரும் செவி சாய்க்கவில்லை.

தோற்றுப்போன ஜனாதிபதியாக என்னால் விலக முடியாது, எனக்கு வாக்களித்த 69 லட்சம் மக்கள் இன்னமும் என் பக்கமே இருக்கிறார்கள் என்றும் சொல்லிப் பார்த்தார். அதுவும் எடுபடவில்லை. சாம பேத தான தண்டம் அமைத்தும் செயலற்றுப் போயின. ராஜபக்ச ஊழல் தோட்டத்தில் எஞ்சியிருந்த ஒற்றை மரமாக கோதா தடுமாற ஆரம்பித்தார். 

மே 9ம் திகதி பிரதமர் பதவியை மகிந்த துறந்தார். யூன் 9ம் திகதி பசில் தனது எம்.பி. பதவியை துறந்தார். யூலை 9ம் திகதி கோதாவின் நாள். இந்நாளில்தான் இவரது கண்டச் சனி ஆரம்பமாகியிருக்க வேண்டும். இவரது செயலகம், அலரி மாளிகை மட்டுமன்றி, 200 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானிய சாம்ராஜ்யத்தால் கட்டப்பட்ட ராணி இல்லம் (இப்போது இது ஜனாதிபதி மாளிகை) போராட்டக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டது. இதனை எதிர்பார்த்த கோதா அதற்குச் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பாதுகாப்பாக வெளியேறிவிட்டார். 

முதலில் ராணுவத்தின் பாதுகாப்பு - பின்னர் கடற்படையின் பாதுகாப்பு - இறுதியில் விமானப்படையின் பாதுகாப்புடன் தமது மனைவி அயோமாவையும் இணைத்துக் கொண்டு மாலை தீவுக்கு தப்பியோடும் நிலை உருவாகியது. முள்ளிவாய்க்காலை வெற்றிகொள்ள மேற்கொண்ட இனப்படுகொலையை சிங்களதேசத்தில் இவரால் செய்ய முடியாமல் போய்விட்டது. 

அஸ்கிரிய பீடம், மல்வத்துவ பீடம், அமரபுர நிக்கய, ராமண்ணான நிக்கய ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்த மகாசங்க பிரகடனம் காலிமுக கோதா கோ கமவுக்கு ஆதரவாக மாறியதும், தமது சகோதரர்களை எதிரிகளாக்கியதும் கோதாவை தனிமைப்படுத்தியது எனலாம். 

தமக்கு மூக்குப் போனாலும் எதிரிகளுக்கு (விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, சரத் பொன்சேக) சகுனப் பிழையாக இருக்க வேண்டுமென்பதற்காக விரும்பியோ விரும்பாமலோ ரணிலை தொடர்ந்து பிரதமராக வைத்திருக்க வேண்டிய நிலை கோதாவுக்கு மேலும் அவசியமானது. 

சர்வதேசத்துக்கு முன்னால் நன்கு அறிமுகமான முகமாக ரணில் இருப்பதால் தொடர்ந்து கடன் படுவதற்கு அவர் கோதாவுக்கு தேவைப்பட்டார். அதே சமயம், எதிர்காலத்தில் சஜித் அணி ஆட்சிக்கு வராமல் தடுக்கவும் ரணில் தேவையாக இருந்தது. 

தோல்வியுற்ற ஜனாதிபதியாக போகமாட்டேன் என்று அடம் பிடித்த கோதா, மக்கள் எதிர்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, இறுதி முடிவெடுக்கும் நாள் நெருங்கியது. அதே சமயம், காணாமலாக்கப்படும் ஜனாதிபதியாக மாறும் அவலமும் உருவானது. நாடோடியாக மாறி அகதி வாழ்க்கை ஆரம்பமாகப் போவதும் அவருக்குத் தெரியவந்தது. 

இதனால், 13ம் திகதி பதவி துறப்பதாக சபாநாயகர் மகிந்த யாப்பாவுக்கு அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பினூடாக போராட்ட வீச்சை குறைக்கலாமென அவர் எண்ண, அது வேறுவிதமாக மாற்றமெடுத்தது. கோதா பதவி விலகினால் அரசியல் சட்டப்படி பிரதமர் ரணில் ஜனாதிபதியாக வரலாமென்ற கருத்து பரவலாகி ரணில் கோ ஹோம் என திசை மாறியது. 

ரணிலுக்கு எதிரான போராட்டம் கொழும்பில் பரவலாகியது. ஏற்கனவே அவரது தனிப்பட்ட இல்லத்தை எரித்தவர்கள் இப்போது அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ரணில் பல தடவை சூடு கண்ட பூனை. புல்லுக்குள் மறைந்திருக்கும் நச்சுப் பாம்பு. எதற்கும் மசியவில்லை. 

அதேசமயம் திகதியிடப்படாத கோதாவின் பதவி விலகல் கடிதம் தயார் எனவும், 13ம் திகதி அவர் பதவி துறப்பது நிச்சயம் எனவும் சபாநாயகர் அறிவிக்க ரணிலுக்கு எதிரான போர்க்களம் விசாலமானது. இதன் அடுத்த நகர்வு அரசியலில் சுனாமி போன்றது. 

ஜனாதிபதியின் அதிகாரங்களையும் கடமைகளையும் செயற்பாடுகளையும் நிறைவேற்றவும் அமுல்படுத்தவும் தாம் இயலாதிருப்பதாகக் கருதுவதால், 2022 யூலை 13ம் திகதியிலிருந்து அவைகளை நிறைவேற்ற தமக்குரிய அதிகாரத்தின் வாயிலாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதாக கோதபாயவின் அறிவிப்பு சபாநாயகருக்குக் கிடைத்ததையடுத்து நாடெங்கும் பரபரப்பு உருவானது. ரணிலுக்கு எதிரான போராட்டம் களை கட்டியது.

பதில் ஜனாதிபதி என்ற அதிகாரத்தில் அவசரகால சட்டம், ஊரடங்கு என்பவற்றை ரணில் பிரகடனம் செய்தார்.படையினர் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்தனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இயங்கிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்செயலிலும், அரச சொத்துகளை அழிப்பதிலும் நிலைமை தொடருமானால் போராட்டத்துக்கான தங்கள் ஆதரவை நிறுத்தவேண்டி வருமென எச்சரித்தது. 

போராட்டங்கள் அமைதியாகின. தாம் பதில் ஜனாதிபதி என்பதால் சகலரும் ஏற்றுக் கொள்ளும் புதிய பிரதமரை நியமிக்குமாறு சபாநாயகரிடம் ரணில் கோரிக்கை விடுத்தார். நிகழ்கால அரசியல் ஆடுகளத்தில் இதுதான் உச்சக் கட்டம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் எதுவுமே வெற்றிபெற முடியாத நிலை. ஒரு கதிரைக்கு இவர்களுள் பலர் போட்டி. இதற்கிடையில் ரணிலைப் பதவி நீக்க நம்பிக்கையில்லாப் பிரேரணை வரப்போவதாகவும் அறிவிப்பு. 

இந்த நெருக்கடி நிலையில் கோதபாயவின் பதவி விலகல் கடிதம் சபாநாயகருக்கு 14ம் திகதி கிடைத்ததாக ஒரு செய்தி சொல்ல, அது போலிக் கடிதமென இன்னொரு செய்தி சொல்கிறது. அப்படியென்றால் கூடு விட்டுக் கூடு பாய்ந்து திரியும் கோதபாய தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்கப் போகிறாரா?

இலங்கைக்கு உள்நாட்டில் ஒரு ஜனாதிபதி, வெளிநாட்டில் ஒரு ஜனாதிபதி. இதுதான் கோதாவின் நாடகம், ரணிலின் சாணக்கிய விவேகம்.

ஓடு மீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருந்த ரணிலுக்கு ஜிம்கானா சுவீப் அதிர்~;டம். அசைக்க முடியாதவர் என்றிருந்த இரும்பு மனிதர் அகதி வாழ்க்கைக்கு நாடு விட்டு நாடு பாய்ந்து கொண்டிருக்கிறார். தருணம் பார்த்து சரியாக காய் நகர்த்த லாயக்கற்ற ச(ர்)வகட்சித் தலைமைகள் தங்களுக்குள் அடிபட்டுத் தள்ளாடுகின்றன. 

அடுத்தது என்ன? பதவிகளில் இருப்பது யார்? இவர்களை நியமிப்பது யார்? இவர்களை அகற்றுவது யார்? யாருக்குத் தெரியும்?

No comments