மீளுருவாக்கம்:புலனாய்வுடன் புலம்பெயர் சிலர்:அரசியல் கைதி சுலக்சன்! ஈழத்தில் தேசிய இனமாகிய தமிழினம் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட யுத்தம் மௌனிக்கப்பட்டு பதின்மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் ஆயுதப் போராட்டம் உருவாக காரணமான இருந்த காரணிகள் எல்லவம் இன்னமும் அப்படியே தான் இருக்கின்றன. யுத்தத்தின் பின்னரான காலங்களில் தமிழ் மக்கள் மீது பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஆட்சியாளர்களால் வலிந்து திணிக்கப்பட்டு வருவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவ்வாறான பிரச்சினைகளில் முதன்மையானதும் முக்கியமானதுமாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினையாக  தமிழ் அரசியல் கைதிகளினுடைய விவகாரம் காணப்படுகின்றது. 

போர் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்த காலத்திலும் அதன் பின்னரான காலகட்டங்களிலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு ஏதாவதொரு வகையில் உதவியவர்கள் மற்றும் புலிகளின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் சிலர் நீதிமன்றங்களினால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டும் உள்ளனர். துமிழ் அரசியல் கைதிகள் பதின்மூன்று தொடக்கம் இருபத்தேழு வருடங்களாக விடுதலையின்றி சிறைக்கம்பிகளுக்குப்பின்னால் வாழ்ந்து வருகிறார்கள். 

கைது செய்யப்பட்ட, அல்லது சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூக மயப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனாலும் சிறை வைக்கப்பட்டிருக்கும் இந்த தழிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் வேண்டுமென்றே காட்டப்பட்டுவரும் நீண்ட காலதாமதத்துக்கு, அரசினால் இலக்கு வைக்கப்பட்ட நோக்கங்கள் ஏதாவது இருக்கின்றதா?  ஏன்ற சந்தேகமும் எழுகின்றது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக இலங்கை அரசினால் பல தடவை உறுதி மொழிகள் வழங்கப்பட்ட போதும் அவை நிறைவேற்றப் படாமல் தொடர்ந்து வருவதானது தமிழ் அரசியல்  தலைமைத்துவங்களின் அரசியல் தோல்வியாகவே கருத முடிகின்றது. 

மொழிப்பிரச்சினைனோடு தோற்றம் பெற்ற தமிழர் உரிமைப் போராட்டம், ஆரம்பத்தில் அகிம்சை வழியான ஒரு ஜனநாயகப் போராட்டமாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தது. அவ்வாறான அகிம்சை போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது சிங்கள பேரினவாத அரசினால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு அரச காவலர்களைக் கொண்டு அகிம்சை வழியில் போராடியவர்களை கைது செய்து சிறைகளில் அடைத்து தமிழர்களுடைய  நியாயமான உரிமைப்போராட்டத்தை ஆரம்பத்திலேயே நசுக்குவதற்கு முயன்ற வரலாறு இன்று வரை தொடர்கின்றது.

தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் நோக்குடன் அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் தமிழர்கள்  முன்னெடுத்த ஜனநாயக ரீதியிலான அகிம்சைப் போராட்டங்கள் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைகளாலும் தமிழர் உரிமைப் போராட்டமானது தனது வடிவத்தை மாற்றி தமிழ் இளைஞர்களால் அது ஒரு ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டமாக மாற்றப்பட்டது. கூடவே, தமிழ் மக்களின் விடுதலைக்காக பல தமிழ் இளைஞர்கள் தம்மை அர்ப்பணிக்க அணி அணியாக முன்வந்திருந்தார்கள்.

இந்த தமிழ் இளைஞர்களின் ஆயுதமேந்திய அரசியல் போராட்டத்தை நசுக்குவதற்காக அன்றைய ஜனாதிபதி து.சு. ஜெயவர்த்தன  அவர்கள் 1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தைக் (தற்காலிக ஏற்பாடு) கொண்டு வந்தார். தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை ஒரு பயங்கரவாதமாக காட்டுவதற்கும் தமிழ் இளைஞர்களை சிறைப்படுத்தி தமிழர் உரிமைப் போரை இல்லாமல் செய்வதுமே அதன் நோக்கமாக  இருந்தது. இரண்டு வருடங்களுக்கு மாத்திரம் தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட இச்சட்டமானது கால நீடிப்பு செய்யப்பட்டு 43 ஆண்டுகளாக தொடர்ந்து இன்றுவரை அமுலில் இருந்து வருகிறது. 

எழுபதுகளின் பிற்பகுதியில் இருந்து எண்பத்தேழு வரையான காலப்பகுதியில் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல இளைஞர்கள் இலங்கையின்  சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள். பலர் திட்டமிட்ட சிறைக் கலவரங்களின் போது கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்கள். எஞ்சிய அனைத்து ஆயுத இயக்கங்களைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளும்  இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின் ஜனாதிபதி து.சு ஜெயவர்த்தன  அவர்களால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்பு பட்டவர்களுமே தமிழ் அரசியல் கைதிகளாக இன்றுவரை  தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்

மீண்டும் 2002.02.22 அன்று புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் சிலர் கைதிகள் பரிமாற்றத்தின் ஊடாக விடுதலை செய்யப்பட்டார்கள். எட்டு இராணுவம், பதினேழு தமிழ் அரசியல் கைதிகள். (இவர்களில் மூவர் பெண்கள்) பல Áற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்கள். சமாதான காலத்தில் மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர்  ஆயிரக்கணக்கானவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு éசா மற்றும் வெவ்வேறு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள்.

இவ்வாறு தடுத்த வைக்கப்பட்டிருந்தவர்களை  சித்திரவதைக்குட்படுத்தி, அவர்களை அச்சுறுத்தி வாக்குறுதிகள் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை பெற்று கொண்டார்கள். (பயங்கரவாத தடைச்சட்டத்தின் சில சரத்துக்கள் தமக்கு சாதகமாக்கி) அநேகமான வாக்கு மூலங்கள் சிங்கள மொழியில் பெறப்பட்டதாகவே காணப்பட்டன. இவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையவர்களுக்கு சிங்கள மொழி பேசவோ, எழுத மற்றும் வாசிக்கவோ தெரியாத நிலையில் இவ்வாறு பெறப்பட்ட வாக்கு மூலத்தை பிரதான சான்று பொருளாக கொண்டு Áற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளுக்கெதிராக இலங்கையில் உள்ள பல மேல் நீதி மன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீண்ட கால தடுப்பு, மற்றும் பல வருட விளக்க மறியலின் பின்  வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சிலர் விசாரணைகளின் பின்னர் குற்றமற்றவர்கள் என நீதி மன்றங்களினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட அளவிலானவர்கள் தண்டனைகக்கு உள்ளாக்கப்பட்டதோடு மேலும் பலர் தமக்கெதிரான வழக்குகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு வசதிகள் இல்லாத காரணங்களால் தமக்கெதிரான குற்றச்சாட்டுக்களை நீதி மன்றில் ஏற்றுக்கொண்டு சிறிய அளவிலான தண்டனைகளைப் பெற்று தமது வழக்குகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்கள். தற்போது மீதமாக 48 தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் இருந்து வருகிறார்கள். இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். விளக்கமறியல்கைதிகள் 23,  தண்டனைபெற்ற கைதிகள் 12, மேன்முறையீட்டுக்கைதிகள் 13.விளக்கமறியல் கைதிகளாக தற்போது 23 தமிழ் அரசியல் கைதிகள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் அநேகமானவர்களுக்கு பிரதானமாக குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் தான் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. ஒரு மேல் நீதி மன்றினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வேறு ஒரு நீதி மன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சிலருக்கு ஒரு நீதி மன்றினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை அடிப்படையாக் கொண்டு நீதிமன்றில் வேறு புதிதாக வழக்கு தாக்கல் செய்யப்படுவதும் தொடர்கின்றது.

விளக்கமறியலில் உள்ள அரசியல் கைதிகள் பலர் 13 ஆண்டிற்கு மேலாகவும் சிறைக்கைதிகளாக இருந்துவருகிறார்கள். . இவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளுக்குரிய தண்டனைக்காலமாக பெரும்பாலும் 5 தொடக்கம் 20 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனையே காணப்படுகிறது. இவர்களுக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கூட ஆகக்கூடிய தண்டனைக்காலமாக 20 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனையானது வழங்கப்படலாம். அவ்வாறு 20 ஆண்டுகள் என்பது சிறைச்சாலை சட்டத்திற்கமைய 13 வருடங்களை நிறைவு செய்தவுடன் விடுதலையாகலாம். மேலும் கைதிகளுக்கு நன்நடத்தை அடிப்படையில் விடுமுறையில் வீட்டுக்குச் செல்லும் முறை (ர்ழஅந டநயஎந) காணப்படுகிறது. அவ்வாறு மூன்று தடவைகள் செல்ல முடியும். ஒவ்வொரு தடவையும் சென்று வரும்போதும் தண்டனைக் காலத்தில் சிறிது காலம் குறைக்கப்படும். அவ்வாறான கைதிகள் குறிப்பிட்ட தண்டனை காலத்திற்கு முன்னர் விடுதலை ஆகக் கூடிய சந்தர்ப்பமும் காணப்படுகிறது.  

இவ்வாறு பல அரசியல் கைதிகள் தமது குற்றச்சாட்டுக்கு வழங்கப்படக்கூடிய தண்டனைக் காலத்திலும் பார்க்க கூடியகாலம் விளக்க மறியலில் வைத்திருக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு பல வருடங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள் பலர், நீதிமன்றங்களினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேகத்தின் பேரில் சிறைக்குள் தமது இளமைக்காலத்தை இழந்தவர்கள் அவர்கள் அனுபவித்த வேதனைகள், துன்பங்கள் என்பவற்றுக்கு எதுவித நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. வழங்கவும் முடியாது. இவற்றுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற போதிலும் அதற்கான வசதி வாய்ப்புக்கள் எல்லோருக்கும் எட்டுவதில்லை. அவ்வாறு சட்ட நடவடிக்கை பெற்றுக் கொள்ள முயற்சித்தவர்கள் பலர் வேறு வகையான பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்துள்ளார்கள். அவ்வாறான முயற்சிகளின் மூலம் அதற்கான நிவாரணம் கிடைக்காது என்பதற்கு சந்தேகத்தின் பேரால் அனுபவித்த மிக நீண்ட கொடிய சிறை வாழ்வே சாட்சியாகும். சந்தேக நபர்களாக இருந்து வரும் இக் கைதிகளின் நிலமை இவ்வாறே தொடர்ந்து வருகிறது. 

மேலும் தண்டனை பெற்ற கைதிகளாக 12 பேர் இருந்து வருகின்றார்கள். இவர்களில் 05 தொடக்கம் 200 வருடங்கள் வரை சிறைத்தண்டைனை பெற்ற 09 பேரும் இரண்டு ஆயுள் தண்டனை கைதிகளும், 01  மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட கைதியும் உள்ளார்கள். இவர்கள் அரசினால் சாதாரணமாக வழங்கப்படும் பொது மன்னிப்புகளுக்குள் உள்வாங்கப்படுவதில்லை. அதே போன்று ஏனைய கைதிகளுக்கு விசேடமாக வழங்கப்படுகின்ற தண்டனைக் குறைப்பும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. 

பொதுவாக ஒரு கைதிக்கு நீதி மன்றினால் ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டால் அவர் சிறைச்சாலைச் சட்டத்திற்கமைய அவர் 8 மாதங்களும் 10 நாட்களும் தண்டனையை அனுபவிப்பார். இது சாதாரணமாக எல்லா கைதிகளுக்குமான நடைமுறை. அரசியல் கைதிகளுக்கும் அவ்வாறே. மேலும் சிலருக்கு சிறைத்தண்டனையுடன் மேலதிகமாக புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. தண்டனைக்காலம் முடிவடைந்த பின்னர் ஒரு வருடம் புனர் வாழ்வு பெறுதல் வேண்டும். இவ்வாறான கைதிகளுக்கு விடுமுறையில் செல்லும் வசதி செய்து தரப்படுவதில்லை. அதே போல் கடந்த வருடம் 16 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி அவர்களால் விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. மேற்படி காரணங்களினால் இரு கைதிகளுக்கு அவ்வாய்ப்பு கிடைக்காலே போய்விட்டது. 

மேலும் மேன்முறையீட்டுக் கைதிகளாக 13 பேர் காணப்படுகிறார்கள். இவர்களுள் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 09 பேர், சிறைத்தண்டனை பெற்றவர்கள் 03 பேர், மரண தண்டனை பெற்ற ஒருவருமாக மொத்தமாக 13 பேர் மேன்முறையீட்டு கைதிகளாக காணப்படுகின்றனர். 

இவர்களது மேன்முறையீட்டு வழக்கானது மிக நீண்ட காலமாக விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது 3-7 மதாங்கள் வரை தவணை இடப்பட்டே வருகின்றது. பல வருட தடுப்புக்காவல் மற்றும் மேலும் சில வருடங்கள் விளக்கமறியல், மேலதிகமாக மேன்முறையீட்டு காலத்திலும் நீண்ட சிறை வாழ்க்கை என இவர்களது வாழ்வின் பெரும் பகுதியை சிறைக்குள் கழித்த வண்ணம் உள்ளார்கள். 

இவ்வாறு வேதனைகளோடும் வலிகளோடும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சிறைக்குள் பல உண்ணாவிரதப் போராட்டங்களை பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் முன்னெடுத்திருந்தார்கள். அவற்றின் பயனாக சிறு சிறு முன்னேற்றங்கள் கிடைத்தாலும் அதன் வீச்சானது குறிப்பிட்ட எல்லையைத் தாண்ட முடியாமல் போய்விட்டது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலர் அவர்களை தமது சுயலாப அரசியல் நலனுக்காக பயன்படுதியதோடு மட்டுமல்லாது, அரசின் முகவர்களாக மாறி தமிழ் அரசியல் கைதிகளுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்கள். பின்னர் தாம் வழங்கிய வாக்குறுதிகளை மறந்தே விட்டார்கள் என்பதும் பெருந்துயரமே. இவர்களே தங்களை தமிழர்களின் மீட்பர்களாக காட்டிவருகிறார்கள்.

அரசியல் கைதிகளுடைய  தசாப்தங்கள் கடந்த சிறை வைப்பானது அவர்களையும் அவர்களது குடும்பத்தவரையும் கடுமையான உடல் உள ரீதியான தாக்கங்களுக்கு உட்படுத்தியுள்ளது. தமது அன்புக்குரிய தந்தையை, தாயை, சகோதரனை, சகோதரியை, கணவனை என பல வருடங்கள் பிரிந்து வாழும் அவல நிலையை  ஏற்படுத்தியுள்ளது. மற்றும் ஒரு சில அரசியல் கைதிகளின் குடும்ப வாழ்வையும் சிதைத்துள்ளதோடு, அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியகியுள்ள நிலமையும் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்களிடம் இழப்பதற்கு தமக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தவிர வேறெதுவும் இல்லை. நெடிய சிறை வாழ்வானது அவர்களை நித்திய நோயாளிகளாக மாற்றியுள்ளது. இவர்களில் 60 வயதினைக் கடந்த 8 பேரும், போரினால்  பாதிப்புக்குள்ளான 06 பேரும், புற்று நோயாளி ஒருவரும், தொற்றா நோய்களுக்குள்ளான சிலரும் உள்ளனர் என்பதும்தான் துன்பியலின் உச்சம். 

இவர்கள் தமக்குத் தேவையான மருந்து மற்றும் போசாக்கான உணவினைப் பெற்றுக் கொள்வதிலும் இடர்பாடுகளை எதிர் கொண்டு வருகிறார்கள். யுத்த மௌனிப்பிற்குப் பின்னர் மாத்திரம் 10ற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் நோய்வாய்ப்பட்டு மரணித்துள்ளார்கள். 1970 – 2012 வரை பல அரசியல் கைதிகள் சிறைக் காவலிலும் வேறு பல தடுப்பு காவலிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டார்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது அதன் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை மையமாக வைத்தே கட்டமைக்கப்பட்டிருந்தது. புலிகள் அமைப்பில் மாற்றுத் தலைவர்களோ, இரண்டாம் தர தலைவர்கள் என யாருமே இல்லை. எனவே நாட்டு மக்கள் எதுவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. நாட்டின் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்ப்பட்டு  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே புலிகளின் மீள் எழுச்சி என்பது ஒரு கனவு என சிங்கள அரசியல் தலைவர்;களும், தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய தரப்பினரும் கூறி வந்தனர். கூறி வருகிறார்கள்.  

இவ்வாறான சூழ்நிலையில், 2013- இற்கு பின்னரான காலப்பகுதியில் ஐ. நா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசிற்கு எதிரான போர் குற்றங்கள் , மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இலங்கைக்கு எதிராக பல பிரேரனைகள் கொண்டு வரப்பட்டது. மேலும் சரணடைந்த புலிகளைக் கொலை செய்தார்கள். அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்தார்கள். பல Áற்றுக்கணக்காணவர்களை வலிற்து காணமல் போகச் செய்தார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகளும், சாட்சிகளும் சர்வதேசத்திலும், சர்வதேச ஊடகங்களிலும் பேசு பொருளாக இருந்தது. இச் சந்தர்ப்பத்தில் பல நாடுகளால் இலங்கைக்கு எதிராக பல நெருக்கடிகள் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. இதே போன்று இலங்கையில் அமுலில் உள்ள உலகின் மிக மோசமான, சர்வதேச சட்ட விதிகளையும், மனிதாபிமானத்தையும் , மனித உரிமையையும் மீறுகின்ற பயங்கரவாத தடைச்சட்டத்தின் மீது அவர்களின் கவனமும் சென்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அல்லது சர்வதேசத்திற்கமைய மாற்றம் செய்யுமாறு உலகநாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கின. 

இச் சட்டமானது தமிழ் மக்களை தொடர்ந்தும் தமது இனவாத அடக்கு முறைக்குள் வைத்திருப்பதற்கும், அரசின் பிழையான கொள்கைகளை விமர்சிப்பவர்களை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் அரசியல் பழிவாங்கல்களை மேற்க்கொள்வதற்குற்கும் இச்சட்டமானது பேரினவாத அரசிற்கு என்றும் தேவையானதொன்றாகவே இருந்து வருகின்றது. எனவே இச் சட்டத்தினைத் தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதற்கும், சிங்கள மக்கள் மத்தியில் சரிந்து வரும் தமது செல்வாக்கை சரி செய்யவும் புலிகளின் மீள் உருவாக்கம் அல்லது புலிகள் உயிர்ப்;புடன் இருக்கிறார்கள் என தேசிய, சர்வதேச அளவில் ஒரு செய்தியை வழங்க வேண்டிய தேவை தொடர்ந்து வந்த அரசுகளுக்கு அவசியமாய் இருந்தது. இதன் காரணமாக திட்டமிட்ட வகையில் புலிகளின் மீள் உருவாக்கம் என்ற போர்வையில் தமிழர்கள் மீதான கைது வேட்டை ஆரம்பமாகியது. இலக்காக யுத்தம் இடம் பெற்ற போது தமது உறவுகளைப் பறி கொடுத்தவர்கள், புலிகள் அமைப்பில் இருந்து உயிர் நீத்தவர்களது உறவுகள், அவர்களை நினைவுகூர்ந்தவர்கள், புலிகளின் தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாடியவர்கள். மற்றும் புலிகளின் தலைவரின் புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பதிவிட்டவர்கள், பகிந்தவர்கள், புலிகளின் பாடல்களை இசைத்தவர்கள், கேட்டவர்கள் என அனைவரும் முதலில் புலிகளாக அடையாளம் காணப்பட்டு புலிகளை மீள ஒருங்கிணைத்தார்கள் என்றும் குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டார்கள். மேலும் வட கிழக்கில் உள்ள தமிழ் இளைஞர்கள் மற்றும் பதின்ம வயதுடையவர்களை இலக்கு வைத்து அவர்களின் வறுமை மற்றும் இன உணர்வினை Àண்டி இந்த புலிகள் மீள் உருவாக்க வலைக்குள் சிக்கவைக்கப்பட்டு பின்னர் இவர்களை கைது செய்து சிறைவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பலர் யுத்தம் இடம் பெற்ற காலங்களில் சிறுவர்களாக இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகள் அமைப்பில் இருந்ததாக கூறப்படும் சிலர், பின்னர் இராணுவ புலனாய்வாளர்களுடன் சேர்ந்து முன்னாள் போராளிகளைக் கைது செய்வதற்கும், வேறு பல உதவிகளையும் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மேற்படி செயற்பாட்டுடன் இவர்களுக்கும் தொடர்புள்ளதாக கூறப்பட்டாலும் அவர்கள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. 

மேலும் சிலர் புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு இந்த செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருப்பதும் தெரியவருகின்றது. இந் நிலையில் தமிழர் தாயகத்தில் ஒரு தமிழர் ஏதாவது ஆயுதத்துடன் பிடிபட்டால், அதாவது வேட்டை துப்பாக்கி ஆயினும் சரி அவர் மீது உடனடியாக பயங்கரவாத தடைச்சட்டம் பாய்ச்சப்பட்டு அவர் புலியாக மாற்றப்படுவார். ஆனால் நாட்டின் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பாகங்களில் வெளிநாட்டு தயாரிப்பு அதி நவீன ஆயுதங்களுடன் யாராவது கைது செய்யப்பட்டால் அவர்களுகெதிராக சாதாரண குற்றவியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பாதுகாப்பு தரப்பினரைப் பொறுத்தவரை ஒரு தமிழ் சிறுவனோ, சிறுமியோ பட்டாசு வெடித்தால் கூட அவர் புலி என அடையாளப்படுத்ப்படும் நிலையே காணப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்படும் தமிழ் இளைஞர் யுவதிகளை இலங்கைக்கு எதிராக சர்வசே ரீதியாக நெருக்கடிகள், அழுத்தங்கள் ஏற்படும் போது அரசு தாம் தமிழர்களின் விடயத்தில் கரிசனை காட்டுவதாக காண்பிப்பதற்கு இந்த புலிகளின் மீள் உருவாக்கம் என்ற போர்வையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை அல்லது பிணைவழங்கி விடுவித்து விட்டு தாம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக உள்ள கைதிகளை விடுதலை செய்தது போன்றதான விம்பத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதனை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக சில தமிழ் அமைப்புக்களும் அதைச் சார்ந்தவர்களும், சில ஊடகங்களும் செய்திகளை வெளியிடுவதானது அது உண்மையாக அரசியல் கைதிகளாக மிக நீண்ட காலமாக உள்ளவர்களுக்கான நீதி மறைக்கப்படுவதோடு, மறுக்கப்படவும் காரணமாக அமைகின்றது. 

ஏன் இவர்களை அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்துவதானது தவிர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது அரசியல் கைதிகளாக உள்ளவர்களை அரசு அவர்களை அரசியல் கைதிகளாக ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறது. காரணம் தமிழர்களின் உரிமைப் போராட்டமானது ஒரு அரசியல் போராட்டம் என்ற உண்மையினை தான் ஏற்றுக்கொண்டதாதாகிவிடும் என்பதனால் தான் தமிழர் உரிமைப் போரை அது தொடர்ந்தும் பயங்கரவாதமாக அடையாளப்படுகின்றது. இன்றைய காலத்தில் தமிழ் மக்களை தம் உயிரிலும் மேலாக கருதி அதற்காக தம்மை அர்ப்பணித்தவர்களையும், அவர்கள் சார்ந்தவர்களையும் கொச்சப்படுத்தும் செயற்பாடுகள் சில தேசிய விரோதிகளால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  வரலாறானது உண்மையினை என்றும் மறப்பதுமில்லை மறுப்பதுமில்லை. எனவே எம் மக்கள் மத்தியில் போராளிகள் யார் அரசியல் கைதிகள் யார் என்ற தெளிவு எப்போதும் உண்டு. அதனை யாராலும் அகற்றி விட முடியாது.

அதற்காக தற்போது சிறையில் உள்ள இந்த 48 பேரும் தான் அரசியல் கைதிகளா? என்றால் இல்லை. தமிழினம் தனது அரசியல் உரிமையை பெற்றுக் கொள்ளும் வரை தமிழர் உரிமைப் போராட்டமானது தொடர்ந்தே வரும். அவ்வாறான நிலையில் அரசியல் கைதிகள் தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக மீளுருவாக்கம் என்ற பெயரில் கைது செய்யப்பட்டவர்களுக்குள் தவறான நபர்களும் உள்ளனர். அவர்கள் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவ்வாறானவர்களை அரசியல்கைதிகளிலிருந்து நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் எமது உரிமைப் போராட்டத்தையும், தற்போது அரசியல்கைதிகளாக உள்ளவர்களையும் மலினப்படுத்துவதாக அது அமைந்துவிடும். 

ஆனாலும்  மீளுருவாக்கம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் இளைஞர்களின் விடுதலையை அல்லது பிணை வழங்குவதனை தடுப்பதல்ல நம் நோக்கம். உண்மையில் இவர்கள் கைது செய்யப்பட்டமையே தவறு. அவர்களில் பலருக்கு வழக்கு தாக்கல் கூட செய்ய முடியாது. அவர்களை கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்கள் மீதான தொடரும் ஒரு அடக்குமுறையின் வடிவமே ஆகும். மற்றொரு வகையில் இன்னொரு இன அழிப்பின் அம்சமாகவும் இருந்து வருகின்றது. எனவே ஏனையவர்களை விடுதலை செய்தது போன்று இவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். 

2009ற்கு பின்னரான காலங்களில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலையை வலியுறுத்தி மதத்தலைவர்கள், தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்கள், பொதுஅமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் இன உணர்வாளர்கள் என பலர் பல்வேறுபட்ட போராட்டங்கள்; கடையடைப்பு, கவனயீர்ப்பு, உண்ணாவிரதம், பேரணி என ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை தொடரச்சியாக இன்றுவரை முன்னெடுத்து வருகிறார்கள். இவ்வாறான போராட்டங்கள் தான் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அன்று தொட்டு இன்று வரை ஒரு உந்து சக்தியாக இருந்து வருகின்றதனை அவதானிக்க முடிகின்றது. அதேபோல் ஏனையவர்களும் ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒன்று பட்ட சமூகமாக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஆனாலும் ஒரு சிலர் இவர்களை தமது வாழ்வாதாரமாகக் கொண்டு செயற்படுவதனையும் அவதானிக்க முடிகிறது. 

மேலும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விவகாரமானது 2015ம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் பல வாக்குறுதிகளை வழங்கிய போதும் நல்லாட்சி அரசாங்கத்தில் ஒருவரைத் தவிர வேறு எவரும் விடுதலை செய்யப்படவில்லை. அவர் தனது பதவிக் காலத்தின் முதல் ஆண்டு நிறைவு தினத்தில் தன்னைக் கொல்ல வந்தவர் என்ற குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுக் கொண்டிருந்த ஜெனிபன் என்ற ஒரு கைதியை மாத்திரம் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்திருந்தார். ஒரு சிலர் வழக்கு நடவடிக்கைள் மூலம் விடுதலையானார்கள். அவ்வாறு வழக்குகளின் ஊடாக விடுதலை பெற்றவர்கள் அல்லது தண்டனை பெற்று விடுதலையானவர்களை நாம் தான் விடுதலை செய்வதாக அப்போது அரசினைத் தாங்கிப்பிடித்து கொண்டிருந்தவர்கள் தற்போது பொய் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். 

அதன் பின்னர் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்~ அவர்கள் தனது தேர்தல் வாக்குறுதிகளாக குற்றச்சாட்டுக்குள்ளாகின்ற இராணுவ மற்றும் புலி உறுப்பினர்களுக்கு புனர் வாழ்வளித்து விடுதலை செய்வதாக கூறியிருந்தார். ஆனாலும் அவ்வாறான செயற்பாடு இடம்பெறவில்லை. பின்னர் தனது விசேட பொதுமன்னிப்பு  ஊடாக 16 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்திருந்தார். பின்னர் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் மற்றும் அரசியல் நிலமைகளால் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் தமது சுய லாப அரசியலுக்கு அப்பால் சென்று நல்லிணக்க முயற்சியாக இந்த சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அண்மையில பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அதனால் இந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதுவித நிவாரணமும் கிடைக்கவில்லை. 

தற்போதைய பொருளாதார நெருக்கடி அரசியல் கைதிகளை வெகுவாக பாதித்துள்ளது. இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பாரிய சொல்லனா துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள். இவர்களது இத் துயர வாழ்வை முடிவுக்கு கொண்டுவர உண்மையாகவே தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்க முன் வர வேண்டும். 

ஜனாதிபதியும் அரசாங்கமும் இவர்களின் விடுதலை தொடர்பில் கரிசனை காட்டி உடனடித் தீர்வாக மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வரும் தமிழ் அரசியல்கைதிகளுக்கு பிணை வழங்கி விடுதலை செய்ய வேண்டும். அதேபோன்று மேன் முறையீட்டுக் கைதிகளாக உள்ளவர்களுக்கும் தகுந்த பிணை வழங்கி விடுதலை செய்வதோடு அவர்களது மிகநீண்ட கால சிறை வாழ்வை கவனத்தில் கொண்டு அவர்களுக்கெதிரான வழக்குகளை சுமூகமான முறையில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மேலும் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களுக்கு தற்போதைய நெருக்கடி காலத்தைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். மேற்படி செயற்பாடானது விரைவாக மேற்கொள்ப்பட வேண்டும். தற்போதைய நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலையானது அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் ஆறுதலாகவும் துணையாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களை மீளப்பெற்று அரசு அவர்கள் அனைவருக்கும் குறுகிய கால புனர்வாழ்வு அளித்தாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே இன ஐக்கியத்தையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நேசிக்கும் ஒவ்வொரு இலங்கைப் பிரஜையின் எதிரபார்ப்பாகும். சட்டத்தின் பிரகாரம் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனானதாக கருதப்படுகின்றது. இங்கு மிக மிக நீண்ட காலமாக தாமதிக்கப்படும் இந்த  தமிழ் அரசியல் கைதிகளுக்கான நீதி இனியாவது கைகூடுமா?No comments