பிரான்சில் இடம்பெற்றுமுடிந்த தமிழ்மொழிப் பொதுத் தேர்வு – 2022

தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும்

அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில் கடந்த 04.06.2022 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.

பாரிசையும் பாரிசைச் சுற்றியுள்ள (Ile de france) ) மாணவர்களுக்கான தேர்வு வழமைபோன்று Maison des examens 7 Rue Ernest Renan 94110 Arcueil என்ற முகவரியில் அமைந்துள்ள பிரமாண்டமான மண்டபத்தில் இடம்பெற்றது.

பிற்பகல் 13.00 மணியளவில், அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை மேலாளர் திருமதி நகுலேசுவரி அரியரட்ணம், தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு. மகேஸ் மற்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்களின் முன்னிலையில் ஒப்பமிடப்பட்டு தேர்வுத்தாள் பொதி திறக்கப்பட்டது. தேர்வு தொடர்பான அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து தேர்வு ஆரம்பமானது.

பிரான்சில் இம்முறை 5 ஆயிரம் வரையான மாணவர்கள் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். சுமார் 350 இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், 500 இற்கு மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் தேர்வுக்கடமையைத் திறம்பட நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இல்-து-பிரான்சின் (Île-de-France) 55 தமிழ்ச்சோலைகளிலும், தனியார் பள்ளிகளிலும் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கும் தனித்தேர்வர்களாக விண்ணப்பித்தோருக்குமான புலன்மொழிவளத் தேர்வுகள் கடந்த மாதம் 14, 15, 22 ஆகிய நாட்களில் சிறப்பாக நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.

அதைவிட நீஸ்(Nice), போசோலை (Beau Soleil), போர்தோ (Bordeaux) , முலூஸ் (Mulhouse), ஸ்ராஸ்பேர்க் (Strasbourg), நெவர் (Nevers), துலுஸ் (Toulouse), தூர்(Tours), ஜியான் (Gien), ரென் (Rennes) ஆகிய தமிழ்ச்சோலைகளில் இருந்து விண்ணப்பித்தோருக்கும் வெளிமாகாணங்களில் இருந்து தனித்தேர்வராக விண்ணப்பித்தோருக்குமான புலன்மொழிவளத் தேர்வுகளும் கடந்த 04-06-2022 இல் நடைபெற்றது.

வெளிமாகாணங்களில் இருந்து விண்ணப்பித்தோருக்கான எழுத்துத்தேர்வு அந்தந்த இடங்களிலுள்ள தமிழ்ச்சோலைகளில் நடைபெற்றன.

இந்தத்தேர்வு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் 20வது தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை பிரான்சில் சீரற்ற காலநிலை நிலவிய போதும், மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தேர்வில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது.

No comments