ரணில் - பசில் மோதலுக்கு நடுவே கோதாவின் நிறைவேற்று அதிகாரத்தை கண்டறிய முனைகிறது நீதித்துறை! பனங்காட்டான்


ரணில் சமர்ப்பித்துள்ள 21வது அரசியல் திருத்த வரைபு, ஜனாதிபதி கோதாவின் அதிகாரத்தை நறுக்கவில்லை. மாறாக, பசிலின் பதவியை இலக்கு வைப்பதால் ரணில் - பசில் மோதல் ஆரம்பித்துள்ளது. சமவேளையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார பலத்தை துமிந்த சில்வா தீர்ப்பினூடாக கண்டறிய முனைகிறது நீதித்துறை. எதிர்பாராத சவால் இது. 

ஒன்றுக்கொன்று சோடி சேர முடியாத இரண்டு மாடுகள், ஒற்றைத் திருக்கல் வண்டியை இழுத்தால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இலங்கையின் அரச சக்கரம் உருளுகிறது என்று கடந்த வாரம் இப்பத்தியில் குறிப்பிடப்பட்டது. 

ஆனால், சமகால அரசியல் செயற்பாடுகளால் அதனைத் திருத்திக் கூற வேண்டும்போல தெரிகிறது. மூன்று மாடுகள் அல்லது அதற்கும் மேலானவை அரச யந்திரத்தை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று இழுக்க ஆரம்பித்துள்ளன. 

இதன் மறுபுறத்தில் இலங்கையின் நீதித்துறை சற்று உசாரடைந்து - நீதி என்பது நீதியாக இடம்பெற வேண்டுமென்று முயற்சி எடுப்பதுபோல காணப்படுகிறது. இதற்கு உதாரணமாக கடந்த  நாட்களில் வழங்கப்பட்ட சில நீதிமன்றத் தீர்ப்புகளையும் அதையொட்டிய அரசியல் நடவடிக்கைகளையும் பார்க்கலாம். 

மே மாதம் 9ம் திகதி கொழும்பில் வன்முறையற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது மகிந்த ஆதரவாளர்கள் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதலை தடுக்கத் தவறிய கொழும்புப் பிரதேச மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்த தென்னக்கோனை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டியவரை ஏதோ பாவம் பார்த்துப்போலும் இடமாற்ற உத்தரவு மட்டும் பிறப்பிக்கப்பட்டது. கோதபாயவின் வலதுகரமான இவர் இதுவரை இடமாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், இரண்டு வார விடுப்பில் இவர் சென்றுள்ளார். சில சமயம், அடுத்த சில வாரங்களில் ஒரு நோயாளியாக மாறி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டிவராது. 

அடுத்த விடயம் - முன்னாள் எம்.பி.யும் தற்போது வீடமைப்பு அதிகார சபையின் தலைவராகவிருக்கும் துமிந்த சில்வா சம்பந்தப்பட்டது. 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் திகதி இடம்பெற்ற உள்;ராட்சிச் சபைத் தேர்தல் நாளன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாரதலக்ஸ்மன் பிரேமசந்திர உட்பட நால்வர் கொல்லப்பட்டனர். 

இது தொடர்பாகக் கைதான துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதன் மேன்முறையீட்டிலும் இது ஊர்ஜிதம் செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி மூன்று நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பை உதாசீனம் செய்யும் வகையில், கடந்த ஆண்டு யூன் மாதம் 21ம் திகதி, பொசன் தினத்தன்று கோதபாயவின் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் இவர் விடுதலை செய்யப்பட்டார். 

நீதிமன்றத்தை மீண்டும் அவமானப்படுத்தும் வகையில் துமிந்த சில்வாவுக்கு அரச உயர்பதவி வழங்கப்பட்டது. இன்னும் சில காலம் போயிருந்தால் அவரை தேசிய பட்டியல் ஊடாக எம்.பியாக்கி அமைச்சர் பதவியையும் கோதபாய வழங்கியிருப்பார். 

ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர மற்றெல்லா அதிகாரங்களும் நிறைவேற்று ஜனாதிபதிக்கு உண்டு என்று அன்றொரு நாள் ஜே.ஆர்.ஜெயவர்த்தன சொன்னதை நம்பி அதற்கு செயல் வடிவம் கொடுத்த கோதபாயவின் முடிவு இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. 

துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பு விடுதலைக்கு இடைக்கால தடை விதித்துள்ள உயர்நீதிமன்றம் அவரை உடனடியாக கைது செய்யுமாறும், அவரின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு விசாரணையை ஒரேயடியாக செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது. 

வழமைபோன்று துமிந்த சில்வா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வலிப்பு நோய் காரணமென்று கூறப்படுகிறது. மரண தண்டனை பெற்ற காலத்திலும் பல மாதங்கள் இப்படித்தான் மருத்துவமனையில் கழித்தவர் இவர். 

மே மாதம் 9ம் திகதிய அசம்பாவிதங்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்சவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்த நீதிமன்றம் அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் இன்னமும் அவர் அதனைச் செய்யவில்லை. ராஜபக்ச குடும்ப அரசியல் அவருக்குத் துணை நிற்கிறது. 

ஜனாதிபதி அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்று விவகாரங்கள் பரிசீலிக்கப்படும் வகையில் இவ்வாறு விரிவடைந்து கொண்டிருக்கையில், அரசியல் விவகாரம் மறுதரப்பில் சூடுபிடித்து வருகிறது. 

அமைச்சரவையின் தலைவர் ஜனாதிபதி என்றாலும், ஆட்சி நடத்தும் பொதுபல சேனவின் தலைவர் பசில் ராஜபக்சவாக இருப்பதால், பிரதமர் என்ற ரீதியில் ரணில் சமர்ப்பித்த 21வது திருத்த வரைவு நாடாளுமன்றம் வருமா அல்லது கிடப்புக்குப் போகுமா என்பது தெரியாதுள்ளது. 

21ம் அரசியல் திருத்தத்தில் 19ம் திருத்தம் சரியாக இணைக்கப்படவில்லையென்றும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படவில்லையென்றும், மக்கள் கோரிக்கைக்கு மதிப்பளிக்கப்படவில்லையென்றும் ஒருபுறத்தே குரல் எழுப்பப்படுகிறது. தமிழர் தரப்பின் ஒரு பகுதியினரும் இதற்குள் அடக்கம். 

இப்போதைக்கு இது போதும், படிப்படியாக மிகுதி விடயங்களை ஏற்படுத்தி கோதபாயவை வீட்டுக்கு அனுப்பலாம் என எண்ணும் சில அரசியல்வாதிகளும் அவர்களின் கட்சிகளும் 21வது  வரைபை ஆதரி;க்கின்றன. எவ்வகையிலாவது இதனை நிறைவேற்றிவிட வேண்டுமென்பதில் இவர்கள் முனைப்பாக உள்ளனர். இவர்களுள் சிலர் தங்கள் கட்சிகளின் முடிவுகளையும் மீறி அமைச்சர் பதவிகளை பெற்று விட்டனர். 

மொட்டுக் கட்சியென பொதுவாக அழைக்கப்படும் பொதுஜன பெரமுன 21வது திருத்தததை நிறைவேற்ற அனுமதிக்காது என பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த அணிக்குத் தலைமை தாங்குபவர் பசில் ராஜபக்ச. 

21வது திருத்தத்தை நாடாளுமன்றில் தோற்கடிப்பதன் வாயிலாக ரணிலை பிரதமர் பதவியிலிருந்து கழற்றிவிடலாமென்ற வழித்தடத்தில் காரியங்களை மேற்கொண்டு வருகிறார் பசில். 

21ம் திருத்தத்தை தாம் ஆதரிப்பதாக தெரிவித்து வரும் கோதபாய, இது நாடாளுமன்றதில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இதனை பொதுஜன பெரமுன ஆதரிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். இவர் பொதுஜன பெரமுனவின் அங்கத்தவர் அல்லர் என்றும், இவரால் எவ்வாறு ஆதரவு வழங்குமாறு தங்களை வலியுறுத்த முடியுமென்றும் பெரமுனவுக்குள்ளிருந்து குரல்கள் கேட்கின்றன. 

ரணிலை கோதபாயவின் ஆள் என்றும் அவரை பிரதமராக்கியது கோதபாயவின் தனிப்பட்ட முடிவு என்றும் கூறிவரும் பெரமுனகாரர்கள், கோதபாயவின் கதிரையில் பசிலை அமர்த்தவும் தயாராகி வருகின்றனர். கோதபாயவினால் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு, பின்னர் பதவி பறிக்கப்பட்ட கடற்படை முன்னாள் அதிகாரி சரத் வீரசேகரவே இப்போது கோதபாயவின் முதலாம் எதிரியாக மாறியுள்ளார். 

இந்த முனைப்புகளுக்கு வலுவூட்டும் வகையில் - ரணிலை பிரதமராக்கியது பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே தவிர அரசியலமைப்பை மாற்றுவதற்கல்ல என்று பெரமுனவின் செயலாளர் சாகர காரியவாசம் கூறியிருப்பது இக்கட்டத்தில் கூர்மையான கவனத்துக்குரியது. 

இதற்கு சுடச்சுட பதிலளித்துள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரான றுவான் விஜேவர்த்தன. பொருளாதார உதவிகளை சர்வதேசத்திடம் பெறுவதற்கு அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகவே அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட்டது என்பது றுவானின் வாதம். ரணிலின் மைத்துனரே றுவான் (தாயாரின் சகோதரரின் புதல்வர்) என்பது நினைவிற் கொள்ளப்பட வேண்டியது. 

21வது அரசியல் திருத்த வரைபில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பிரதமர் ரணில், இவ்விடயத்தை அரசியல் கட்சிகளின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டுமென்று கூறி தமது காலுக்குள் இருந்த பந்தை ஒரேயடியாக எதிர்த்தரப்புக்கு அடித்துவிட்டார். 

மகிந்தவின் பிரதமர் பதவி துறப்பு, ராஜபக்ச குடும்பத்தினரை அமைச்சுப் பதவிகளிலிருந்து முழுமையாக நீக்கியது, பல கட்சிகளின் எம்.பிக்களை அமைச்சர்களாக நியமிப்பது, அமைச்சுகளின் செயலாளர்களை புதிதாக நியமிப்பது, உயர்பதவிகளுக்கு தாமே நியமித்த படைத்துறை அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவது என்ற எல்லாவற்றுக்கும் மூலகாரணம் என்ன?

கோதா கோ ஹோம் என்ற போராட்டமே. ஐம்பது நாட்களைக் கடந்தும் போராட்டம் தொடர்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொண்ட போராட்டக்காரர்கள் யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு நாளை நினைவு கூர்ந்துள்ளனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய ஒருவராகவே ரணிலை இவர்கள் பார்ப்பதால், கோரிக்கைகளை நிறைவேற்ற அவருக்கு ஆறு மாத அவகாசம் வழங்கியுள்ளனர். 

ஒருபுறத்தே கோதபாயவின் நம்பிக்கைக்குரியவராகவும்(?) மறுபுறத்தே போராட்டக்காரர்களின் நம்பிக்கையீனத்துக்கு உட்படாதவராகவும் இதுவரை தம்மை அடையாளப்படுத்தி நிற்கும் ரணிலை விரைவாக பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதே பசில் தலைமையிலான பெரமுனவின் பிரதான இலக்காக உள்ளது. 

அதேசமயம், இலங்கையின் நீதித்துறை ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் எந்தளவானது என்பதை கண்டுபிடிப்பதில் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. இது ஒரு விசப்பரீட்சைதான். 

இவை எல்லாவற்றையும் திசை திருப்பும் செயற்பாடுகளில் இறங்கிச் செயற்படும் பசிலை அரசியலிலிருந்து வெளியேற்ற கோ ஹோம் என்று போராட்டக்காரர்கள் இதுவரை ஏன் கேட்கவில்லை. ஆழமாக இதனை சிந்தித்துப் பார்த்தால், கொரோனா போன்ற கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று இலங்கை அரசியலில் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டுவதுபோல தெரிகிறது. 

No comments