மக்கள் வீதிகளில்:சாத்திரம் சொல்லும் ரணில்! இலங்கை முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக வெடித்துள்ளது.

எரிபொருள் வழங்கக் கோரி, இலங்கை முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தெகிவளையில் பிரதான வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால், கொழும்பு- காலி வீதியில் இரு பக்கங்களிலும் கடுமையான வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

பிரதான வீதியில் மட்டுமன்றி, குறுக்கு வீதிகளிலும் கடும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால், காலை வேளையில் காரியாலயங்களுக்கு வருகை தரவேண்டியவர்கள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லவேண்டியவர்கள் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.


தெஹிவளையில் மட்டுமன்றி, கொழும்பில் பல இடங்களிலும் ஆங்காங்கே எரிபொருள்களைக் கோரி, ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 


இதனிடையே ஏற்கனவே அறிவித்ததற்கு அமைய எதிர்வரும் மூன்று வாரங்கள், எரிபொருள் குறித்த கடினமான காலம் என்றும் நாடு முழுவதும் தற்போது காணப்படும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகளில் இது தெளிவாகத் தெரிகிறது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டதுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,


தற்போது நாட்டை வந்தடைந்துள்ள 3,500 மெற்றிக்தொன் எரிவாயு, வைத்தியசாலைகள், ஹோட்டல்கள் மற்றும் தகன சாலைகளுக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


அதற்கு பின்னர் வரும் கப்பல்கள் மூலம் 4  மாதங்களுக்கான எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள 14 நாட்கள் செல்லும் என்றும் அதற்கிடையில்  எரிவாயு தொகையை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இரண்டு தினங்களில் வரவுள்ள 40,000 மெற்றிக் தொன் எரிபொருள் கப்பலுடன் மேலும் பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்கள் 2 உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவை மாத இறுதி வரை போதுமானது என்றார். 


தற்போதுள்ள எரிபொருள் 7 நாட்களுக்கு போதுமானது என்றும் மின்சார உற்பத்தி, போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதற்கிடையில் 16ஆம் திகதி  40,000 மெற்றிக் தொன் எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடையும் என்று குறிப்பிட்டார்.


அதன் பின்னர், இந்தியாவுடனான புதிய கடன்வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் 4 மாதங்களுக்கு எரிபொருள் கிடைக்கும் என்றார்.


No comments