ஊடகவியலாளர் படுகொலை:9பேர் மீள கைது!



ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ புலனாய்வாளர்கள் 9 பேருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை நிரந்தர சிறப்பு மேல் நீதிமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

கிரித்தலை இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி லெப்டினட் கேர்ணல் சம்மி குமாரரத்ன உட்பட 9 புலனாய்வாளர்களின் பிணையை சிறப்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

புலனாய்வு அதிகாரிகள் குழு, வழக்கின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஏற்பட்டுள்ள சந்தேகத்தை அடுத்தே நீதிமன்றம் பிணையை இரத்து செய்துள்ளது.

பிரகீத் கிரித்தலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான திருக்குமார் என்பவரின் சாட்சியத்தை மேல் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்த போதே சந்தேகம் எழுந்துள்ளது.

பிரகீத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை மற்றும் கொலை களத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பில் நேரில் கண்டிருந்த சாட்சியாக திருக்குமார் இருந்திருந்தார்.

முன்னாள் போராளி அச்சுறுத்தலையடுத்து பிறழ்வு சாட்சியமளித்ததையடுததன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 9 புலனாய்வு அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


No comments