மின்சாரசபை மேளத்திற்கு இருபக்க அடி!இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் கோப் குழு ஆராயும் என்று அதன் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் முன்னாள் தலைவர் கோப் குழுவின் முன்பாக காற்றாலை மின் உற்பத்தி தொடர்பில் தெரிவித்த கருத்தை பின்னர் மீளப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் பேர்டிணன்ட், காற்றாலை மின் உற்பத்திக்கான அனுமதியை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் தனக்கு அழுத்தம் பிரயோகிப்பதாக ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாக கோப் குழுவின் முன்பாக சாட்சியம் வழங்கியிருந்தார்.

அவரது சாட்சியம் ஊடகங்களில் வெளியான பின்னர் அவர் அதனை மறுத்திருந்தார்.

தான் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அவர் அனுப்பியுள்ள கடிதம் தனக்கு இன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், அது தொடர்பில் அடுத்த வாரம் கலந்துரையாடி தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அத்துடன் மின்சார சபையின் முன்னாள் தலைவர் பேர்டிணன்ட் கோப் குழுவின் முன்பாக தவறான தகவல் அளித்துள்ளமையானது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் பாரிய குற்றச் செயலாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது வரப்பிரசாதம் அதன் மூலமாக மீறப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments