சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.


தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில்  ஜேர்மன் நாட்டில் மன்கைம் நகரத்தில்,  தன்னையும் ஒரு தேசியச் செயற்பாட்டாளராய் இணைத்துக்கொண்டு விடுதலைக்காகத் தொடர்ந்து பயணித்த சிவகாமசுந்தரி ஆசிரியர்  என்று பலராலும் அறியப்பட்டவரை 18.05.2022  அன்று நாம் இழந்துவிட்டோம்.

தமிழீழ தேசம் விடுதலைக்காகப் போராடுகின்றபோது, பல அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஒரு தாயாக எமது  விடுதலைப்போராட்டத்திற்கு எத்தகைய பங்களிப்பை வழங்கவேண்டும் என்பதை நன்குணர்ந்து செயற்பட்டவராவார்.

நெருக்கடியான இராணுவ ஆக்கிரமிப்புக் காலங்களில் போராளிகளுக்கான காப்பரணாகவிருந்து உணவு, தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து விடுதலைப்போராட்டத்திற்குப் பலம் சேர்த்தவராவார்.

தாயகத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசித்தபோதும், எமது மக்களின் விடுதலைக்காகவும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காகவும் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என்பதற்காக தேசிய செயற்பாட்டாளராகத் தன்னை இணைத்துக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டது மட்டுமல்லாது, எமது மாணவர்களின் தாய்மொழிக் கல்வி வளர்ச்சிக்காகக் கல்விக்கழகத்தின் ஊடாகத்  தமிழாலயத்தில் இணைந்து நீண்டகாலம் செயலாற்றிய நல்லாசானாவார்.

மாவீரர்களின் தியாகங்களையும், தாயகமக்களின் விடுதலை அவாவையும் தன்னுள்தாங்கித் தொடர்ந்தும் அர்ப்பணிப்போடு தேசியப்பணியாற்றிய  இவரை  நாம் இழந்துவிட்டோம். அன்னாரின் இழப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் இவரிடம் கல்விகற்ற மாணவர்களுக்கும் குடும்பத்தினரிற்கும் பேரிழப்பாகும். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் சிவகாமசுந்தரி தியாகராஜாஅவர்களின் தேசப்பற்றுமிக்கச் செயற்பாட்டிற்காக ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழத் தாய்த்திரு நாட்டின் எழில்மிகு வளங்களோடும், தாய்மண்ணின் விடுதலை உணர்வோடும் இரண்டறக் கலந்து கிடக்கும் வடமராட்சியின் பருத்தித்துறையில் அவதரித்து, அந்த மகத்தான மண்ணுக்கே உரித்தான கல்வியால், கலையால், வீரத்தால், விடுதலை உணர்வால் மேலோங்கித் திகழ்ந்த ஓர் அற்புதமான அன்னையை இயற்கை இன்று தன்னோடு அணைத்துக்கொண்டுள்ளது. இயற்கையின் நியதியையும் தாண்டிய பெரு வலியோடு பிரிவுத் துயர் சுமந்து நிற்கும் அனைவரோடும் நாமும் துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு, தாயாரின் ஆன்மா அமைதி பெறவும் இயற்கையை வேண்டுகின்றோம்.

“ஒரு சிறந்த தாய் ஒரு சிறந்த ஆசிரியை” எனப்படும் தத்துவார்த்த வாக்கியத்திற்கு முழுமையான உதாரணமாகவும், அதன் வழியே வாழ்வின் தடங்களை பொதுவாழ்வின் வரலாறாக்கியும், தமிழ்த்தேசிய இனத்தின் மதிப்புமிகு அடையாளமாக அணியமாக்கப்படுபவர்களில் முதன்மை நிரலில் வாழ்ந்தவருமாக எப்போதும் மதிப்பளிக்கப்படுவார்.

தாய்த்தேசத்தின் விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக ஒரு இனமானத் தாயாக எத்தகைய அர்ப்பணிப்புக்களை, தியாகங்களை, ஆதரவுகளை நல்க வேண்டுமோ அவற்றிற்கான தாராள மனம் கொண்டு நல்கியது மட்டுமல்லாது, அறம் நெறி தவறாத அந்த விடுதலைப் போரும் சத்திய வேள்வியும் அள்ளிச் சொரிந்த கனதிகளையும், வலிகளையும் சுகமான சுமையாக தாங்கிச் சுமந்த தேச நலன் மிக்க பெருமைமிகு தாயாக பூசிக்கப்படுவார் என்பது திண்ணம்.

தமிழ் மக்களுக்கான ஏக பிரதிநிதிகளாகவும், தமிழீழ தேசத்தின் மீட்பர்களாகவும், காவலர்களாகவும், அரண்களாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளே இருக்க வேண்டும் என்பதிலும், இருப்பார்கள் என்பதிலும் அசையாத நம்பிக்கை கொண்டவராக, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் தலைமையினை ஆத்மார்த்தமாக நேசித்து, இயக்கத்தினுடைய ஆரம்ப காலங்கள் தொட்டே தீவிர ஆதரவாளராக செயற்பட்டார் என்பதைக் காலம் மறந்து விடாது.

தானும் தனது துணைவரும் மட்டுமல்லாது,தாம் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கும் தேசக்காதலையும், அதற்கான தேவைகளையும், தேவைகளுக்கான உழைப்பின் தன்மைகளையும் உணரச் செய்தார். அவற்றிற்கான உதாரணமாக தன்னையே உருவகித்தார். இதன் உச்சமான அடையாளங்களாக,தனது இரண்டு பிள்ளைகளை மாவீரர்களாகவும், ஒரு மகனை நாட்டுப்பற்றாளராகவும், பேரனை மாவீரனாகவும் மண்ணுக்காக ஈர்ந்து நெஞ்சப் பசுமையிலே தூக்கிச் சுமந்தார்.

அமைதிப்படையென்ற அழகிய முகமூடியணிந்து உணவுப் பொதிகளோடு எங்கள் தாய்த்தேச மடிமீது காலூன்றிய இந்திய வல்லாதிக்க அரசு, பின்னாட்களில் தனது கோர முகத்தை வெளிப்படுத்தி, தமிழர் தாயகமெங்கிலும் நிகழ்த்திய வரலாற்றுப் படுகொலைகளுக்கும், துரோகங்களுக்கும் எதிராக தமிழீழ தேசமே அணியமாகிப் போர் செய்த வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராகத் திகழ்ந்த கப்டன்:மொறிஸ் (பரதராஜன் தியாகராஜா) என்ற தனது மகன் 01.05.1989ல் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்ததும், தனது மகனின் வித்துடலைப் பெறுவதற்காக ஒரு தாயாக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழீழப் பெண்களின் குறியீடாக இந்தத் தாயார் சந்தித்த சவால்களும், சாதனைகளும் “பெருநினைவின் சிறுதுளிகள்” என்ற இவரது படைப்பான வரலாற்று ஆவணத்தில் பதிவாக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் ‘ஒப்பறேசன் தவளை ‘ எனப் பெயர் சூட்டப்பட்டு கடலிலும் தரையிலுமாக நிகழ்த்திய பூநகரி இராணுவ முகாம் தகர்ப்புச் சமரிலே இம்ரான் பாண்டியன் படையணியின் போராளியாக களமாடி, 11.11.1993ல் வீரச்சாவை அணைத்துக்கொண்ட கப்டன்: மயூரன் ( பாலசபாபதி தியாகராஜா) என்ற தனது அடுத்த மகனை மாவீரனாகத் தாங்கிக் கொண்டார்.

தீட்சண்யன் என்ற புனைபெயரைத் தாங்கிய இவரது மற்றுமோர் மகன் பிறேமராஜன் தியாகராஜா அவர்கள் மும்மொழித் தேர்ச்சிகொண்ட கல்விப்புல மேன்மைகொண்ட ஆசிரியராக திகழ்ந்ததுடன், 1990ம் ஆண்டு வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலொன்றிலே தனது அவயங்களை இழந்த போதிலும், உறுதியான மன வலிமையோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி, சுகயீனம் காரணமாக 13.05.2000 அன்று சாவைத் தழுவிக்கொண்டார். இவரது அர்ப்பணிப்பு மிக்க செயலாற்றல்களாலும், கலை இலக்கியப் படைப்பாற்றல்களாலும் “நாட்டுப்பற்றாளர்” என்ற மதிப்போடு எல்லோர் நெஞ்சங்களிலும் வாழ்கின்றார்.

தீட்சண்யன் அவர்களது மகனும், சிவகாமசுந்தரி அம்மாவின் பேரனுமான கப்டன்: மயூரன் (பரதன் பிறேமராஜன்) 05.02.2009ல் சிறீலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தியாகங்களால் உரமேறிப்போன இந்தத் தாயின் இரண்டு மகள்களும் கலை இலக்கியப் படைப்பாற்றல்கள் ஊடாக, தேச விடுதலை பற்றியும், சமூக விழுமியங்கள் பற்றியும், தேசவளங்கள் பற்றியும் இன்றுவரை கவிதைகளாக, கட்டுரைகளாக வெளிப்படுத்தி வருவதும், அதனை இளந்தலைமுறையினரும், ஆர்வலர்களும் நுகர்ந்து பயன் பெறுவதும் பெரும் பணியாகவே மதிக்கப்படுகின்றது.

தனது இறுதி மூச்சை நிறுத்தி, மீளாத்துயில் கொள்ளும் இந்தத் தாயின் வரலாற்றுப் பக்கங்கள் மிக நீண்டவையும், முக்கியமானவையுமாகும். யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உப அமைப்புகளாகத் திகழும் தமிழர் புனர்வாழ்வுக் கழகமூடாக, தாயக தேசத்தின் உறவுகளுக்கான ஜீவனோபாய ஆதாரச் செயற்பாடுகளில் தீவிரமாக தொண்டாற்றியவர். தமிழ்க் கல்விக் கழகமூடாக தமிழாலயத்தில் எமது பிள்ளைகளுக்கான தாய்மொழி விருத்தியின் சிறந்த ஆசானாக தன்னை அர்ப்பணித்தவர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மன்கைம் நகரச் செயற்பாட்டாளராகவும் உணர்வோடு சேவையாற்றியவர்.

மதிப்புக்குரிய இந்தத் தாயாரின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்களும், குடும்பத்தின் முழுமையான தியாகங்களும் தமிழ்த்தேசிய இனத்திற்கான வரலாற்றுப் பக்கங்களில் என்றும் உயிர்வாழும் என்பதில் ஐயமில்லை. இவருக்காக எமது தலைகளைச் சாய்த்து இறுதி வணக்கம் செலுத்தும் அதேவேளையில் எமது இனவிடுதலைக்கான பணிகளை இடைவிடாது தொடர்வோமென உறுதி கொள்வோமாக.No comments