நேட்டோ வின் விரிவாக்கத்தைத் தடுக்க 12 படைத்தளங்களை அமைக்கும் ரஷ்யா


பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு  விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள நிலையில் அந்த நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை தடுப்பதற்கும் அதற்குப் பதிலடியாகவும் புதிதாக 12 படைத்தளங்களை அமைக்கவுள்ளது என ரஷ்யா கூறியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் பின்லாந்து எல்லை நோக்கி ரஷ்யாவின் மேற்கு மாவட்டத்தில் 12 இராணுவ தளங்கள் மற்றும் பிரிவுகள் நிலைநிறுத்தப்படும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய் பாதுகாப்பு அமைச்சக மற்றும் இராணுவ அதிகாரிகளிடம் கூறினார், 

நேட்டோ மற்றும் அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தல்கள் ரஷ்யாவின் எல்லைகளில் ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டு குற்றம் சாட்டினார்.

இதனிடையே மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்புத் தொழிற்சாலையில் பதுங்கியிருந்த 1,908 உக்ரைன் போராளிகள் மற்றும் படையினர் சரணடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். 

லுகான்ஸ்க் மக்கள் குடியரசின் விடுதலை கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது, என்று அவர் கூறினார்.

ரஷ்ய ஆயுதப் படைகளின் பிரிவுகள், லுகான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசுகளின் மக்கள் போராளிகளின் பிரிவுகளுடன் சேர்ந்து, பிராந்தியங்களின் மீதான கட்டுப்பாட்டை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments