இராணுவ குவிப்பு:கவலையில் அமெரிக்கா!


 

அமைதியான போராட்டங்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அமெரிக்க அதிருப்தியை வெளிப்படுத்துவதாக இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் நெடி பிரைஸ் தெரிவித்தார்.

அமைதியான போராட்டங்களை ஒருபோதும் இராணுவத்தினரை பயன்படுத்தியோ அல்லது வன்முறைகளைக் கட்டவிழ்தோ அடக்கக்கூடாது என அழுத்தமாக தெரிவித்துக்கொள்கிறோம். எனினும் இலங்கையில் இன்று இடம்பெற்றுக்கொண்டுள்ள வன்முறைகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  வன்முறையை கட்டவீழ்த்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கின்றோம். 

மேலும் இராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் நாம் கவனம் செலுத்துவதோடு, பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த  ராஜபக் ஷ பதவி விலகியதன் பின்னர் இடம்பெறும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்க கடுமையாக அவதானித்து வருகிறது எனவும் தெரிவித்தார். அரசியல் தலைவர்கள் விரைவான தீர்மானம் ஒன்றை எடுத்து அரசியல், பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும் அமெரிக்க வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்தும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கலந்துரையாடியுள்ளார்.

தொழில்முறை சார் மற்றும் சுதந்திரமான இலங்கை மத்திய வங்கியின் செயற்பாடு பொருளாதார மீட்சிக்கு அவசியமானது. 


நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான தற்போதைய முயற்சிகள் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் சிறந்த பாதையில் கொண்டு வருவதற்கான உள்ளூர் மற்றும் பலதரப்பு முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் வழிகளை ஆராய்வது குறித்து இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளது.

No comments