ஆஸ்ரேலியாவில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள்!!

நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு சிட்னியில் இன்று 10-04-2021 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றுள்ளது. வென்ற்வேர்த்திவிலில் உள்ள றெட் பைறன்

மண்டபத்தில் நடைபெற்ற இன்றைய நிகழ்வை, நாட்டுப்பற்றாளர் விஜயகுமார் அவர்களின் துணைவியார்  அவர்கள் மாலை 4 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி ஆரம்பித்துவைத்தார்.

தொடர்ந்து, அவுஸ்திரேலிய தேசியக்கொடியை தமிழ்த்தேசிய மூத்த செயற்பாட்டாளர் பாஸ்கரஜோதி அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் நவேந்திரராசா அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து அண்மையில் மறைந்த தமிழ்த்தேசியப்பற்றாளர் வாகீஸ்வரன் அவர்களின் மகன் ரமேஸ் அவர்கள் ஈகைச்சுடரை ஏற்றிவைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அனைவரும் வரிசையாக சென்று நாட்டுப்பற்றாளர்களினதும் மாவீரர்களினதும் திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் நாள் நினைவுரையை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் மனோகரன் அவர்கள் வழங்கினார். ஒவ்வொரு நாட்டுப்பற்றாளர்களும் வெவ்வேறு துறைசார்ந்தவர்களாக இருந்தபோதும் தங்களால் தமிழ் மக்களின் விடுதலைக்காக எவற்றை செய்ய முடியுமோ அவற்றை மனப்பூர்வமாக செய்து நின்றனர் என்ற கருத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்களின் தியாக வரலாறும் சமகால நிகழ்வும் என்ற தலைப்பில் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் கணேஸ் அவர்கள் கருத்துரை வழங்கினார். இலங்கைத்தீவில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தைகள் என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. தற்போதும் தமிழர்களது அடிப்படை பிரச்சனைகளை புரிந்துகொண்டு செயற்படுகின்ற போக்கு வரவில்லை. எனவே தமிழர் தரப்பு சுயநிர்ணய உரிமை கோரிக்கையையும் இனவழிப்புக்கான பரிகார நீதியையும் தொடர்ந்தும் வலியுறுத்தவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, செல்வி துளசி செல்வராசா அவர்கள் அன்னை பூபதி என்ற தலைப்பில் கவிதை ஒன்றை வழங்கினார். தொடர்ந்து ஓவியர் புகேழந்தி அவர்களின் நான் கண்ட தமிழீழம் அன்றும் இன்றும் என்ற நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. அறிமுக உரையை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் நிர்மானுசன் வழங்கினார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தும் விதத்தில் மிக நேர்த்தியாக ஒப்பீட்டு ரீதியில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார். 

நான் கண்ட தமிழீழம் அன்றும் இன்றும் என்ற புத்தகத்தை சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் ஜனகன் அவர்கள் வெளியிட்டு வைக்க, கோம்புஸ் தமிழ்ப்பாடசாலை நிர்வாக உறுப்பினர் ரமணன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, அன்னை பூபதி நினைவாக தாயகத்தில் நடைபெறும் அன்னை பூபதி பொதுஅறிவுப்போட்டியை நினைவூட்டும் நோக்கோடு, பார்வையாளர்களிடம் தமிழீழ பொதுஅறிவு சார் வினாக்கள் கேட்கப்பட்டு சிறு போட்டி நடத்தப்பட்டது.

நிறைவாக, தாயகத்தாய் இறுவட்டிலிருந்து தாயவளே உன்னை போற்றுகின்றோம் என்ற பாடலுக்கு நடனநிகழ்வை செல்வி சிறிவேதா சிங்காரஜர் செல்வி கிருஸ்ணா ஞானராஜா ஆகியோர் இணைந்து வழங்கினர். இந்நடனத்திற்கான நெறியாள்கையை குறுகிய காலத்தில் ஆசிரியர் யசோதரா சிங்கராஜர் அவர்கள் செய்திருந்தார்.

இறுதியாக தேசியக்கொடியிறக்கலோடு நினைவு நிகழ்வு நிறைவடைந்தது.

இன்றைய நிகழ்வை யாழவன் அவர்கள் தொகுத்து வழங்கினார். 

No comments