நம்பிக்கையில்லாப் பிரேரணை: தெளிவு படுத்தலுக்குப் பின்னரே கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம்


ராஜபக்ஷக்கள் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்துள்ளவர்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னரான அடுத்த கட்ட நிலைமைகள் தொடர்பில் தெளிவு படுத்தியதன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்பிரேரணை தொடர்பில் இறுதியான தீர்மானம் எடுக்கும் என்று அறிவித்துள்ளது.

அதேநேரம், பொதுமக்களால் பதவி விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து புதிய அரசாங்கம் அமைவதற்கான ஆபத்துக்களும் உள்ளன என்றும் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியானது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதில் கையொப்பமிட்டுள்ளது. அதேநேரம், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் பிரேரணைக்கு ஆதரவு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தமது முடிவினை அறிவிக்காதுள்ளமை தொடர்பில் அதன் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்னமும் தீர்மானமொன்றை எடுக்கவில்லை. இந்த விடயம் சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இரண்டு தடவைகள் ஒன்றுகூடி ஆராய்ந்திருந்தது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டவுன் பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலகுவார்கள். அவ்வாறான தருணத்தில் உடனடியாக பிறிதொரு பிரதமரையும், அமைச்சரவையையும் அமைக்க வேண்டியதாக இருக்கும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டவுடன் என்ன நடக்கும் என்பதைத் தெரியாது நாம் தீர்மானமொன்றை எடுக்க முடியாது. ஏனென்றால், புதிதாக வரப்போகும் அரசாங்கம் தற்போது இருக்கும் அரசாங்கத்தினை விடவும் மோசமானதாகக் கூட அமையும். பொதுஜனபெரமுனவில் இருந்து விலகி வந்தவர்கள் நாம்பிக்கையில்லாத பிரேரணைக்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது மீண்டும் ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலேயே அமைச்சரவையிலும் இடம்பெறலாம்.

யாரை, பொதுமக்கள் வீட்டுக்குச் செல்லுமாறு புரட்சி செய்கிறார்களோ அவருடைய தலைமையிலேயே மீண்டும் ஒரு அரசாங்கம் அமைவதற்கு நாம் துணைபோக முடியாது. ஆகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருபவர்கள் அது நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கைகளை  முன்னெடுக்கவுள்ளார்கள் என்ற விடயத்தினை தெளிவு படுத்தியதன் பின்னரே எமது இறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம் என்றார்

No comments