தெற்கிற்கும் உலகிற்கும் செய்தி புரியட்டும்!கொழும்பு போராட்டத்தில் புறந்தள்ளி நிற்பதன் மூலம் தமிழ் மக்களிற்கு தெற்கிற்கும் உலகிற்கும் செய்தியொன்றை சொல்லி நிற்பதாக யாழ்.மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இன்று இலங்கைத் தீவில் எழுந்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சி மாற்றமே தீர்வெனக் கருதும் சூழல் ஒன்று தென் இலங்கையில் வலுவடைந்துள்ளது. அத்தகைய ஆட்சி மாற்றத்தை நோக்கிய காலிமுகத்திடல் போராட்டம் இலங்கையர்கள் அனைவரையும் இன, மத, மொழி வேறுபாடின்றி ஒன்றிணைக்க முயலுகிறது. குறிப்பாக, தமிழ் மக்களையும் அரவணைத்துக் கொண்டு அப்போராட்டத்தை வழிநடத்த முனைகிறது. ஆனாலும் தமிழ் மக்கள் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாது மௌனமாக இருப்பதில் கவனமாக செயல்படுகிறார்கள். இதன்மூலம் ஒரு செய்தியை போராட்டக்காரருக்கும் உலகத்திற்கும் தெரியப்படுத்த முனைகின்றனர் என்றே நாங்கள் கருதுகின்றோம். 

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக வாழ்வதற்கு இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு, அகிம்சை வழியிலும் ஆயுத வழிமுறையிலும் போராடியவர்கள். ஆனால், அனைத்து வழிமுறைப் போராட்டங்களையும் இராணுவ அடக்குமுறையால்  அழித்தொழித்துவிட தென் இலங்கை ஆட்சியாளர்கள் தீவிர வெறியர்களாகவும் கொடுங்கோன்மைவாதிகளாகவும் செயற்பட்டனர். இத்தகைய ஆட்சியாளர்களின் செயற்பாட்டுக்கு, சிங்கள மக்களும் புனையப்பட்ட மகாவம்ச மனநிலையிலிருந்தே ஆதரவளித்திருந்தனர். 

இதே மகாவம்ச மனநிலையில் இருந்தே 2009ஆம் ஆண்டு 1,46,000இற்கு மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் என தமிழ் மக்களை அப்போதைய அரசால் இனவழிப்புச் செய்யப்பட்டபோது, சிங்கள மக்கள் எவ்வித எதிர்ப்பினையும் வெளிப்படுத்தாது மாறாக, கொண்டாடும் மனநிலையில் பாற்சோறு வழங்கி மகிழ்ந்திருந்தார்கள்.  

அதனைவிட தமிழர்கள் அரசியல் கைதிகளாகவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோராகவும் பல ஆயிரக்;கணக்கில் அவலத்தை சுமந்து வருகின்றனர். இன்றும்கூட அரசியல் கைதிகளையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரையும் மீட்டெடுக்கும்  போராட்டத்தை தமிழ் மக்கள் தொடருவதுடன், தென் இலங்கை ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்கு மக்களின் பூர்வீகமான நிலம் மீதும் - கடல் மீதும் - வாழ்வுரிமை மீதும் - மத உரிமை மீதும் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பினை எதிர்கொண்டு போராடிக் கொண்டே வாழ்கின்றனர். இத்தகைய துயரங்களின் போதெல்லாம் தென் இலங்கை ஆட்சியாளர்களும் - அவர்களுக்கு பின்னால் இருந்து செயற்படுத்திய பௌத்த மதபீடங்களும் - அவர்களுடன் இணைந்திருந்த தீவிர பேரினவாதிகளும்;, பேரினவாத சிந்தனையுள்ள புத்திஜீவிகளும், போலி இடதுசாரிகளும் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டதை மறக்க முடியாதுள்ளமையால், தமிழ் மக்கள் மௌனத்தால் காலிமுகத்திடல் போன்ற போராட்டக்காரர்களுக்கு புரியவைக்க முயலுகின்றனர் என்று நாம் கருதுகின்றோம். 

இன்று, தென் இலங்கையின் போராட்டக்காரர்களால் ஒற்றுமையின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டிருக்கும் இலங்கையின் தேசியக் கொடியானது, இலங்கையின் பல்லின மக்களும் சமத்துவமாக ஒன்றிணைந்து வாழ்வதை அடையாளப்படுத்தவில்லை என்பதால் அந்தக் கொடியின் கீழ் ஒன்றிணைய முடியாதவர்களாகவே தமிழ் மக்கள் உள்ளனர். 

அத்துடன் - இலங்கை மக்கள் இன, மத, பேதமின்றி ஒன்றுபட்டு திரண்டிருப்பதாகக் கூறப்படும் காலிமுகத்திடல் போராட்டத்தில் கூட தமிழில் தேசிய கீதத்தை பாடுவதை அங்கு கலந்திருந்த பேரினவாதிகள் விரும்பியிருக்கவில்லை.  இதுபோன்ற சம்பவங்கள், இத்தகைய நெருக்கடியான சூழலிலும் கூட மாறமுடியாத பேரினவாத மனோநிலையையே வெளிப்படுத்தி நிற்கின்றது. இதுபோன்ற இனவாதிகளின் நிலைகளை சிங்கள மக்கள் மாற்ற முயலாதவரை தமிழ் மக்கள் இணைந்து போராட முடியாத இக்கட்டான நிலையிலேயே உள்ளனர்.   

இத்தகைய இனவாத மனோநிலையால் கட்டமைக்கப்பட்ட அதிகார ஆட்சி செயற்பாடுகளே இன்றைய அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு வித்திட்டது என்பதோடு, இதன் பின்னால் மறைந்திருந்து ஊழல்களையும் சுரண்டல்களையும் செய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு பெரும் தீனிபோட்டிருந்தது என்பதையும் சிங்கள மக்கள் உணரவேண்டும். இந்த உண்மை நிலையை உணர்ந்தால் மட்டுமே இலங்கைத் தீவை நெருக்கடிகளிலிருந்து அனைவருமாக மீட்டெடுக்கமுடியும் என்பதோடு மறுசீரமைக்கவும் முடியும்.

இத்தகைய துயரங்கள் அனைத்திற்கும் தீர்வாக, 

வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் பொருளாதார வாழ்வை மீளவும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் விதத்தில் 

கடந்த காலத் துயரங்களிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமாயின், தமிழ் மக்களது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்ட வகையில் இடம்பெறல்.

நீண்ட காலம் எவ்வித விசாரணைகள் இன்றியும், சித்திரவதைகளின் மூலம் பெறப்பட்ட பொய் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குகள் தொடரப்பட்டும் – தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை அடக்குவதற்காக பேரினவாதிகளால் கொண்டுவரப்பட்ட  பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீ;ககப்படல்.

வடக்கு கிழக்கில் தமிழர்களது தொல்பொருள் சான்றுகளையும் - மரபுரிமைச் சின்னங்களையும் - பண்பாட்டு அடையாளங்களையும் அழிக்காது பாதுகாப்பதற்கான அதிகாரத்தினை தமிழ் மக்களிடம் ஒப்படைத்தல்.

வடக்கு கிழக்கு பொருளாதாரத்தின் முதுகெலும்பான கடல் சார் பொருளாதாரத்தின் மீது மேற்கொள்ளப்படும் அத்துமீறிய அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் நிறுத்துதல்.  

தமிழ் மக்களின் அபிலாசைகளை அங்கீகரித்து – தமிழர்களது ஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக நிலங்களை விடுவித்து – அவர்களது வாழ்விடத்தை தொடர்ந்தும் ஆக்கிரமிக்காது – தமிழ் மக்கள் சுயநிர்ணயத்துடன் வாழ்வதற்கான அதிகாரப் பகிர்வான சம~;டித் தீர்வை முன்வைப்பதற்கான ஒப்புதலை வழங்குவதன் மூலம் சாத்தியமானதாக மாற்றுதல்.

நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படும் வரை தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் இடைக்கால நிர்வாக அலகொன்றை ஏற்படுத்தல்

“தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தீர்க்கப்படாதவரையில் இலங்கைத் தீவில் எழுந்துள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியானது, தற்காலிகமாகத் தளர்வடைவது போல் காணப்பட்டாலும், மீள மீள மேலெழுந்து கொண்டே இருக்கும் என்பதே யதார்த்தமாகும்.”

எனவே – தென்இலங்கை போராளிகள், தமிழ் மக்களது நியாயமான அபிலாசைகள் தொடர்பாக கவனத்தில் எடுப்பார்களாயின்,  தென் இலங்கையுடன் இணைந்து தற்போது ஏற்பட்டுள்ள பொருளதாதார நெருக்கடிக்கான தீர்வினை,  புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஒத்துழைப்புடனும் ஏனைய நாடுகளது துணையுடனும் மீட்டெடுக்க தமிழ் மக்கள் தமது மௌனத்தை கலைத்து செயல்பட தயாராக இருப்பார்கள் என நாம் கருதுகிறோம்.

இலங்கைத் தீவு முழுமையையும் சூழ்ந்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடி இத்தீவில் வாழும் சகலரையும் இன, மத வேறுபாடின்றி கடுமையாகப் பாதித்துள்ளதை – நீண்ட காலத்திற்குப் தொடர்ந்துமும் பாதிக்கப்போவதை நாம் நன்கு புரிந்துகொண்டுள்ளோம். ஆனால் வெறும் ஆட்சிமாற்றத்தினால் மாத்திரம் நாம் இப்பாதிப்புக்களிலிருந்து மீண்டுவிட முடியாது.

தமிழ் மக்களின் உள்ளக்கிடக்கையைப் புரிந்துகொண்டு அதனையும் உள்வாங்கி தென் இலங்கையின் போராட்டம் முன்னெடுக்கப்படுமாயின் அதுவே அழகிய இலங்கைத்தீவின் சுபீட்சத்திற்கான ஆரம்பமாக அமையும் என்பதை தென்னிலங்கைத் தோழர்களுக்கு எமது மிகுந்த தோழமை உணர்வுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையில் 

பல்கலைக்கழக ஊழியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

இலங்கை ஆசிரியர் சங்கம்

வடமாகாண புதிய அதிபர்கள் சங்கம், தரம் 

சமூக விஞ்ஞான ஆய்வு மையம்

கிராமிய உழைப்பாளர்கள் சங்கம்

மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு என்பவை ஒப்பமிட்டுள்ளன.

         


No comments