கோத்தா மட்டுமல்ல:கூட்டமைப்பினையும் அடித்து விரட்டவேண்டும்:முன்னணி!
தமிழ் மக்களின் ஆணையைப்பெற்று, பொய்யான வேடதாரிகளாக இன்று செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கிலிருந்து விரைவில் மக்களால் விரட்டியடிக்கப்படுவார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளே இன்று தெற்கில் ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை பெரும்பான்மையின மக்களுக்குத் தெரியப்படுத்தாது, அவர்களுக்கு பொய்களைக் கூறி இதுவரை காலமும் அந்த மக்களை ஏமாற்றினர். இனப் படுகொலைகளை செய்வதற்காக அந்நிய நாடுகளிடம் கடனை வாங்கி, போரை முன்னெடுத்து, தற்போது கடன்பொறிக்குள் சிக்கியுள்ளனர்.

“தமிழ் மக்கள் தங்களது இருப்புக்காகவும் சுய நிர்ணயத்துக்காகவும் உரிமைக்காகவும்தான் போராடினார்கள் என்ற உண்மையை, பெரும்பான்மையின மக்கள் இன்று உணர்ந்திருக்கின்றார்கள். இதனால் ஆட்சியாளர்களை அடித்து விரட்டுகின்றனர்.

“இதேபோன்றுதான் தமிழ் மக்கள் மத்தியில் இரட்டைவேடம் பூண்டு, வேடதாரிகளாக செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியக“ கூட்டமைப்பின் தலைமைத்துவம் மிக விரைவில் வட,கிழக்கு தமிழ் மக்களால் அடித்துவிரப்பட்டப்படும் நிலையேற்படும்.

“2009இல் தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்பு. இந்த இன அழிப்புக்கான சர்வதேச விசாரணைக்கான சந்தர்ப்பங்கள் கிடைத்போதேல்லாம் அதனை கோராமல், தங்களது பதவிகளுக்காக தங்களது பைகளை நிரப்புவதற்காக கோட்டாபய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை முன்கொண்டு சென்றனர்.

“தமிழ்த் தேசிய உணர்வுடன் உள்ளவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டும். தொடர்ந்து அங்கு இருப்பீர்களானால் இன்று அரசாங்கம் துரத்தியடிக்கப்படுவதுபோன்று உண்மையறிந்து, தமிழ் மக்களால் ஒரு நாள் துரத்தியடிக்கப்படுவீர்கள்” என்றார். 


No comments