உள்ளே இருக்க விருப்பமா?இலங்கை காவல்துறை!நாட்டின் பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது உங்களை கட்டுப்படுத்துவதற்கு காலுக்கு  கீழே சுடுவதற்கு அதிகாரம் இருக்கிறது என  வவுனியா பொலிசார்  மிரட்டி கையெழுத்து வாங்கியதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் உப தலைவி ஜெனித்தா சிவானந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக மஹிந்த ராஜபக்ச வருகை தந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் ஆகிய நாம் நீதி கேட்டுப் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

இறுதி யுத்தத்தின்போது பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்ட  எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என பிரதமரை கேட்பதற்கு அனுமதி தர வேண்டும் என   கோரிக்கை விடுத்தேம்.

 சிலரை மட்டும் சந்திப்பதற்கு கேட்கப்பட்ட நிலையில் அதை நாம் மறைத்து தமது பிள்ளைகளைத் தொலைத்த அனைத்து உறவுகளும் சந்திக்க  வேண்டும் என்றோம் அனுமதி கிடைக்கவில்லை.

இந்நிலையில் உறவுகள் நீதி கேட்டு போராட்டத்தை நடாத்திய போது பொலிசார் காட்டுமிராண்டித்தனமாக பெண்கள்  மீது தாக்குதல் நடத்தினர்.

இதன்போது  தாய்மார் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜனநாயக வழியில் நீதி கேட்டு போராடிய எம்மீது பொலிசார் சப்பாத்துக் கால்களினாலும் கையிலிருந்த பொருட்களிலும் தாக்குதல் நடத்தினர்.

 ஆத்திரமடைந்த உறவுகள் பிரதமர் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளின் படங்கள் பெறிக்கப்பட்ட  காட்சிப் பதாதையை தீயிட்டுக் கொளுத்தினர்.

குறித்த போராட்டத்தில் காயமடைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தேடியலையும் தாய்மார் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை எனது வீட்டுக்கு வருகை தந்த வவுனியா பொலிஸர் முறைப்பாடு போடுவதை விடுத்து சமாதானமாக செல்லுமாறு மிரட்டினர்.


அதுமட்டுமல்லாது நாட்டின் பிரதம மந்திரிக்கு எதிராக எமது நாட்டின் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது கடினம் அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் டிவனியா உள்ளே இருப்பது உங்களுக்கு தெரிம் தானே எனக் கேட்டனர்

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தும் போது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முழங்காலுக்கு கீழே சுடுவதற்கு பொலிசார் ஆகிய எமக்கு அதிகாரம் இருக்கிறது என தொடர்ந்து என்னை மிரட்டிய போது எனது வீட்டாரின் வேண்டுதலில் நான்  விருப்பமின்றி கையெழுத்திட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அது ஜனநாயக போராட்டங்களை முடக்கும் வகையில் போலீசார் தொடர்ந்து செயற்படுவதும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகளை தெரிவிக்காமல் இருப்பதற்கு அச்சுறுத்தல் விடுவதையும் சர்வதேச சமூகம் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments