நினைவழியா நிமல்:20வருடங்களின் பின்னரான பிபிசி பதிவு!

 எங்கள் வீடு உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. அப்போது ஊரடங்கு சட்டமும் அமலில் இருந்தது. அங்கு நிறைய ராணுவ முகாம்களும் இருந்தன. எனவே அரசாங்கத்தின் துணை இல்லாமல் யாராலும் அதை செய்திருக்க முடியாது." என்கிறார் 22 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜனின் சகோதரி.

யாழ்ப்பாணத்திலிருந்து வந்த செய்தி குரல்

இலங்கை உள்நாட்டு போரின் மையப்புள்ளியாக இருந்த யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி கொண்டிருந்த மயில்வாகனம் நிமலராஜன் 22 வருடங்களுக்கு முன்பு அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார்.உள்நாட்டு போரால் இலங்கையில் பதற்றமான சூழல் நிலவிக் கொண்டிருந்த வேளை அது. பல ஆபத்துகளுக்கு மத்தியில் தொடர்ந்து போர் குறித்தும், மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் பிபிசி தமிழ் உட்பட பல ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கி கொண்டிருந்தவர் நிமலராஜன்.


யாழ்ப்பாணத்தில் கிட்டதட்ட எல்லாரையும் அவருக்கு தெரியும், அவருக்கும் அனைவரையும் தெரியும் என்கிறது அவர் இறப்பு குறித்து வெளியான பிபிசி செய்தி.


கடந்த 2000 ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி நடந்த நிமலராஜனின் கொலை தொடர்பாக லண்டன் மெட்ரோபாலிடன் காவல்துறையின் போர்க் குற்றப்பிரிவு கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததது. எனவே இந்த கொலை தொடர்பாக தற்போது ஊடகங்களில் மீண்டும் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த கைது, கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வருமா? குற்றவாளிகளை அடையாளம் காட்டுமா? என்பதுதான் நிமலராஜின் குடும்பத்தினர் மற்றும் சக பத்திரிகையாளர்களின் கேள்வி.


அச்சுறுத்தல் மிகுந்த பணி

நிமலராஜனுக்கு அச்சுறுத்தல்கள் வருவது ஒரு தொடர்கதையாக இருந்தது. ஆனால் அதையும் தாண்டி ஊடகவியலில் அவருக்கு இருந்த ஆர்வத்தால் அவர் தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார் என்கிறார் நிமலராஜனின் சகோதரி நிமலராணி.


"நிமலராஜனின் பணி என்பது கடுமையான பணியாகதான் இருந்தது. அந்த சமயத்தில் மின்சார இணைப்பும் இல்லை. அவர் சைக்கிளில் சென்றுதான் செய்திகளை சேகரித்து வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு ஆபத்துகளும் அதிகம் இருந்தன. பலதரப்பட்ட அரசியல் அச்சுறுத்தல்களும் இருந்தன," என்கிறார் அவர்.


இருளில் நடந்த கொலை

நிமலராஜன் அன்று பத்திரிகை செய்தி ஒன்றை எழுதி கொண்டிருந்தார். அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிற்குள் புகுந்து நிமலராஜனை துப்பாக்கியால் சுட்டனர். அங்கிருந்த அவரின் தந்தையையும் கத்தியால் தாக்கினர். பின் அவர்கள் கிரணேட் குண்டுகளை வீசினர் அதில் நிமலராஜனின் தாயார் மற்றும் அவரின் சகோதரியின் மகனும் பலத்த காயமடைந்தனர்.


'இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே? விரைந்து நீதி வழங்குங்கள்': ஐ.நா. மனித உரிமை ஆணையர்

இலங்கைத் தமிழர் நிலை: போராடி போராடி உறவுகளை காணாது முடங்கிய செல்வராணி

அப்போது இலங்கையில் நடைபெற்ற பொதுதேர்தலில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து அவர் செய்தி வழங்கினார். அதில் தற்போது இலங்கையில் அரசியல் கட்சியாக இருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மோசடி செய்ததாகவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


நிமலராஜன் கொலை தொடர்பாக சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்று வரை இந்த கொலை குற்றம் யார் மீதும் நிரூபிக்கப்படவில்லை.


செயற்பாட்டாளர்கள், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியை சேர்ந்தவர்கள்தான் இந்த கொலையில் ஈடுபட்டதாக தெரிவிக்கின்றனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தற்போது இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா.


இதுகுறித்து இலங்கையிலிருந்து பிபிசி தமிழுக்காக ரஞ்சன் அருண்பிரசாத்திடம் பேசிய அவர் ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலையில் தனக்கும், தனது கட்சிக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்தார்.


ஒரு பொய்யை தொடர்ச்சியாக தெரிவிக்கும் போது, அது உண்மையாகும் என்ற அடிப்படையிலேயே தன்மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


தனது கட்சியின் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார் டக்ளஸ் தேவானந்தா

படக்குறிப்பு,

தனது கட்சியின் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார் டக்ளஸ் தேவானந்தா


'போதுமான நடவடிக்கைகள் இல்லை'

இந்த கொலை வழக்கில் இலங்கை அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.


"உண்மையில் இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது சாதரணமாக தமிழ் மக்கள் அனைவருக்குமே தெரியும். இன்று வரை குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இயல்பாக நடமாடுகின்றனர். அவர்கள் பதவிகளிலும் இருக்கிறார்கள். உண்மையாக காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக இலங்கை அரசின் நீதித்துறை மூலமாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் யாருமே நம்பவில்லை." என்கிறார் ஊடக செயற்பாட்டாளரும் நிமலராஜனின் நண்பருமான இரத்தினம் தயாபரன்.


இலங்கை அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதே நிமலராஜனின் குடும்பத்தினரின் கூற்றாகவும் உள்ளது.


"இத்தனை வருடங்களில் இலங்கை அரசாங்கம் நினைத்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஒரு அரசாங்கம் நினைத்தால் நிச்சயம் அதை செய்திருக்க முடியும். ஆனால் அரசாங்கத்தின் உதவியுடன் நடந்தமையால் அதற்கான முன்னெடுப்புகளை அவர்கள் எடுக்கவில்லை. யார் கொலை செய்தார்கள் என்று அரசாங்கத்திற்கு தெரியும்." என்கிறார் நிமலராஜனின் மற்றொரு சகோதரி செல்வராணி.


அதுமட்டுமல்லாமல் "எங்களின் வீடு உயர் பாதுகாப்பு வளையம். அப்போது ஊரடங்கு சட்டமும் அமலில் இருந்தது. அங்கு நிறைய ராணுவ முகாம்களும் இருந்தன. எனவே அரசாங்கத்தின் துணை இல்லாமல் யாராலும் அதை செய்திருக்க முடியாது. அந்த நேரத்தில் நடந்தவற்றை பார்க்கும்போது சிறுபிள்ளையை கேட்டால் கூட சொல்லும் அரசாங்கத்தின் துணை இல்லாமல் இவ்வாறு செய்திருக்க முடியாது என்று" என்கின்றார் அவர்.


நிமலராஜன்

படக்குறிப்பு,

நிமலராஜன்


காணாமல் ஆக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்

நிமலராஜன் மட்டுமல்ல இலங்கையில் போர் சமயத்தில் கொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் தயாபரன்.


அமெரிக்காவிலிருந்து பத்திரிகையாளர்களுக்காக செயல்படும் 'கமிட்டி டு ப்ரொடக்ட் ஜர்னலிஸ்ட்ஸ்' என்ற அமைப்பு இலங்கையில் 1992ஆம் ஆண்டு காலத்திலிருந்து 2022ஆம் ஆண்டு காலம் வரை 25 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறது. ஆனால் இரத்தினம் தயாபரன் இந்த எண்ணிக்கை 39க்கும் அதிகம் என்கிறார்.


"நிமலராஜனின் மரணத்திற்கு பிறகு வட கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் மட்டும் 39க்கும் மேற்பட்ட ஊடக பணியாளர்கள் அல்லது ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.


இந்த படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடக பணியாளர்கள் அல்லது ஊடகவியலாளர்கள் தொடர்பாக இதுவரை சொல்லிக் கொள்ளத் தக்க வகையில் இலங்கை சார்பாக எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை." என்கிறார் இரத்தினம் தயாபரன்.


'நம்பிக்கை தரும் கைது'

இந்நிலையில் பிரிட்டன் காவல்துறையின் போர் குற்றங்கள் பிரிவு, பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜனின் கொலை வழக்கில் 48 வயது மிக்க சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கடந்த வியாழனன்று தெரிவித்திருந்தது.


மத்திய இங்கிலாந்தில் உள்ள நார்தாம்ப்டன்ஷயரில் கைது செய்யப்பட்ட அந்த நபர் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அதேபோல நிமலராஜன் கொலை தொடர்பான விசாரணையில் யாருக்கேனும் தகவல் ஏதும் தெரிந்தால் குறிப்பாக இலங்கையிலிருந்து வந்தவர்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்குமாறும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இலங்கையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதி கோரும் சக பத்திரிகையாளர்கள்சர்வதேச விசாரணையில் மட்டுமே இனி நீதி கிடைக்கும் என நம்புகின்றனர் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள்


இந்த கைது ஒரு நம்பிக்கையை கொடுப்பதாக தெரிவிக்கிறார் நிமலராஜனின் மூத்த மகள். நிமலராஜன் கொலைசெய்யப்பட்டபோது அவரின் மூத்த மகளுக்கு ஐந்து வயது.


"சிறுவயது என்பதால் எனக்கு சரியாக நினைவு இல்லை. அப்போது ஏன் அப்பா விட்டு போனார்கள் என்ற கோபம் இருந்தது. எனக்கு எதுவும் புரியவில்லை. குடும்பத்தினர் சொன்ன கதைகள் மூலமாகதான் அப்பா குறித்து நான் கேட்டிருக்கிறேன். குறிப்பிட்ட வயது வந்தவுடன் அப்பாவின் பணி குறித்து புரிந்தவுடன் எனக்கு மிகப்பெரிய மரியாதை வந்தது," என்கிறார் அவர்


அது மட்டுமல்லாமல் இதுமாதிரியாக கொல்லப்பட்ட பிற பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் இந்த கைது கொடுப்பதாக கூறுகிறார் அவர்.


"எனது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை எனது தந்தையுடன் கொண்டாடும் அந்த மகிழ்ச்சி களவாடப்பட்டது. வன்முறை, அநியாயம் மற்றும் கொடூரம் ஒரு பெற்றோருக்கு தங்களது மகனை, சகோதரிகளுக்கு தங்களது அண்ணனை, பிள்ளைகளுக்கு தங்களது அப்பாவை இல்லாமல் ஆக்கிவிட்டது. இருப்பினும் நீதி நிச்சயம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என்கிறார் அவர்.


இத்தனை காலங்களாக இலங்கையில் எந்த ஒரு தீர்க்கமான விசாரணையும் முன்னெடுப்படாத நிலையில் இனி உலக நாடுகளில் நடைபெறும் விசாரணையே இந்த கொலையில் நீதி பெற்று தரும் என கருதுகின்றனர் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள்.


"சர்வதேச மன்றத்தில் இனி விசாரணைகள் நடந்தால் மட்டுமே ஒரு நீதி கிடைக்கும். அதிலும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஊடக அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெற்றால் மட்டுமே கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கும் என்று யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் நம்புகின்றனர்," என்கிறார் தயாபரன்.


இதுகுறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டபோது, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து, இலங்கை அரசாங்கம் தொடர்ந்து விசாரணை நடத்துவதாக குறிப்பிட்டார்.

No comments