தனியே சுருட்டிக்கொண்டார் சங்கரி!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெருமளவு சொத்துக்களை தனியே முன்னாள் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விழுங்கியமை தேர்தல் திணைக்கள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

யாழ்.நகரின் ஸ்ரான்லி வீதியிலிருந்த தலைமை காரியாலத்தை சுமார் 3.2கோடிக்கு விற்றிருப்பது தெரியவந்துள்ளது.அதேவேளை தற்போதைய காரியாலயத்தை இரண்டுவருட வாடகைக்கு விட்டுள்ளார். அதேவேளை வாங்கிய சொத்துக்களை தனது சொந்த பெயரிலேயே வாங்கியுமுள்ளார்.

அதேவேளை தேர்தல் திணைக்களத்துக்கு எமது கட்சியின் புதிய நிர்வாகம் கூட்டம் தொடர்பான அறிக்கையை அனுப்பி வைத்துள்ள நிலையில் அதனை குழப்பவே ஆனந்தசங்கரி விரும்புகிறார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் த.இராசலிங்கம் தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,நாங்கள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம். நாங்களே முதன்முதலில் தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி. முப்பெரும் தலைவர்கள் கூடி தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது.

முன்னாள் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி அவர்கள் தன்னால் மட்டுமே தமிழர் பிரச்சனையை தீர்க்க முடியும் என்றும் ஏனைய கட்சிகளால் தமிழர் பிரச்சினையை தீர்க்க முடியாது என்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் தற்போது பலவீனமாக இருக்கிறோம். கட்சி பலவீனமாக உள்ளது. தமிழர்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். அதற்காக எமது முழு பங்களிப்பையும் நாங்கள் செய்ய தயாராக இருக்கின்றோம். 

தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய கூட்டமொன்றின்போது ஆனந்த சங்கரி உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்துரையாடிபோது இடைநடுவே ஆனந்தசங்கரி, வெளியேறினார். அதன் பின்னர் அங்கு கூடியிருந்த நாங்கள் ஒரு தற்காலிகமான ஒரு நிர்வாகத்தை உருவாக்கி பின்னர் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்தோம். தற்போது நான் தலைவராக உள்ளேன். செயலாளர் நாயகமாக கிழக்கு மாகாணத்தின் யோகராஜா இருக்கின்றார். 

தற்போது முன்னாள் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி விரைவில் பொதுச்சபையை கூட்ட போகிறேன் என்று கூறியுள்ளார். அவரால் அவ்வாறு செய்ய முடியாது. நாங்கள் தேர்தல் திணைக்களத்துக்கு புதிய நிர்வாகம் தொடர்பாகவும் கூட்டம் கூடியது தொடர்பான அறிக்கையையும் அனுப்பி வைத்துள்ளோம். இதனை குழப்பவே ஆனந்தசங்கரி விரும்புகிறார்.

தலைவரின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் அங்கே எதுவுமே அவ்வாறு நடப்பதில்லை.புதியவர்களை கொண்டுவந்து பொதுச்சபையில் போடவே ஆனந்தசங்கரி விரும்புகிறார். புதியவர்களை உள்வாங்கி பழையவர்களை பொதுச் சபையில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார். புதியவர்களை பொதுச்சபையில் இணைக்கமுடியாது. மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கூடி இவர்களை கட்சியில் இணைக்கலாமா என்று தீர்மானிக்க முடியும். அதன் பின்னரே பொதுக்குழுவில் இணைப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். தனியே ஆனந்தசங்கரி அவர்கள் தீர்மானிக்க முடியாது. அவர் சிபாரிசு செய்ய முடியுமே தவிர வேறு எதுவும் முடியாது.

அவர் செலவளிக்கும் கட்சிப் பணத்திற்கும் கணக்கில்லை. கட்சியிலிருந்து பழைய உறுப்பினர்கள் வெளியேற்ற முயற்சிக்கின்றார். இதன் மூலம் தன்னை யாரும் கேள்வி எழுப்பமாட்டார்கள் என அவர் நினைக்கிறார் போல. அது நடைமுறைச் சாத்தியமற்றது. 

நாம் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி எமக்கெதிராக ஆனந்தசங்கரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கின்றார். நிதி சம்பந்தமான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. கட்சியின் சொத்துக்களை கட்சியின் அனுமதியின்றி தன்னிச்சையாக விற்பனை செய்துள்ளார் என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணை பொருளாளர் த.திருஞானசம்பந்தர்,நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


No comments