உக்ரைனிலிருந்து 48 மணி நேரத்தில் வெளியேறவேண்டும் - அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை


உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா படை எடுக்கலாம் அதனால் 48 மணி நேரத்திற்குள் தனது நாட்டு மக்களை வெளியேற வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஷ்யாவின் படையெடுப்பு ஒரு வான்வழி குண்டு வீச்சுடன் தொடங்கலாம். இது அமெரிக்க குடிமக்கள் வெளியேறுவதை கடினமாக்கும். பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

உக்ரைனை விட்டு வெளியேறுமாறு பல நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளன. அவற்றில் இங்கிலாந்து, கனடா, நெதர்லாந்து, லாட்வியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை அடங்கும்.

எனினும் மேற்கத்திய நாடுகள் தவறான தகவல்களை பரப்புவதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரஷ்யப் படைகள் இப்போது ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடிய நிலையில் உள்ளன என்று கூறினார். 

எதிர்காலத்தை எங்களால் வெளிப்படையாகக் கணிக்க முடியாது. என்ன நடக்கப் போகிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் உடனடி ஆபத்து மற்றும் அச்சுறுத்தல் இருப்பதால் மக்கள் வெளியேறுவது விவேகமானது என்று அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய நடவடிக்கையின் போது சிக்கித் தவிக்கும் எந்தவொரு குடிமக்களையும் மீட்க அமெரிக்கப் படைகளை அனுப்ப மாட்டோம் என்று ஏற்கனவே அமெரிக்க அதிபர் பிடன் கூறியிருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

No comments