தமிழினத்தின் கரிநாள் மற்றும் 13 கூட்டுச்சதிக்கு எதிராக சுவிசில் நடைபெற்ற போராட்டம்!!

தமிழினத்தின் கரிநாள் மற்றும் 13ஆம் அரசியலமைப்பினை ஏற்கும் கூட்டுச்சதிக்கு எதிராகவும் சுவிசின் தலைநகரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றிருந்தது.

சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் என்பதனைப்  பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் மக்களாலும்  காத்திரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் சுவிஸ் நாட்டிலும் ஈழத்தமிழரின் அரசியற் தீர்வாக 13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச்சதிக்கு எதிராகவும், தமிழினத்தின் கரிநாளினை வேற்றின மக்களுக்கு எடுத்துரைத்து வெளிக்கொணரும் வகையிலும் கவனயீர்ப்பு நிகழ்வு 04.02.2022 அன்று பேர்ண் மாநிலத்தின் பிரதான தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள திடலில் முன்னெடுக்கப்பட்டது.

இக் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள்; சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கெதிரான கண்டனக் கோசங்களையும் பதாதைகளையும் தாங்கியவாறும்,  ஒற்றையாட்சிக்கெதிராகவும், இனவழிப்பிற்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், 13ம் திருத்தச் சட்டத்தை நிராகரித்தும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி கையெழுத்திட்டவர்களைக் கண்டித்தும் தமது எதிர்ப்புக்களையும், கோசங்களையும் வெளிப்படுத்தியிருந்ததோடு அது சார்ந்த துண்டுப்பிரசுரங்களை வேற்றின மக்களுக்கு வழங்கியும் முன்னெடுத்திருந்தனர்.

உலகெங்கும் தமிழ் மக்களால் முன்நகர்த்தப்படும் போராட்டங்கள் தமிழீழம் என்ற இலட்சியத்தை வெல்லும் வரை ஓயாது என்ற திடமான செய்தியை முரசறைந்து நிற்கிறது.

No comments