சுமந்திரன் அணி வென்றது?


தமிழக முதல்வரை யார் முதலில் சந்திப்பதென்ற விடயத்தில் சுமந்திரன் அணி வென்றுள்ளது. ஏற்கனவே டெலோ குருசாமி சுரேநதிரன் அணி இம்முயற்சியை முன்னெடுத்த நிலையில் சுமந்திரன் அணி வென்றுளளது. 

தமிழ் நாட்டின் முதலமைச்சராகி இன்னும் ஒருவருடம் கூட கழியாத நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தேகத்துக்கிடமின்றி தமது ஆளுமையைத் தமிழகத்திலும், உலகத் தமிழர் மத்தியிலும் வெளிக்காட்டியுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

கொரோனா வைரஸ் தொற்று நோயின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் பணியானாலும், சாதி மற்றும் பாலியல் பாகுபாடுகளைத் தகர்த்து மக்களின் வாழ்க்கைத் தரத்தினைப் பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் நோக்கத்தினைக் கொண்ட சமூக நீதி வேலைத்திட்டமாகிலும் சரி அல்லது 2030 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் ஆக மாற்றும் ஆணித்தரமான இலட்சியத்தினைச் செயற்படுத்துவதிலும் முதல்வர் ஸ்டாலின் இந்தியாவின் ஏனைய தலைவர்கள் பார்த்துப் பொறாமை கொள்ளும் ஒரு தலைவராக மிளிருகிறார்.

அண்மைக்காலத் தமிழ்த் தலைமைகளை விஞ்சி, "தமிழால் இணைவோம்" என்ற தொனிப்பொருளில் முதல்வர் ஸ்டாலின் உலகத் தமிழர்களிடையேயான பொதுமையையும், ஒருமையையும் மேம்படுத்துவதில் பல்வேறு அர்த்தமுள்ள பணிகளை முன்னெடுத்திருக்கின்றார்.

குடியுரிமை இல்லாத தமிழர்களின் நலன் மற்றும் புனர்வாழ்வு போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்திய ஒரு அமைச்சுப் பதவிக்கு கே. எஸ். மஸ்தான் போன்ற அர்ப்பணிப்பு மிக்க ஒருவரை நியமித்தமை, ஜனவரி 12ஆம் திகதியை உலகப் புலம்பெயர் தமிழர் தினமாக அறிவித்து அதனை முதலமைச்சர் ஸ்டாலினே அங்குரார்ப்பணம் செய்து வைத்தமை, சர்வதேச பல்கலைக்கழகங்களில் தமிழ்க் கல்வியை ஊக்குவிப்பதற்காக எடுத்த முயற்சிகளில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் டொரோண்டோ பல்கலைக்கழகம் போன்றவற்றில் தமிழ் இருக்கைகளை அமைப்பதற்கு வழங்கிய நன்கொடை போன்றவை இவரின் சீரிய பணிகளுக்கான சில உதாரணங்கள்.

இலங்கையின் வடக்கு, கிழக்கிலுள்ள மக்களைக் காத்திரமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உலகின் பல்வேறு நாடுகளிலும் இலங்கைத் தமிழர் நலன்களைப் பல்வேறு செயற்பாடுகள் மூலம் முன்னெடுத்து வரும் உலகத் தமிழர் பேரவையுமான நாங்கள் உலகத் தமிழ் மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கும் செழுமையான தலைமைத்துவம் நிமிர்த்தம் அவரில் உயர்ந்த மதிப்பு வைத்துள்ளோம்.

இலங்கையில் வாழும் தமிழர்களினதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களினதும் கண்ணோட்டத்தில் தற்போதைய தமிழ் நாட்டு அரசின் அணுகுமுறையானது போற்றுதற்குரியது. கடந்த மாதம் இடம்பெற்ற முதன் முதலான உலகப் புலம்பெயர் தமிழர் தினத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனும், கனேடியத் தமிழர் பேரவைத் தலைவர் சிவன் இளங்கோவும் பங்குகொள்ள அழைக்கப்பட்டமைக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். மேலும் ஜனவரி 29ஆம் திகதி கனேடியத் தமிழர் பேரவையினால் நடத்தப்பட்ட தைப்பொங்கல் திருவிழாவில் தமிழ் நாடு அமைச்சர் கே. எஸ். மஸ்தான் கலந்துகொண்டு சிறப்பித்ததும் மகிழ்ச்சிக்குரியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைத் தமிழர் அகதி முகாம்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய பின்வரும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவையும் முக்கியத்துவம் வாய்ந்தவையுமாகும். "அவர்கள் அநாதைகள் அல்ல, அவர்களுக்காக நாங்கள் இருக்கின்றோம். இனிமேல் அவை இலங்கைத் தமிழர் புனர்வாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும்” - இந்த அறிக்கையானது அவரது வாழ்க்கைத் தரத்தினை மேலும் உயர்த்தும் முகமாக ஒதுக்கப்பட்ட 317 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் அறுதியாக உறுதி செய்யப்பட்டது.

இத்தருணத்தில் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து விடுத்த அறிக்கைகளையும் நாம் நன்றியோடு நினைவு கூருகின்றோம்.

இலங்கைத் தமிழரின் போராட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கும் ஆதரவான நிலைப்பாடானது விசேடமாக அவரது மகத்தான தந்தை அமரர் கலைஞர் மு.கருணாநிதி உட்படத் தமிழ் நாட்டின் திராவிடத் தலைவர்கள் எடுத்த ஆதரவான நிலைப்பாட்டின் நீட்சியாகத் துலங்குகின்றது. இலங்கையிலுள்ள தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் தமிழ் நாட்டுத் தலைவர்களை வழிகாட்டலுக்கும், உதவிக்கும், ஒரு உத்வேகத்தைப் பெற்றுக்கொள்வதற்குமாக நாடி வந்துள்ளார்கள். நேரடியாகவும் இந்திய அரசினூடாகவும் அவர்கள் வழங்கிய உதவிகள் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய ஆற்றுத்துணையாக இருந்துள்ளது.

1983ஆம் ஆண்டுக் கலவரத்துக்குப் பின்னர் தமிழ் மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் மற்றும் அரசியல் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு மறைந்த கலைஞர் மு. கருணாநிதி வழங்கிய தலைமைத்துவத்தை நாம் என்றும் நன்றியோடு நினைவில் வைத்திருப்போம். முன்னாள் முதலமைச்சராக அவர் தன்னுடைய ஆளுமையைப் பன்படுத்தி இலங்கைத் தமிழ் மக்களின் வேணவாக்களான சமத்துவம், நீதி, சமாதானம், சுயமரியாதை மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களை உள்ளடக்கிய ஓர் அரசியல் தீர்வை அடையும்படிக்கான முன்னெடுப்புகளைப் பல இந்தியப் பிரதமர்களோடு செய்துள்ளார். இலங்கைத் தமிழ் மக்களிற்காகத் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலே தி.மு.க. உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்துள்ளார்கள். இலங்கைத் தமிழர் விவகாரத்தினைத் தொடர்புபடுத்தி 1991ஆம் ஆண்டு தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது உட்பட இந்திய ஒன்றியத்திற்குள்ளே பல்வேறு சவால்கள் இருந்த போதும் தி.மு.க. தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர் தொடர்பில் சாதகமான அணுகுமுறையைக் கையாண்டுள்ளமையை நாங்கள் மனங்கொள்கின்றோம்.

அண்மைக்காலமாகத் தமிழ்நாட்டுப் பிரதான திராவிட இயக்கங்களின் தலைவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியமான மற்றும் தரக்குறைவான சம்பவங்கள் தொடர்பில் நாம் மிக உன்னிப்பாகவும் கரிசனையோடும் உள்ளோம். இத்தகைய வருத்தத்திற்குரிய சம்பவங்கள் பாக்குநீரிணையின் இருபுறமுமுள்ள தீவிரபோக்குடைய, யதார்த்தமற்ற கொள்கைகளைக் கைக்கொள்பவர்களினால் நிகழ்த்தப்படுபவையாகும். கடந்த காலங்களில் நடந்த ஒவ்வொரு சம்பவத்தினையும் நெறிப்படுத்துவதில் அவர்களிற்கிருந்த வரம்புகளைப் புரிந்தவர்களாகப் பெரும்பான்மையான இலங்கைத் தமிழ் மக்கள் தமிழ்நாட்டுத் தலைவர்கள் வழங்கிய உதவிகளிற்கு நன்றியுள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். அத்தகைய புரிந்துணர்வு வலுப்பெற்று வருகின்றது, இது இரு சமூகங்களினதும், தலைவர்களினதும் பிணைப்பையும் ஒருவருக்கொருவரான மரியாதையினையும் பலப்படுத்தும்.

இலங்கையின் தமிழர்கள் மீண்டும் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளனர். போர் முடிவடைந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் பொருளாதார வாய்ப்புகள் மோசமாக உள்ளன. போர் தொடர்பான பொறுப்புக்கூறலின் முன்னேற்றமும் மிகச் சிறிய அளவிலேயே உள்ளது. பிராந்தியக் குடிப்பரம்பலை மாற்றும் நோக்குடன் அரச அனுசரணையுடன் இடம்பெறுகின்ற நடவடிக்கைகள் மற்றும் பரவலாகக் காணப்படும் இராணுவமயமாக்கலின் மத்தியில் தமது நிலத்தினையும் அடையாளத்தினையும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்பது என தமிழர்கள் பெருமளவில் தமது இருப்பினைத் தக்கவைப்பதற்கான சவால்களுக்கு முகம்கொடுக்கின்றனர். வரையப்பட்டு வருவதாகச் சொல்லப்படும் புதிய அரசியல் யாப்பானது தமிழர்களின் நிலையினை இன்னமும் பலவீனப்படுத்தலாம் - குறிப்பாக நேரடி இந்தியத் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட ஒரே அரசியல் யாப்புசார் அதிகாரப்பகிர்வு ஏற்பாடான மாகாண சபை முறைமையினை நீக்கவோ அல்லது பலவீனமடையச் செய்யவோ கூடுமென்ற அச்சம் காணப்படுகின்றது.

இத்தகையதொரு இக்கட்டான சூழ்நிலையிலேயே இந்தியா மற்றும் தமிழ் நாட்டின் நெறிகாட்டுதலையும் ஆதரவையும் நாம் எதிர்ப்பார்த்திருக்கின்றோம்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தங்களின் வரலாற்று அடிப்படையினாலான வாழ்விடப் பகுதிகளில் (வடக்கு மற்றும் கிழக்கு) ஒரு சுய ஆட்சியை விரும்புகின்றனர். மேலும், இந்த அதிகாரச் செழுமையானது இலங்கையில் தங்களின் சமமான குடியுரிமைக்கும், இத்தீவில் தங்களின் தனித்துவ அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் அடிப்படையானது என்றும் நம்புகின்றார்கள் - இது தமிழக மற்றும் இந்தியக் கொள்கை நோக்குகளுடன் ஒத்திசைவான நிலைப்பாடே.

இந்தியா இலங்கையின் மீது கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளதோடு சமத்துவம், நீதி, சமாதானம், கண்ணியம் மற்றும் அர்த்தமுள்ள அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான தமிழ் மக்களின் நியாயமான வேணவாக்களை நிவர்த்தி செய்யுமாறு இலங்கைக்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. 2021 மார்ச் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் காலகட்டம் உள்ளடங்கலாகப் பல சந்தர்ப்பங்களில், இலங்கையின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தமிழர்களின் வேணவாக்களை ஆதரிக்கும் அதன் இரு தூண் கொள்கைகள் போன்ற விடயங்களை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பான இந்தியக் கொள்கைகளை அமைப்பதில் தமிழ்நாடு எப்போதுமே முக்கியமானதொரு பங்கு வகித்து வந்துள்ளது. இந்தச் சூழலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பாதை வகுப்பதான மூலோபாயமான அணுகுமுறை நமக்கு மகத்தான ஆறுதலைத் தருகின்றது

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தப் பிரச்சினையில் தொடர்ந்து கவனம் செலுத்துவது இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நீண்ட கால அமைதி மற்றும் சுபீட்சமான வாழ்வுக்கு முக்கியமானதாகும். இது பாக்கு நீரிணையின் இருபுறமும் உள்ள தமிழர்களினதும் மற்றும் பரந்துபட்ட இந்திய நலனுடனும் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுமுள்ளது.

இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எப்போதும் விவேகமான நடைமுறையையும் ஒருமித்த அணுகுமுறையையும் கடைப்பிடித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகிய இரு அமைப்புக்களும் தமிழக அரசுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தவும், இந்திய அரசுடனான ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கின்றன" - என்றுள்ளது.


No comments