சுதந்திர தினம் அன்று போராட்டத்திற்கு அழைப்பு!!


இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ்மக்கள் கறுப்பு தினமாகவே அனுஸ்டிக்கவுள்ளோம். இதனையடுத்து எதிர்வரும் நான்காம் திகதி காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மற்றும் வடகிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருக்கின்றது. 

எனவே குறித்த போராட்டத்தில் இளைஞர் யுவதிகள், பல்கலைகழக மாணவர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள், தனியார் பேருந்து சங்கங்கள், தமிழ்த்தேசியத்தின் பால் செயற்பட்டு வருகின்ற கட்சிகள், மதகுருமார்கள் என அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு எமக்கான ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.                                  

தமிழினத்திற்கான சுதந்திரம் கிடைக்காத நிலையிலேயே நாம் இதுவரை போராடி கொண்டிருக்கின்றோம். நாம் எமது உரிமையை இழந்திருக்கின்றோம், உறவுகளை இழந்திருக்கின்றோம். 

எனினும் உணர்வுகளை இழக்ககூடாது. தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இது தலயாய கடமை என்பதை புரிந்துகொண்டு குறித்த போராட்டத்தில் ஒன்றிணைந்து கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம். நாம் அனைவரும்  ஒருமித்து குரல்கொடுத்தாலேயே எமது உரிமையையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு உளரீதியான ஆலோசனைகளை வழங்க தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் அண்மையில் தெரிவித்தார். நாங்கள் நன்றாகத்தான் இருக்கிறோம் எமக்கு மன உளைச்சல் இல்லை. எமது உறவுகள் கிடைக்கும்வரை நாம் சோர்ந்துபோய் ஒடுங்கிவிடமாட்டோம். 

எனவே எமது உறவுகளை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்.  எமக்கான நீதி கிடைக்கும்வரை நாம் உறுதியாக நின்று போராடுவோம் என்றார்.

No comments