காணாமல் போனோரைக் கடண்டறிய குடும்பங்களுக்கு உரித்து உள்ளது - ஹனா சிங்கர் ஹம்டி


பன்னிரண்டு வருடகாலத் துன்பம் இன்னமும் ஆறாமல் இருக்கின்றது. தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதுடன் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு வலியுறுத்துவதற்கான உரிமை காணாமல்போனோரின் குடும்பத்தினருக்கு இருக்கின்றது. 

எனவே உண்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதை முன்னிறுத்திய அவர்களது போராட்டத்திற்கு சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி வலியுறுத்தியுள்ளார்.

இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, அங்கு தமிழ் அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளைத் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். 

அத்தோடு யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியிருந்த அவர், ஐ.நா அலுவலகத்தின் ஊடாக அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்தார்.

இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர், யாழ்ப்பாணத்திலுள்ள ஐ.நா அலுவலக அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் ஒருமைப்பாடும் மிகச்சிறந்த முன்மாதிரியான செயற்பாடுகளாகும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பொருளாதார அபிவிருத்தி, தரமான கல்வி, நல்லிணக்கம், உளவியல் ரீதியான ஆதரவு, உரியவாறான மீள்குடியேற்றம் உள்ளடங்கலாக யாழ்ப்பாண மக்களுக்குப் பல்வேறு விடயங்கள் வழங்கப்படவேண்டியிருக்கின்றன என்று அதில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

'போரினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் துன்பத்தை வெளிப்படுத்துவதற்கு ஏதுவான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதும் அதனைப் பகிர்ந்துகொள்வதும் அவர்களை அதிர்ச்சியிலிருந்து மீளச்செய்வதற்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய மிகவும் அவசியமான காரணிகளாகும்' என்றும் தெரிவித்திருக்கக்கூடிய ஹனா சிங்கர், ஒட்டுமொத்த சமூகத்தினதும் நலனை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து வயதுப்பிரிவினருக்கும் அவசியமான உளவியல் ரீதியான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் வழங்கப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்

அதேவேளை காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் பதிவொன்றைச் செய்திருக்கும் அவர் பின்வருமாறு கூறியிருக்கின்றார்:

'பன்னிரண்டு வருடகாலத் துன்பம் இன்னமும் ஆறாமல் இருக்கின்றது. தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்கான உரிமையும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு வலியுறுத்துகின்ற உரிமையும் காணாமல்போனோரின் குடும்பத்தினருக்கு உள்ளது. தமது காயத்தை ஆற்றுவதற்கான தேவை அவர்களுக்கு இருக்கின்றது. 

இவ்வாறானதொரு பின்னணியில் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டிக்கொள்வதற்கான அவர்களது போராட்டத்திற்கு சமூகம் ஆதரவளிக்கவேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

நீதியமைச்சின் ஏற்பாட்டில் 'நடமாடும் நீதிக்கான அணுகல்சேவை' என்ற செயற்திட்டம் வடக்கில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருந்தனர். அதுமாத்திரமன்றி எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரைத் தமக்குச் சாதகமான முறையில் கையாளும் நோக்கிலேயே அரசாங்கத்தினால் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறானதொரு பின்னணியிலேயே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments