தமிழகத்தில் ரயில் முடக்க போராட்டம்!


தமிழக மீனவர்களை சிறை பிடிக்கும் இலங்கை அரசை கண்டித்தும், தமிழக மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக மீன் பிடி படகுகளை இலங்கை அரசு ஏலமிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய அரசை கண்டித்தும் இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடாத்தினர்.

15 நாட்களில் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தங்களது அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களையும் அவர்களது மூன்று விசைப்படகுகளையும், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும், தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வதை நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்களின் எதிர்ப்பை மீறி பல கோடி மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காததை கண்டித்துமே இன்று சென்னை ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து இன்று மாலை 4 மணியளவில் ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்பிடி அனுமதிச்சீட்டு அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையம் நோக்கிச் சென்று ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments