பீரிஸின் வாக்குறுதிகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட வேண்டாம் - சி.வி


இந்தியாவை தனது நட்பு நாடென காட்டிக்கொள்ளும் விதமாக, இந்தியாவிற்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இந்தியாவை ஏமாற்றும் இலங்கை அரசாங்கத்தின் மற்றுமொரு நடவடிக்கையாகவே இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இந்திய விஜயம் அமைந்துள்ளது. 

எனவே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வாக்குறுதிகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட வேண்டாம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட  இனப்படுகொலை குறித்து சுயாதீனமாக சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா நேரடியாக வலியுறுத்த முடியாவிட்டாலும் ஏனைய நாடுகளின் ஊடாக சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு உரிய இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இரண்டு நாட்களுக்கான இந்திய விஜயம் குறித்து 'டைம்ஸ் ஒப் இந்தியா' ஊடகம் சி.வி. விக்கினேஸ்வரனிடம் இணையவழி நேர்காணல் ஒன்றினை முன்னெடுத்திருந்த நிலையில் அவர் இந்த கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதானது.

இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்திய விஜயமானது, இந்தியாவை ஏமாற்றும் இலங்கை அரசாங்கத்தின் மற்றுமொரு நடவடிக்கையாகும். இந்தியாவை தனது நட்பு நாடென காட்டிக்கொள்ளும் விதமாக, இந்தியாவிற்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் இந்தியா தலையிடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த விஜயம் அமைந்துள்ளது. 

அதேபோல் இலங்கையில் சீனாவின் விருப்பத்தை முன்னெடுக்கும் கொழும்பின் தீர்மானங்களில் இந்தியா ஆத்திரப்படாமல் இருப்பதற்காக அதற்கான சமாதானப்படுத்தல்களை முன்னெடுக்கும் விதமாகவும் இந்த விஜயம் அமைந்துள்ளது. இதுவே இலங்கையின் திட்டமாகும். தமிழ் மக்களாகிய எமக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட இந்தியாவிற்கு கடந்தகாலத்தில் வழங்கப்பட்ட எந்தவொரு  வாக்குறுதியையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இந்திராகாந்திக்குப் பிறகு தோல்வியடைந்துள்ளது என்பதை வருத்ததுடன் கூறிக்கொள்கின்றேன்.  இதனாலேயே இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கவும் காரணமாக அமைந்துள்ளது.

எவ்வாறிருப்பினும்,இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. தனிப்பட்ட முறையிலும் அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் குஜராத் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் நான் அங்கு சென்றிருக்கிறேன், அப்போது அவரது செயற்பாடுகளில் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவர் இலங்கையின் பொய்யான வாக்குறுதிகளை நம்பாமல், இலங்கை தொடர்பில் மிகவும் கவனமாக தீர்மானம் எடுப்பார் என நம்பிகிறேன். 

இலங்கையில் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை தொடர்ச்சியை உறுதிப்படுத்த இந்திய பிரதமர் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்தியாவினால் எவ்வளவு தூரத்திற்கு எமது அதிகாரங்களை பலப்படுத்த முடியுமோ அதுவே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் கைகொடுக்கும். 

எனவே, எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் மூலம் எனது ஒரே எதிர்பார்ப்பு, பேராசிரியர் பீரிஸின் பேச்சுத்திறனைக்கண்டு இந்தியா ஏமாந்துவிடக்கூடாது என்பதுதான்.

நாங்கள் இந்தியாவிடம் அதிகம் எதையும் கேட்கவில்லை, ஏனென்றால் இந்தியா வழங்கிய 13வது திருத்தம் நமது அரசியலமைப்பில் உள்ளது, இது அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட இந்தியாவே காரணமாகும். 

1987ல் இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் தமிழர்களாகிய நாம் கையொப்பமிடவில்லை மாறாக எங்களின் சார்பாக இந்தியாதான் கையெழுத்திட்டது என்பத்தை மறந்துவிடக்கூடாது. இந்நிலையில் இலங்கை அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முயற்சிகளை முன்னெடுக்கின்றது. அதில் 13 ஆம் திருத்தத்தை முற்றுமுழுதாக நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. 

ஆகவே 13 ஆம் திருத்தத்தை புதிய அரசியல் அமைப்பில் இருந்து எவ்வாறு நீக்க முடியும் என்பதை கேட்கும் அதிகாரமும் அதற்கான தார்மீக கடமையும் இந்தியாவிற்கு உள்ளது.

அதுமட்டுமல்ல, இலங்கையில் சீனாவின் உள்நுழைவுடன், இந்தியாவிற்கு முன்பை விடவும் அதிகளவான கவலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக  வடமாகாணத்தில் உள்ள மூன்று தீவுகள் இந்தியாவிற்கு மிக அருகில்  அதாவது 52 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. அந்தத் தீவுகளில் மின்சாரம் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சீனா முயற்சித்து வருகிறது. இந்த செயற்பாடுகளை இந்தியா சாதரணமாக கருதி வேடிக்கை பார்க்க முடியாது. 

எனவே, எம்மை பாதுகாக்கவும், எமக்கு உதவுவதும் இந்தியாவின் சொந்த நலன்களையே பாதுகாக்கும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களைப் பாதுகாப்பதன் மூலம், இந்தியா தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும் இவ்விரு மாகாணங்களின் தமிழர்களாகிய நாம், சீனாவுக்கு மாறாக இந்தியாவுக்கு மிகவும் சாதகமாக இருப்போம் என்பதில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும். 

இலங்கை அரசாங்கம் பல வழிகளில் சீனர்களை கவர்ந்திழுத்து, ஏற்கனவே தென்னிலங்கையில் 15,000 ஏக்கர் நிலப்பரப்பை சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கியுள்ள நிலையில், இந்தியா இனியாவது மிகக்கவனமாக செயற்பட வேண்டும்.

எமது சகல பிரச்சினைகளையும் 13 ஆம் திருத்தத்தின் மூலமாக மட்டுமே தீர்க்கப்போவதில்லை. ஆனால், தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசை கேள்வி கேட்க இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வழிமுறை இதுவேயாகும். அது தவிர, அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விடயங்கள் கவனத்தில்கொள்ளப்பட வேண்டும். 

குறிப்பாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசங்களில்  சிங்களவர்களை அனுமதித்து புதிய குடியேற்றங்களில் ஏற்படுத்தி, வடக்குகிழக்கு மாகாணங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றது என்பதே உண்மையாகும். 

இப்போதைய ஒற்றையாட்சி அரசியலமைப்பு அனைத்து அதிகாரங்களையும் மத்திக்கு கொண்டு சேர்க்கின்றது.ஆகவே தான் சமஷ்டி அரசியல் அமைப்பின் மூலமாக அதிகாரங்களை பகிர முடியும். எமது கடிதத்தில் இதனையே நாம் முன்வைத்துள்ளோம்.

மேலும், பிளவுபட்ட நாடாக அல்லாது ஒன்றிணைந்த நாட்டில் வாழவேண்டும் என்பதையே தேர்தலில் வெற்றி பெற்ற எமது சகல கட்சிகளும் கேட்கின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் நாம் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கொள்கைக்கு திரும்பப் போவதில்லை. 

உண்மையில், இலங்கையின் வடக்கு அல்லது கிழக்கில் விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கான அறிகுறியே தென்படவில்லை. நாம் கேட்கும் சமஷ்டி அலகு என்பது தனி நாடு என அர்த்தப்படாது. வடக்கு மற்றும் கிழக்கில் அதிக அதிகாரப் பகிர்வை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் நாங்கள் தனி நாட்டையே கேட்கின்றோம் என்பதையே இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக கூற முற்படுகின்றது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட  இனப்படுகொலை குறித்து சுயாதீனமாக சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையே  2009 ஆம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அப்போது, இராணுவத்தில் இருந்த எனது நண்பர்கள், எமது அப்பாவி மக்களை சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து எமக்கு தகவல் கொடுத்தனர். 

அதேபோல் அயல் நாடான இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை முன்னெடுக்க  ஆதரிப்பதில் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய சங்கடத்தை என்னால் விளங்கிக்கொள்ள முடிகின்றது. ஆனால் இந்தியாவினால் இந்த விடயத்தை நேரடியாக வலியுறுத்த முடியாவிட்டாலும் ஏனைய நாடுகளின் ஊடாக சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு உரிய இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க முடியும். 

அதனை செய்யவும் வேண்டும்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை தொடர்பில் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கண்டிப்பாக இந்தியா ஆதரிக்க வேண்டும்.

மிக முக்கியமாக, இலங்கைத் தமிழ் மக்களின் வடக்கு மற்றும் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களுக்காக எமது நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்படுவதை நிறுத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இந்தியா அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கின்றேன். 

இவ்வாறான ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமன்றி இந்தியாவிற்கும் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையும். ஆகவே இவற்றை தடுக்க இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர், எஸ். ஜெய்சங்கர் எங்களின் நண்பர். அவர் இங்கே இருந்தார், இந்த விடயங்களை எல்லாம் நன்கு அறிந்தும் இருந்தார். ஆகவே இந்தியா எமக்கு உதவும் என நாம் நம்புகின்றோம் என அவர் கூறியுள்ளார். 

No comments