தனிப்பட்ட ரீதியில் நினைவுகூர அனுமதி :பிச்சை போடுகின்றது இலங்கை!



இலங்கையில் பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்றும், எனினும், போரின்போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்க முடியும் என்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

முந்தைய மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களினது தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை, உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸால் நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.


மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் அதுபோன்ற கடுமையான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது ஏனைய குழுக்கள் கண்டறிந்த தகவல்கள் தொடர்பான விசாரணைகள், ஆராய்ச்சிகள் மற்றும் அறிக்கையிடல்கள் அல்லது உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக, ஜனாதிபதியால் 2021 ஜனவரி 21ஆம் திகதியன்று, உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.


அந்த ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை, 2021 ஜூலை 21ஆம் திகதியன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.


போருக்கு முகங்கொடுத்த மற்றும் அது தொடர்பான அனுபவங்களைக் கொண்ட யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வசிக்கும் 75 பேர் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையிலான பரிந்துரைகள் அடங்கிய 107 பக்கங்களுடன் இந்த இரண்டாவது அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


2015ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு கண்டறிந்த விடயங்களை உடன் விசாரித்து, அது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது நட்டஈடு வழங்கவோ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


பொருளாதார ரீதியில் தலைநிமிர அரசின் உதவி அவசியம் என்று ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ள நபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் ஆணைக்குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.


பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்றும், போரின்போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்க முடியும் என்றும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.


அத்துடன், ஜூன் மாதத்துக்குள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க முடியும் என்று அதன் தலைவரும் உயர்நீதிமன்ற நீதியரசருமான ஏ.எச்.எம்.டீ.நவாஸ் குறிப்பிட்டார்.


ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்வும் இதன்போது பங்கேற்றிருந்தார்.

No comments