இயலாமையைப் பயன்படுத்தி இழப்பீடு வழங்குவது வெட்கத்துக்குரியது - மன்னிப்புச்சபை


காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆராய்ந்து, அவ்வாறான சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களைக் கண்டறிவதற்குப் பதிலாக காணாமல்போனோரின் குடும்பங்களின் இயலாமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு முற்படுகின்ற அரசாங்கத்தின் நடவடிக்கை வெட்கத்திற்குரியதாகும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. 

நீதியமைச்சின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வரை வடக்கில் நடமாடும் நீதிக்கான அணுகல்சேவை முன்னெடுக்கப்பட்ட நிலையில், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இரண்டாம்நாள் செயற்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நீதியமைச்சர் அலிசப்ரி, காணாமல்போனோர் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி தனக்குப் பிரத்யேகமாக ஆலோசனைகளை வழங்கியிருப்பதாகவும் யார், என்ன காரணத்திற்காகக் காணாமல்போனார்கள் என்பதை விடவும் அவ்வாறு காணாமல்போனோரின் குடும்பத்தினருக்கு அவசியமான நட்டஈடு உள்ளிட்ட ஏனைய உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

அதுமாத்திரமன்றி மரணச்சான்றிதழை வழங்கி இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு ஜனாதிபதி கூறியிருப்பதாகவும் நீதியமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் அமைச்சர் அலிசப்ரியினால் வெளியிடப்பட்ட கருத்தை மேற்கோள்காட்டி சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய செயற்பாட்டாளர் த்யாகி ருவன்பத்திரண அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆராயாமல், அவ்வாறான சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களைக் கண்டறியாமல் காணாமல்போனோரின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் தற்போது முகங்கொடுத்திருக்கக்கூடிய இயலாமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு முற்படும் அரசாங்க அமைச்சர்களின் நடவடிக்கை வெட்கத்திற்குரியதாகும் என்று அவர் அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இழப்பீட்டிற்குப் பிரதியுபகாரமாக காணாமல்போனோரின் தாய்மாருக்கு இறப்புச்சான்றிதழ் வழங்கப்பட்டதா? இதற்குப் பதிலாக 'காணாமல்போனமைக்கான சான்றிதழை' பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவது பற்றி அவர்களுக்குக் கூறப்பட்டதா? அவர்கள் இடைக்கால நட்டஈட்டைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களா? அவர்களுக்கான உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை வழங்குவதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றதா? என்றும் த்யாகி ருவன்பத்திரண கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments