போராட்டத்தை கைவிடப்போவதில்லை!
இந்திய மீனவர்களது அத்துமீறலை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி வடமராட்சி மீனவர்கள் முன்னெடுத்து வரும் சாலை மறியல் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 2வது நாளாகவும் தொடர்கிறது.

எல்லைதாண்டி வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களால் தினம் தினம் சொத்தழிவுகளை சந்தித்துவரும் நிலையில் தற்போது உயிரிழப்புகளையும் சந்திக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலை தொடர்பில் அரச தரப்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பலதடவை தெரியப்படுத்தியும் இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாக இந்த துயரம் தொடர்கதையாகி வருகிறது.

இத்துயரத்திற்கு நிரந்தர தீர்வாக இந்திய மீனவர்களது அத்துமீறலை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்கு மீனவர்களால் நேற்று (ஜன-31) முதல் சாலை மறியல் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வடமராட்சி பருத்தித்துறை முதல் கடற்கரை வீதியூடான சாலை போக்குவரத்தை முற்றாக தடைசெய்து சாலை மறியல் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்றைய தினம் (பெப்-01) 2வது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வாக்குறுதிகளை நம்பி எமது போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை என்றும் இந்திய மீனவர்களது அத்துமீறலை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கையினை எடுத்து எமது கடல் வளத்தையும், வாழ்வாதாரத்தையும், உயிர்களையும் பாதுகாக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களது இக்கவனயீர்ப்பு போராட்டத்தின் மூலம் பருத்தித்துறை கடற்கரை வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments