சிங்கள கிராமங்கள் வவுனியாவுடன் இணைப்பு!

 


அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில் அதற்கான அனுமதி கோரிய பத்திரம் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

2015 இல் இருந்து 2019 வரையும் வடக்கு கிழக்கில் இடம்பெறவிருந்த சிங்கள குடியேற்றங்களை நாம் தடுத்து நிறுத்தியிருந்தோம். எனினும் 2019 நவம்பர் மாத்திற்கு பிற்பாடு வட மாகாணத்தில் வவுனியா முல்லைத்தீவில் தென் பகுதியில் இருந்து சிங்கள மக்கள் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டு வருகின்றனர். வுடக்கில் தமிழர்களின் விகிதாரசாத்தினை மாற்றியமைப்பதற்காக இது மிக தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

இந்த குடியேற்றத்தினை இரண்டு வகையாக மேற்கொள்கின்றனர். அதாவது இங்குள்ள அரச காணிகளில் தென்பகுதியில் இருந்து கொண்டு வந்து குடியெற்றுவது. மற்றையது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு அனுராதபுரம் மாவட்டத்துடன் உள்ள கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைப்பதாக உள்ளது.

அண்மையில் போகஸ்வௌ கிராமத்திற்கு ஜனாதிபதி வந்தபோது திட்டமிட்டு கெப்பிட்டிகொல்லாவையில் உள்ள கிராமத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு செல்வது கடினம் எனவும் வவுனியா நகரத்திற்கு செல்வது இலகு என்பதால் தமது கிராமங்களை வவுனியாவுடன் இணைத்து விடுமாறு பிரதேசசபை உறுப்பினரொருவரால் கூறப்பட்டிருந்தது. 

இதன் பிரகாரம் அண்மையில் வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் அனுராதபுரம் கெப்பிட்டிகொல்லாவ பிரதேச செயலகத்தின் கனகவௌ என்ற கிராம சேவகர் பிரிவையும் பதவிய பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கம்பெலிய என்ற கிராம சேவகர் பிரிவையும் முழுமையாக வவுனியா மாவட்டத்துடன் இணைப்பதற்கான அனுமதி பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக நாம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல்கொடுத்து வருகின்றோம் என தெரிவித்தார்.

No comments